Published:Updated:

``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா?” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்

``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா?” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்
``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா?” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான பல விமர்சனங்களை அடுக்கியுள்ளார். அவர் முதிர்ச்சியற்ற கருத்துகளை பேசுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார் கம்பீர். 

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர், தன் ஓய்வு முடிவை அறிவித்ததில் இருந்து, பல்வேறு அதிரடியான கருத்துகளை தெரிவித்து வருகிறார். வெவ்வேறு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வரும் அவர், தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாகப் பேசி வருகிறார். முன்னதாக 2012-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் செயல்பாடு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன் வைத்திருந்தார். 

தற்போது அவர் விமர்சித்திருப்பது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை. கிரிக்கெட் நெக்ஸ்ட் ஊடகத்தில் அவர் பேட்டி அளித்தபோது,  `கடந்த 10-15 ஆண்டுகளில்  தற்போதைய இந்திய அணிதான் வெளிநாடுகளில் விளையாடுவதில் சிறப்பான அணி’ என்று ரவி சாஸ்திரி தெரிவித்த கருத்து குறித்துக் கேட்கப்பட்டது. ரவி சாஸ்திரி கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி 1-4 என தோல்வி அடைந்த பின்னர் இந்தக் கருத்தைப் பதிவு செய்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய கம்பீர்,  ``இதுவரை கிரிக்கெட் வாழ்க்கையில் எதையும் சாதிக்காதவர்கள்தான் இப்படியான கருத்துகளைச் சொல்ல முடியும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்றியதைத் தவிர ரவிசாஸ்திரி என்ன சாதித்தார். வெளிநாடுகளில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் அவருக்கு எந்தப் பங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எதையுமே செய்யாமல், இதுபோன்று கருத்து தெரிவிப்பதை என்னவென்று சொல்ல?

மக்கள் இதை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். அவர் போதுமான அளவுக்கு கிரிக்கெட் பார்ப்பதில்லை என நினைக்கிறேன். அப்படிப் பார்த்திருந்தால், அந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்க மாட்டார். 

அவரின் அந்தக் கருத்து குழந்தைத் தனமானது. அந்தத் தொடரை, இந்தியா 4-1 என வென்றிருந்தாலும் அந்தக் கருத்தைச் சொல்லிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட வெற்றியிலும் அமைதி காக்க வேண்டும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இன்னும் எங்களை அதிக வெற்றிக்குத் தயார் செய்துகொள்வோம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது கருத்தை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது, முதிர்ச்சியற்ற கருத்து” எனக் கடுமையாக சாடினார். 

கம்பீர் தன் ஓய்வு முடிவை அறிவித்த நாள் முதல் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில்,  ``தனது மனதில் பட்டததைத்தான் கூறுகிறேன். இதயம் சொல்வதுபடி நடந்தால், ஒரு தெளிவு கிடைக்கும். அதைத்தான் நான் செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.