Published:Updated:

``3,10,000 தற்கொலைகள் என்பது வேறெங்குமே நடக்காதது!" - விவசாயிகளின் வேதனையை விளக்கும் சாய்நாத்

விவசாயிகள் செருப்பில்லாத காரணத்தால் செல்லோ டேப்பைச் சுற்றி தங்கள் பாதங்களை மறைத்திருந்தனர். அதை உரிக்கும்போது பாதங்கள் முழுக்க இரத்தம் தோய்ந்திருந்தது.

``3,10,000 தற்கொலைகள் என்பது வேறெங்குமே நடக்காதது!" - விவசாயிகளின் வேதனையை விளக்கும் சாய்நாத்
``3,10,000 தற்கொலைகள் என்பது வேறெங்குமே நடக்காதது!" - விவசாயிகளின் வேதனையை விளக்கும் சாய்நாத்

ற்போது நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கும் காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீதான திருப்தியின்மையாக இருந்தாலும் மிக முக்கியமான காரணம் விவசாயப் பிரச்னைகள்தாம். விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட உறுதி செய்யாத அரசின் மெத்தனப்போக்கின் மீது விழுந்திருக்கும் அடிதான் இந்தத் தேர்தல் முடிவுகள். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தப் பிரச்னைகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ``கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் விவசாயிகளை முற்றிலுமாக மறந்துவிட்டோம். இப்போதாவது நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரமிது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயப் பிரச்னைகளை அணுகிவரும் செயற்பாட்டாளரான சாய்நாத். பூவுலகின் நண்பர்கள் இயக்கமும் சென்னைப் புதுக் கல்லூரியின் சமூகவியல் துறையும் இணைந்து நடத்திய இரண்டு நாள் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் விவசாய நெருக்கடிகள், பிரச்னைகள் குறித்து சாய்நாத் பேசினார். அவரது உரையிலிருந்து,

``விவசாய நெருக்கடி, விவசாயிகளின் பிரச்னை என்பது இன்று நேற்று ஏற்பட்ட விஷயமில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் மிகப்பெரிய கவனிக்க மறுக்கப்படுகிற பிரச்னை. ஆனால், திடீரென சில நாள்களில் அனைத்து ஊடகங்களும் விவசாய நெருக்கடியைக் கண்டறிந்து பேசுகின்றன. தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தைக் கொடுத்திருப்பதால் ஊடகங்கள் இவற்றைத் திடீரெனப் பேசுகின்றன. சில நாள்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணியில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டனர். மேகாலயாவிலிருந்து தமிழ்நாடு வரை என இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக சிதறிக் கிடக்கும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். இந்தப் பேரணியில் புதிய பரிமாணங்களை, புதிய சாத்தியக்கூறுகளைக் கூர்ந்து பார்க்க முடிந்தது. டெல்லியில் முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர வர்க்கத்து மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். விவசாயிகளுடன் கைகோத்து தோளுக்குத் தோள் தாங்கி பேரணியை எடுத்துச் சென்றனர் மாணவர்கள். விவசாயிகளைப் போன்றே மாணவர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முக்கியமாக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்துதான் இந்த மாணவர்கள் வந்துள்ளனர். அந்த நேரத்தில் மாணவர்கள் பேரணியில் கலந்து கொள்வது உண்மையில் கடினமான விஷயம்தான். ஏனென்றால் பேரணி நடந்த நவம்பர் கடைசியில்தான் அவர்களுக்கான பருவத்தேர்வும் தொடங்கியிருந்தது. இருந்தாலும் களத்துக்கு வருவதில் மாணவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.

