தமிழ்நாட்டில் `செஃப்’ என்றாலே நினைவுக்கு வருபவர் தாமு. விதவிதமான உணவு வகைகளை விறுவிறுவென சமைப்பதில் கில்லி. ஏழு வயதிலிருந்தே சமையல்மீது அதிக ஈடுபாடுகொண்ட இவர்தான், இந்தியாவிலேயே `ஹோட்டல் மேனேஜ்மென்ட்'டில் முதல் பிஹெச்.டி பட்டதாரி. அவள் விகடன் கிச்சனின் முதல் யம்மி செஃப் விருது அண்மையில் இவருக்குக் கிடைத்த அறுசுவை அங்கீகாரம். உணவே மருந்து என்பதை முழு மூச்சாகக்கொண்டிருக்கும் தாமு, நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய தகவல்கள்.

ஆயிரக்கணக்கான ரெசிப்பிகளை எப்படி ஞாபகம் வெச்சிருக்கீங்க?
என் சமையல்ல மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, கடுகு, பட்டை, லவங்கம், காய்ந்த மிளகாய்னு நமக்கு நல்லா அறிமுகமான பொருள்களைத்தான் பயன்படுத்துவேன். இதை வெச்சே வாசனை, உணவு வகைகள்னு எல்லாத்தையும் மாற்ற முடியும். இதையெல்லாம் ஞாபகம்வெச்சுக்க கடவுள்தான் அதிக ஞாபகசக்தி கொடுத் திருக்கார்னு நினைக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைவருக்கும் ருசியான உணவளித்து மகிழும் உங்களுக்கு, சமையல் துறையில் இருப்பது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது?
இதைக் கடவுளோட ஆசீர்வாதம்னுதான் நினைக்கிறேன்.உணவு வாயிலாக மத்தவங்க முகத்துல ஆனந்தத்தைப் பார்க்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய பேருக்கு சமைச்சுக் கொடுக்கணும்னு ஆசை. கடவுள் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தா, இதைவிட அதிகமா சமைச்சுப் போடுவேன்.

`டி.வி-யில் பார்த்தவாறு சமையல் செய்தால், சொல்வதுபோல ருசி வரவில்லை’ என்பது பலரின் புகார். இது எதனால்?”
எந்த ஒரு கவனச்சிதறலும் இல்லாம, முழுக்க முழுக்க சமையல்மேல கவனம் வெச்சு சமைச்சா, உணவு நிச்சயம் ருசிக்கும். சாதாரண ரசம் வைக்கிறதுலேயே நிறைய பேர் தப்பு பண்றாங்க. சரியான அளவுல எண்ணெயைச் சூடுபடுத்தணும். கடுகு கருகிடக் கூடாது. தக்காளியை நல்லா பிழியணும். சரியான நேரத்துல எல்லாத்தையும் கலக்கணும். ஒரு நொடி மிஸ்ஸானாகூட ருசி மாறிடும். எல்லா வேலைகளையும் கவனமா செய்தா, சுவையான உணவை எல்லோராலும் செய்ய முடியும்!

கின்னஸ் சாதனை படைத்த தருணம் எப்படி இருந்தது?
50 வயசுல, இடைவெளி இல்லாம 24 மணி நேரம் 30 நிமிஷம் 12 நொடி சமைச்சேன். மொத்தம் 617 உணவு வகைகள் பண்ணினேன். இப்போ அதையெல்லாம் நினைக்கிறப்போ எனக்கே ஆச்சர்யமா இருக்கு. அதைவிட ரொம்ப சந்தோஷம், லண்டன்ல அவங்க ஆபீஸ்ல என் கையில கின்னஸ் புத்தகத்தைக் கொடுத்தப்போ வந்த ஆனந்தம்தான். வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம் அது!
கானப்ரியா