Published:Updated:

``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்!

சி.வெற்றிவேல்
``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்!
``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்!

சென்னை விமான நிலையத்துக்கு எதிரே அமைந்திருக்கும் மேம்பாலத்தில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, அங்கே இருந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்றாலும், விமான நிலையத்துக்கு முன்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் உண்டானது. 

தீப்பிடித்து எரிந்த காரின் ஓட்டுநர், விண்ட்ஷீல்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக ஈக்காட்டுத்தாங்கலிலிருந்து சென்றுகொண்டிருந்தார். விமான நிலையம் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென இன்ஜின் இருக்கும் பகுதியிலிருந்து கரும்புகை வெளிவரத் தொடங்கி இருக்கிறது. கரும்புகையைப் பார்த்ததும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநர் காரிலிருந்து வெளியேறுவதற்குள், கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கார் கதவுகளின் லாக், ஆட்டோமேட்டிக்காக என்கேஜ் ஆகிக்கொண்டன! இதனால் காருக்குள் மாட்டிக்கொண்ட ஓட்டுநர், பின்பக்கக் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து வெளியேறி, கடும் போராட்டத்துக்குப் பிறகே உயிர் பிழைத்தார். கார் தீப்பிடித்ததும் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், தீயணைப்பு வண்டி வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

காரிலிருந்து தப்பிய கார் ஓட்டுநர், ``பத்து நிமிஷத்துக்கும் மேல தீப்பிடிச்சு எரியும் காருக்குள்ள மாட்டிக்கிட்டேன். சுத்திலும் ஐம்பது பேருக்கும் மேல நான் கதவ தட்டினதை வேடிக்கதான் பார்த்தாங்க. ஆனா, யாரும் வந்து கார் கதவ ஒடச்சி என்னைய காப்பத்த முயற்சி செய்யல" என்று வருத்தத்துடன் கூறினார். தீப்பிடித்து எரிந்த காரின் மதிப்பு 16 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.