மாணவர்கள் அனைவரும் தத்தமது மாநிலத்தின் விவசாயிகளுக்கு உதவியாக இருந்தனர். இரவு முழுவதும் விவசாயிகளுடன் பேரணியில் இருந்துவிட்டு காலையில் ஓடிச்சென்று தேர்வுகளை எழுதிவிட்டு மீண்டும் பேரணிக்கு வந்தனர். கடந்த 40 வருடங்களில் டெல்லியில் இப்படியான வரலாற்றை நான் பார்த்ததில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் இளங்கலை மாணவர்கள்தாம். அவர்களில் ஒரு மாணவி எல்லா மாணவர்களையும் ஒருங்கிணைத்து நேர்த்தியாக அவர்களை வழிநடத்தினாள். ஆனால், அவளுக்கு வயது வெறும் 19 என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன். ஆச்சர்யம். மாணவர்கள் உட்பட அனைவரும் கருத்தியல்ரீதியாக ஒன்றிணைந்து வந்தார்கள். விவசாயிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நமது நாட்டின் மாணவ சமுதாயம்தான் விவசாயிகளுடன் நெருக்கமான தொடர்புடையது. ஏனென்றால் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கிராமங்களில் விவசாயிகளாக இருப்பவர்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் சில ஐ.டி இளைஞர்களைச் சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலானோரின் பெற்றோர் விவசாயிகள்தாம். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வறட்சி குறித்து ஊடகங்களில் காண முடிவதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுகுறித்தும் நமக்குத் தெரிவதில்லை. இந்த இடைப்பட்ட தொடர்பை நிரப்ப வேண்டிய ஊடகங்கள் ஏழை மக்கள் மீது கவனம் செலுத்தாது. வறட்சிக்கும் மாணவர்களுக்கும்கூட தொடர்பு இருக்கிறது. தற்போது பல்வேறு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தனியாரிடம்தான் அதிகம் உள்ளன. அங்குப் பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகி வருகிறது. ஏனென்றால் நிறைய மாணவர்களால் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடிவதில்லை. இடைநிற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விவசாயிகளாகத்தான் இருக்கின்றனர். வறட்சியால் விற்பதற்குப் பயிர் இல்லை; கட்டணத்திற்குக் காசில்லை. நடுத்தர, ஏழை வர்க்கத்து மாணவர்கள் மட்டுமல்ல உயர் வர்க்க மாணவர்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

இத்தகைய மாபெரும் பேரணிக்கெல்லாம் முன்னோட்டமாக, தன்னம்பிக்கையாக அமைந்தது மார்ச் மாதம் நடைபெற்ற விவசாயிகளின் மும்பை பேரணி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 40,000 பழங்குடியின விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை வரை வரலாற்றுச் சிறப்புடைய பேரணியை நிகழ்த்திக் காட்டினர். அனைத்திந்திய கிசான் சபா எனும் கூட்டமைப்பின் கீழ் மார்ச் 6-ம் தேதி நாசிக்கிலிருந்து பேரணியைத் தொடங்கினார்கள் விவசாயிகள். ஆறு நாள்களில் 1082 கிலோ மீட்டர் நடந்து மார்ச் 12-ம் தேதி காலை மும்பையை அடைந்தனர். 38 டிகிரி செல்சியஸிலிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை இருந்த அந்த வெயிலில் வெறும் கால்களில் நடந்தனர் விவசாயிகள். அது ஓர் அற்புதமான பயணம். முதல் நாள் நாசிக்கிலிருந்து கிளம்பும்போது வெறும் 3,000 பேர் மட்டுமே இருந்தனர். நாசிக் நகரத்தைத் தாண்டி வெளியே வரும்போது அந்த எண்ணிக்கை 12,000 ஆக மாறி இருந்தது. அடுத்த 100 கிலோமீட்டரில் 20,000 விவசாயிகள் பேரணியில் இணைந்தனர். மும்பையை அடையும்பொழுது 40,000 விவசாயிகள் இருந்தனர். முதல் மூன்று நாள்களுக்குத் தேசிய ஊடகங்களும் உள்ளூர் ஊடகங்களும் பேரணியைப் புறக்கணித்தன. ஆனால் விவசாயிகளின் மாபெரும் திரள் ஊடகங்களை அதுவாகவே உள்ளிழுத்தது. விவசாயிகள் நடந்துவந்த பாதை முழுக்க மலைப்பாதை. ஏற்றங்களும் இறக்கங்களும் பள்ளங்களும் கூட இருக்கும். அவர்களை வழிநடத்திய விவசாயி அஜித் தாவ்லே, மரத்தின் மீது ஏறி எடுத்த புகைப்படம்தான் 40,000 விவசாயிகளின் போராட்டத்தை உலகுக்குக் கொண்டு சென்றது. அதன்பிறகே ஊடகங்களும் வந்தன. பேரணியின் ஐந்தாம் நாள் மார்ச் 11 ம் தேதி இரவு மும்பைக்கு அருகில் வந்து சேர்ந்தனர் விவசாயிகள். இரவு அங்கே ஓய்வெடுத்துவிட்டு காலையில் மும்பையில் ஆசாத் மைதானத்துக்கு நடைப்பயணமாகச் செல்வதுதான் அவர்களது திட்டம்.

