Published:Updated:

``கார்ட்டூன் படம்னு நினைச்சோம்; அதை விட இது சூப்பரா இருந்துச்சு" குழந்தைகள் திரைப்பட விழா! #ChildrensFilmFestival

"தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கு. குழந்தைகளை நடிக்க வைப்பதால் மட்டுமே ஒரு திரைப்படம் குழந்தைகளுக்கானதாக மாறிவிடாது."

``கார்ட்டூன் படம்னு நினைச்சோம்; அதை விட இது சூப்பரா இருந்துச்சு" குழந்தைகள் திரைப்பட விழா! #ChildrensFilmFestival
``கார்ட்டூன் படம்னு நினைச்சோம்; அதை விட இது சூப்பரா இருந்துச்சு" குழந்தைகள் திரைப்பட விழா! #ChildrensFilmFestival

ஹாய்ய்ய்ய்ய் சுட்டிஸ்!  உங்க எல்லோருக்கும் செம சர்ப்ரைஸான ஒரு விஷயம் சொல்லட்டுமா? இனிமே உங்க வீட்டில் இருந்தபடியே விதவிதமா சினிமா பார்க்கலாம். அதுவும் உங்க அப்பா-அம்மாவுடைய சம்மதத்துடன்..! "அடபோங்கப்பா... பரீட்சை நேரத்துல எங்க வீட்டுல டிவி கூடப் பார்க்க விடமாட்றாங்க.." என்கிற உங்க; அய்யோ பாவ குரல் எங்களுக்கும் கேட்குது குட்டீஸ். ஆனா, நாங்க சொல்றது பொய் கிடையாது. சின்ச்சான் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், உண்மையோ உண்மை. 

சரி, விஷயத்துக்கு வருகிறேன். குழந்தைகளுக்கான திரைப்படங்களை நீங்கள் பார்க்கிறதுக்கு எந்தப் பெற்றோராவது தடை போடுவாங்களா என்ன? சமீபத்துல மதுரையில் நடந்த, `15-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா'வின் சிறப்பம்சமே இதுதான்!  ஒரு வாரம் முழுக்க உங்களுக்கான திரைப்படங்கள், குறும்படங்களை திரையிட்டாங்க. அவற்றை நிறைய குழந்தைகளும் பார்த்து ரசிச்சாங்க. பெற்றோர்கள், ஆசிரியர்கள்னு ஒருத்தர்விடாம, இங்கு திரையிட்ட படங்களுக்குக் கைத்தட்டி வரவேற்பு கொடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்க. இவ்வளவு விஷயமும் தெரிஞ்சதும் நாங்க சும்மா இருப்போமா? 'பசுபதி...பூட்றா வண்டியை மதுரைக்கு'ன்னு சிட்டா பறந்தோம். 

நாங்க அரங்கத்துக்குள் நுழையும்போதே `ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!' அப்படிங்கிற சுட்டீஸ்களுடைய கோரஸ் அரங்கத்தையே அதிர வைத்தபடி இருந்தது. 'Spirit : Stallion of the Cimmaron' என்கிற படத்தைத்தான் இப்படி அரங்கமே அதிரும் அளவுக்கு என்ஜாய் பண்ணி பார்த்துட்டு இருந்தாங்க. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்க நெருங்க, பசங்க பட்டாளம் காட்டின 'இருக்கை நுனி தவிப்பு' எங்களையும் கொஞ்ச நேரத்துக்கு அந்தப் பிஞ்சு உலகத்துக்குள்ள கூட்டிட்டுப் போயிடுச்சு. `ஒரு படம், குழந்தைகள் மத்தியில் இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?' என்கிற ஆச்சர்யத்துடன் ஒரு சுட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``எங்க பள்ளிக்கூடத்தில் இன்னிக்கு எங்களை படத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னாங்க. நாங்க ஏதோ கார்ட்டூன் படம்னு நினைச்சுட்டுத்தான் வந்தோம். ஆனா, இது கார்ட்டூன் படம் மட்டுமல்ல. நாங்க தெரிஞ்சுக்க நிறையவே விஷயங்கள் இருந்துச்சு. `Spirit - Stallion of the Cimmaron' படத்தில் வந்த குதிரையுடைய தைரியம் ரொம்பப் புடிச்சது. நாம எதுக்கும் பயப்படக் கூடாது, எந்த விலங்குகளையும் துன்புறுத்தக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்... " என்றபடி ஒரு புது விஷயம் தெரிந்த உற்சாகத்துடன் சிரிக்கிற முகமது, ஐந்தாம் வகுப்பு மாணவன். 

``அக்கா...எங்ககிட்டயும் கேளுங்களேன்!!!" என்றபடி ஜோடியா வந்து நின்னாங்க ஹர்ஷிதா மற்றும் வசந்த விஜி. ``எங்களுக்கு ' Olaf's Frozen Adventure' அப்படிங்கிற குறும்படம்தான் ரொம்பப் பிடிச்சது. அதில் வர்ற மாதிரியே எல்லாரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினா எவ்வளவு நல்லாயிருக்கும்? இந்தப் படத்துல சூப்பர் மெசேஜ் ஒண்ணு இருக்கு. நம்ம அப்பா - அம்மா இருக்கிறவரைக்கும் அவங்களுடைய அருமை நமக்குத் தெரியாதாம். இல்லாதப்போதான் புரியுமாம். அதனால இனி நாங்களும் அப்பா - அம்மாகிட்ட அன்பா இருப்போம்"னு சொல்லி, சுற்றியிருந்த எல்லாருடைய மனதையும் உருக வைத்தார்கள். 

இந்த நிகழ்ச்சியுடைய ஒருங்கிணைப்பாளர் ராஜனிடம் பேசினோம். ``நாங்க 40 வருஷமா குழந்தைகளுக்கான படங்களைத் தேடித்தேடி திரையிட்டுக்கிட்டு வருகிறோம். மதுரையில் இது 15-வது வருஷம். தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கு. குழந்தைகளை நடிக்க வைப்பதால் மட்டுமே ஒரு திரைப்படம் குழந்தைகளுக்கானதாக மாறிவிடாது. நான் படிக்கும்போது, எங்க வாத்தியார்கள் ஒரு நாளைக்கு 20 பக்கமாச்சும் எங்களைப் புத்தகம் வாசிக்கச் சொல்லுவாங்க. ஆனா, இப்போ இருக்கிற மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் ரொம்ப குறைந்துவிட்டது. ஆனா, திரைப்படம் போல பார்க்கிற விஷயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதன் வழியாகக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய அத்தனை நல்ல விஷயங்களையும் கடத்திவிடலாம்'' என்கிறார். 

ஓ.கே சுட்டிகளா... உங்களுக்கும் மேலே சொன்ன மாதிரியான குழந்தைகளுக்கான படங்களைப் பார்க்க ஆசை வந்துடுச்சுதானே..? படிப்புக்கு இடையூறு இல்லாம, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆன்லைன்ல பார்த்து ரசிங்க, அதிலிருக்கிற நல்ல விஷயங்களைக் கடைப்பிடிக்கவும் செய்யுங்க!