Published:Updated:

பிளாஸ்டிக் தடை - தமிழக அரசுக்கு நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்

பிளாஸ்டிக் தடை - தமிழக அரசுக்கு நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்
பிளாஸ்டிக் தடை - தமிழக அரசுக்கு நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 05.06.2018 அன்று பிளாஸ்டிக் ஷீட், கப், தட்டு, பை உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு வருகிற 01.01.2019 முதல் தடை என சட்டசபையில் அறிவித்தார். அதற்கான அரசாணையையும் 25.06.2018 அன்று தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையால் சுமார் 15,000 சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும், சுமார் 5,00,000 பேர் வேலையிழப்பார்கள் என்றும் இதை எதிர்த்து வருகிற 18-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் தடை - தமிழக அரசுக்கு நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்

இதுதொடர்பாக, சென்னை செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன், “தமிழகத்தில் வருகிற 01.01.2019 முதல் ஒருசில பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை என 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். 25-ம் தேதி அதற்கான அரசாணையும் வெளிவந்தது. அந்த அரசாணை மிகுந்த அதிர்ச்சியைச் சிறு, குறு பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தயாரிக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை மட்டும் தடைசெய்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களுக்கு ஏன் தடை? என்ற கேள்விக்கு இன்றுவரை அரசாங்கம் எந்தப் பதிலும் கூறவில்லை. இந்த அரசாணையிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம் தமிழக அரசின் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அல்ல, மாறாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதுதான். உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி பன்னாட்டு நிறுவனங்களை அதிக சலுகைகளுடன் வரவேற்கும் அரசாங்கம் உள்நாட்டுத் தொழிலாளர்களை ஒருதலைபட்சமாக நடத்துகிறது. 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் கழிவுகளை எரிபொருளாக, மின்சாரம் தயாரிக்க, பிளாஸ்டிக்-தார்ச்சாலைகளை அமைக்க என்று மண்ணோடு மண்ணாகப் போகும் வரை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், தடைசெய்யப்படாத பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

2017- 2018-ல் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சட்டசபையில் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 50,000 சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார். அதேபோல இந்தத் தடையை அமல்படுத்தினால் ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்படும். 04.06.2018 வரை இந்தத் தொழிலுக்கான எல்லா அனுமதியும் கொடுத்துவிட்டு 05.06.2018-ல் தடை விதித்தால் எந்த நம்பிக்கையில் தமிழ்நாட்டில் தொழில் நடத்தமுடியும். பலகோடி மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் இயந்திரங்களைக்கூட எடைக்குத்தான் போட வேண்டும்.

பிளாஸ்டிக் தடை - தமிழக அரசுக்கு நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்இந்தியாவில் பிளாஸ்டிக் 55% மேல் உற்பத்தியாவது குஜராத் மாநிலம். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 60% பிளாஸ்டிக் வெளிமாநிலத்திலிருந்து தான் இறக்குமதியாகிறது. சுற்றுச்சூழல் பிரச்னை என்றால் அங்குத்தானே முதலில் தடை செய்ய வேண்டும். பிரதமர் முன்மாதிரியாக இதைச் செய்யலாமே. ஒரே நாடு, ஒரே வரி என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே கொள்கை கிடையாதா? பிளாஸ்டிக் தடையில்லாத அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் இதர மாநிலங்களுக்குத் தமிழகத்தில் பிளாஸ்டிக் சந்தை முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. 

தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரிவருவாய் மற்றும் மின்சார வாரியத்துக்கு சுமார் 2,000 கோடி இழப்பும் இதன்மூலம் ஏற்படும். தமிழக அரசின் நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம். அதுமட்டுமல்ல ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தத் தடையால் 5 லட்சம் பணியாளர்கள் வேலையிழப்பர், அவர்களைச் சார்ந்து இருக்கும் 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுவர். 

பிளாஸ்டிக் தடை - தமிழக அரசுக்கு நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்

இந்தத் பிரச்னைகளை எல்லாம் பலமுறை கடிதங்கள் மூலமாக, பத்திரிகை, தொலைக்காட்சி மூலமாக முதல்வருக்குத் தெரிவித்தும் எந்தப் பதிலும் இல்லை என்பதாலும், மத்திய அரசு பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமாக இறுதிக் கொள்கை முடிவு எடுத்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்வரை தமிழகத்தில் தற்போது அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடையைத் தமிழக முதல்வர் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 18.12.2018 அன்று சேப்பாக்கம் மைதானம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.

இந்தியாவிலேயே எளிமையாகச் சந்திக்கக்கூடிய முதல்வர் நான் எனச் சொல்லியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினரை இன்னும் சந்திக்காமல் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.