ஆனால், இரவிலேயே அங்கிருந்த பெண் விவசாயிகளும், ஆண்களும் முக்கியமான முடிவை எடுக்கிறார்கள். காலையில் நடக்கப்போவதில்லை, இரவிலேயே நடந்து காலை 6 மணிக்கு ஆசாத் மைதானத்தை அடைய வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. ஏற்கெனவே அவர்கள் அனைவரும் சோர்ந்துபோய் இருந்தனர். கட்டாயமாக ஓய்வு தேவைப்பட்டது. அப்படி இருக்கையில் இப்படியான முடிவு. ஏனென்றால் மும்பையில் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு மார்ச் 12-ம் தேதி பொதுத்தேர்வு. காலையில் நடைப்பயணம் மேற்கொண்டால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அந்தக் குழந்தைகளின் தேர்வுகள் பாதிக்கப்படலாம் எனக் கருதி இரவிலேயே நடந்துள்ளன. எந்தவித ஆரவாரமும் இல்லாமல், முழக்கங்களும் இல்லாமல் இரவு முழுக்க நடந்து காலை ஆசாத் மைதானத்தை அடைந்துள்ளனர். இந்த முடிவு மும்பை மட்டுமல்ல; இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பங்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எனப் பலதரப்பட்ட மக்களிடையே விவசாயிகளைக் கொண்டு சேர்த்தது இந்த மாபெரும் எழுச்சிப் போராட்டம். அங்கிருந்த விவசாயிகளில் 68 வயதான பெண் விவசாயி ருக்குமா பாயிடம் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என நான் கேட்டபோது, ``எங்கள் குழந்தைகளும் தேர்வெழுதுகிறார்கள்தானே அப்புறம் எப்படி இந்தக் குழந்தைகளை மட்டும் தேர்வெழுத விடாமல் இடையூறு ஏற்படுத்த முடியும்" என்றார். அவர்களது பொறுப்புஉணர்வும் கருணையுமே இந்தப் போராட்டம்.

ஆசாத் மைதானத்துக்கு வந்து ஓய்வெடுத்தபோது பலரும் தாங்களாகவே முன்வந்து பல்வேறு உதவிகளைச் செய்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நன்றி தெரிவித்தனர். மும்பை ஜே.ஜே பொது மருத்துவமனையைச் சேர்ந்த 15 மருத்துவர்கள் அவர்களாகவே முன்வந்து மருத்துவ உதவிகள் செய்தனர். விவசாயிகள் செருப்பில்லாத காரணத்தால் செல்லோ டேப்பைச் சுற்றி தங்கள் பாதங்களை மறைத்திருந்தனர். அதை உரிக்கும்போது பாதங்கள் முழுக்க இரத்தம் தோய்ந்திருந்தது. ஊடகங்களிலிருந்து பொதுமக்கள் பலருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுத்தது. அதையும் மீறி ஆசாத் மைதானத்தில் நான் பார்த்தது அற்புதப் போராட்டத்தின் வெற்றியை, களிப்பை. வரலாறு அறிந்திராத மாபெரும் போராட்டம். செல்லோ டேப் சுற்றிய கால்கள் விவசாயிகளின் மன உறுதிக்கான சான்று. விரக்தியிலிருந்து விடுபட்டுப் போராட்டப் பாதைக்கு அவர்கள் நகர்ந்திருப்பதே மாற்றத்தின் தொடக்கப்புள்ளிதான். விரக்தி மன அழுத்தத்திலிருந்து தற்கொலைக்கு வழிவகுக்கும். ஆனால், போராட்டங்கள் மட்டுமே சமூக ஜனநாயக உரிமையைப் பெற்றுத் தரும். மும்பை விவசாய பேரணி இந்தியா முழுமைக்குமான தூண்டுகோலாக அமைந்துள்ளது.

