Published:Updated:

கர்ப்பிணிகளுக்கு வலு தரும் நாட்டுக்கோழி ரெசிப்பிகள்..! #Recipes

நாட்டுக்கோழிச் சாறு கர்ப்பிணிகளுக்கு வருகிற உடல் அலுப்பைப் போக்கும்.

கர்ப்பிணிகளுக்கு வலு தரும் நாட்டுக்கோழி ரெசிப்பிகள்..! #Recipes
கர்ப்பிணிகளுக்கு வலு தரும் நாட்டுக்கோழி ரெசிப்பிகள்..! #Recipes

பொதுவாக குழந்தைப் பெற்றப் பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மீண்டும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது வழக்கம். ஆனால், இன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

சாமை - நாட்டுக்கோழி பிரியாணி

தேவையானவை:

சாமை - ஒரு கப்

 நாட்டுக்கோழி - 200 கிராம்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

 இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 புதினா - கால் கப்

 கொத்தமல்லித்தழை - கால் கப்

 ஏலக்காய் - 2

 பட்டை - சிறிய துண்டு

 கிராம்பு - 2

 கல்பாசி - 1 சிறிய துண்டு

 மிளகு - அரை டீஸ்பூன்

 சோம்பு - அரை டீஸ்பூன்

 நெய்/நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசியை நன்றாக‌க் கழுவி வைக்கவும். நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்குத் தேவையான அளவு உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும். கோழி வெந்ததும் துண்டுகளை தனியாகவும், அதன் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய்/ நெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றின் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பச்சை வாசனை  போகும் வரை வதக்கவும்.

இத்துடன் வேகவைத்த கோழி துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, கோழி வேகவைத்த தண்ணீரை ஊற்றி (1 கப் சாமைக்கு 2.5 கப் கோழி வெந்த தண்ணீர். கோழி வெந்த தண்ணீர் குறைவாக இருந்தால் நீர் சேர்த்துக்கொள்ளுங்கள்) கொதிக்கவிடவும். இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

நாட்டுக் கோழிச்சாறு

தேவையானவை:

 நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது)

 சின்னவெங்காயம் - 3 

 நாட்டுத் தக்காளி - 1 

 சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் 

 இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 சோம்பு - அரை டீஸ்பூன் (தட்டி வைக்கவும்)

 பட்டை - அரை இஞ்ச் அளவு

 மிளகு - 1  டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு 

 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோம்பு, மிளகு இரண்டையும் தட்டி பொடித்து வைக்கவும். நாட்டுக் கோழியை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். இத்துடன் தேவையான அளவு உப்பு,  மஞ்சள்தூள், கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து மூடி போட்டு 25 நிமிடங்கள் வேகவைக்கவும். பிரஷர் நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கோழித்துண்டுகளை மசாலா செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.  

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை  போக வதக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். கலவை முக்கால் பதம் வதங்கியதும், எடுத்து வைத்த சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் சீரகத் தூள், தட்டி வைத்துள்ள சோம்பு மற்றும் மீதமுள்ள மிளகு சேர்த்து 2 அல்லது, 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.