உலகமயமாக்கலுக்குப் பின் பல்வேறு தொழில்கள் வளர்ச்சியடைந்தாலும் கிராமப்புற விவசாய வளர்ச்சி என்பது கேள்விக்குறிதான். தேசிய குற்றப்பதிவுகளின் தரவுகளின் படி 1995-லிருந்து 2015 வரையிலான 20 ஆண்டுகளில் 3,10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தத் தரவுகள்கூட குறைவானவையே ஏனென்றால் இந்த எண்ணிக்கையில் பெண் விவசாயிகளைச் சேர்ப்பதில்லை. பெண்களை விவசாயிகளாகவே அங்கீகரிப்பதில்லை. அவர்களும் ஆண்களுக்கு நிகராக உழைக்கின்றனர். ஆனால் அவர்களின் அடையாளம் விவசாயி மனைவி, மகள் எனக் குடும்பமாகச் சுருக்கப்படுகிறது. அதனால் பெண் விவசாயிகளின் தற்கொலைகள் குடும்பத் தற்கொலையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மனிதகுல வரலாற்றில் ஒரு தொழிலைச் சேர்ந்த 3,10,000 தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது வேறு எங்கும் இல்லாதது. 1991-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் விவசாயிகள் விவசாயத் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போய்விட்டனர். பலர் விவசாயக்கூலிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். பஞ்சாபில் நான் விவசாயக் கூலி வேலையைச் செய்யக்கூடியவர்களைச் சந்தித்தபோது மூன்றில் ஒரு நபர் ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு முன்பு சொத்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்துள்ளார். கந்து வட்டிக்காரர்கள், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் தொழிற்சாலைகள், அரசின் நிலச்சீர்திருத்தம் போன்றவற்றின் காரணமாக நிலத்தை இழந்தவர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் நிலங்களை இழந்ததற்கு இயற்கை சீற்றங்களோ, சுனாமியோ, வறட்சியோ காரணமில்லை. அரசின் தவறான கொள்கை முடிவுகளே இதற்குக் காரணம்.

இந்திய அரசியலமைப்பின்படி அரசின் கொள்கைகள் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நீதியைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் இவற்றையெல்லாம் மீறும் வகையில்தான் தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை முறையானது பொதுத்துறை நிதியைத் தனியாருக்கு மாற்றுவதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மல்லையா, அதானி போன்றவர்கள் பொதுத்துறை வங்கியின் பணத்தை கோடிகோடியாக எடுத்துச் செல்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கடனில் ஆயிரம் குளறுபடிகள் இருக்கின்றன. 1990-களில் விவசாயிகள் யாரும் நேரடியாகக் கடன் பெறவில்லை. விவசாயம் சார்ந்த விற்பனைத் தொழில்களுக்கு விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டன. உர விற்பனையாளர், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர் என விற்பனைக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால் இப்பொழுதும் நேரடியாக விவசாயக் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கப்பட்டாலும் பொதுக்கடனாக வழங்கப்படுகிறது. விவசாயக் கடனில் வட்டிவிகிதம் 3% தான். ஆனால் பொதுக்கடனில் 14 % வரை செல்லக்கூடியது. அப்படியெனில் விவசாயம் பொய்த்துப்போனால் அந்த விவசாயி மிகப்பெரும் தொகையை கட்டவேண்டி வரும். அதன்பிறகு நிலம் கையகப்படுத்துதல், அரசின் திட்டங்களுக்காக தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துகின்றன. சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எத்தனை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன? இதேபோன்று மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் கட்டுவதற்காக விவசாய நிலங்கள் ஏக்கர் கணக்கில் கையகப்படுத்தப்படுகின்றன. ஆனால், அந்த இரு நகரங்களுக்குமிடையே தினமும் 125 பேருந்துகள், 69 ரயில்கள், 25 விமான சேவைகள் இருக்கின்றன. இதைத்தாண்டி ஏன் புல்லட் ரயில்? 

விவசாயிகளைப் பற்றிய அலட்சியத்தன்மையே இதற்குக் காரணம். விவசாயிகளின் பிரச்னைகளான கடன்கள், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வறட்சி என இவற்றுக்கென தனியாக 21 நாள்கள் பாராளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எம்.எஸ்,சுவாமிநாதன் பரிந்துரைத்த குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்றவற்றையும் விவாதித்து ஒரு முடிவை எட்ட வேண்டும். இன்னும் இந்தப் பிரச்னைகளைக் கிடப்பில் போடுவது அரசுக்கெதிராக விவசாயிகளின் போராட்டங்களை அதிகரிக்கும். நாம் மீண்டும் விவசாயிகளைத் திரும்பிப் பார்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.