Published:Updated:

எம்.ஜி.ஆர் விழாவுக்கு வந்தவர்கள்... ஜெ. சமாதிக்குப் போய்விட்டனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எம்.ஜி.ஆர் விழாவுக்கு வந்தவர்கள்... ஜெ. சமாதிக்குப் போய்விட்டனர்!
எம்.ஜி.ஆர் விழாவுக்கு வந்தவர்கள்... ஜெ. சமாதிக்குப் போய்விட்டனர்!

கலகலத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

பிரீமியம் ஸ்டோரி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலமாக மாநிலம் முழுவதும் நடத்தி, அதன் நிறைவு விழாவை சென்னையில் நடத்தி முடித்துள்ளது எடப்பாடி அரசு. ‘‘ஒரு மாதம்கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று சொன்னவர்கள் மத்தியில், ஓர் ஆண்டுக்காலம் இந்த நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளோம்” என மாநாட்டு மேடையிலே முழங்கினார் முதல்வர் எடப்பாடி.

பிரதமர் கலந்துகொள்வார் எனச் சொல்லிக் காத்திருந்தவர்கள், எதிர்க்கட்சித் தலைவருக் காகவும் தினகரனுக்காகவும் காத்திருந்து... ஒருவழியாகக் கட்சி விழாவா, அரசு விழாவா என முடிவெடுக்க முடியாமலேயே விழாவை நடத்திமுடித்தனர். விழாக் கொண்டாட்டத்தில் ஆளும் தரப்பு ஒருபுறம் இருக்க, சென்னைவாழ் மக்களுக்கோ அது திண்டாட்டத்தைக் கொடுத்து விட்டது. அண்ணா சாலை நெரிசலில் சிக்கித்தவித்தது. சோதனைகள், கெடுபிடிகளுக்குப் பஞ்சமில்லை. பத்திரிகையாளர்களின் பைகளும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. முதல்வரின் வாகனத்துக்குச் சிறப்புப் பாதுகாப்பு. இப்படியாக, அனைத்திலும் ஜெயலலிதா பாணியைக் கையாண்டனர். மேடையில், ஜெயலலிதாவுக்குப் பயன்படுத்துவது போல குளிர்சாதன வசதியைக் கச்சிதமாகச் செய்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் விழாவுக்கு வந்தவர்கள்... ஜெ. சமாதிக்குப் போய்விட்டனர்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற இடம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். அந்த இடத்துக்கு வரும் அனைத்துச் சாலைகளையும் ஆக்கிரமித்து அ.தி.மு.க-வினர் பேனர்கள் வைத்திருந்தனர். அதில், திக்குமுக்காடிவிட்டார்கள் வாகன ஓட்டிகள். செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற விழாவுக்கு இரண்டு நாள்கள் முன்பே அண்ணா சாலை, அடையாறு என சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் பீதியை ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட பேனர்களை வைத்திருந்தனர். பல திசைகளிலிருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தொண்டர்களுடன் குவிந்ததால், சென்னையில் பிரதான இடங்களில் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆட்களை அழைத்துவர உத்தரவிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், ஜெயலலிதா சமாதியைப் பார்ப்பதற்காக மெரினாவுக்குப் படையெடுத்துவிட்டனர். அவர்கள் மெரினாவில் குழுமியதால், கூட்ட அரங்கில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. சென்னையின் பிரதான பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள், கரைவேட்டிகளால் நிரம்பிவழிந்தன. பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

‘‘நூற்றாண்டு விழாவுக்கு ஏழு லட்சம் பேர் வருவார்கள்” என்று சொல்லி திகில் ஏற்படுத்தியவர் அமைச்சர் ஜெயக்குமார். அவர், இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து, ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’, ‘அழகிய தமிழ்மகள் இவள்’ போன்ற பாடல்களைப் பாடி அசத்தினார். பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலை ஜெயக்குமார் பாடினார். அவருடைய பேச்சிலும் காரம் அதிகம் இருந்தது. ‘‘ஜெயலலிதா முன் நடித்து, ஊரை ஏமாற்றிய நயவஞ்சகர்கள் கூட்டத்திலிருந்து வந்த ஓநாய் ஊளையிடுகிறது’’ என்று தினகரனை ஜெயக்குமார் விமர்சித்தார். ஸ்டாலின், ரஜினி, கமல் என அனைவரையும் விமர்சனங்களால் விளாசினார் ஜெயக்குமார்.

செய்தித்துறையின் சார்பில் நடைபெற்ற விழா என்பதாலோ, என்னவோ... மேடை ஏற்பாடு முதல், விழாவுக்கு வருகை தந்தவர்களை உபசரிப்பது வரை செய்தித் துறையினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எழில், தென்றல் உள்ளிட்ட செய்தித்துறை அதிகாரிகள் மேடையில் ஆளுமை செலுத்தினார்கள். விழா தொடங்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பே, எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகளை இரண்டாவது வரிசையில் அமரவைத்துவிட்டனர். முதல்வர் உட்பட அமைச்சர்கள் எல்லாம் மேடையில் ஏறியதும், அவர்களை மூன்றாவது வரிசைக்கு மாற்றினார்கள். பலர் வயதானவர்களாக இருந்ததால், நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாமல் கஷ்டப்பட்டதைப் பார்க்க முடிந்தது.

எம்.ஜி.ஆர் விழாவுக்கு வந்தவர்கள்... ஜெ. சமாதிக்குப் போய்விட்டனர்!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அந்தத் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் பியாரே, மேடையின் முன்பகுதியில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார். அவருடன் விவேகானந்தன், ஓட்டம் டாய் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமர்ந்திருந்தார்கள்.

தமிழகம் முழுவதுமிருந்து ஆட்களை அழைத்து வந்திருந்தாலும், அரங்கில் இருந்த கூட்டம் ஐம்பதாயிரத்தைத் தாண்டவில்லை. முதல்வர் பேச ஆரம்பித்தபோதே, பலர் அரங்கை விட்டுக் கிளம்பினர். அதனால், பின்பகுதி இருக்கைகள் முழுவதும் காலியாகிவிட்டன. அழைத்து வந்தவர்கள் அப்செட்டாகி விட்டனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ், 10 லட்சம் பேர் விழாவுக்கு வந்திருப்பதாகச் சிலாகித்துப் பேச, பின்வரிசையில் சிரிப்பொலி கேட்டது.

அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் என்று கலந்துகட்டிப் பயன்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்கள் கேஷுவல் உடையில் வந்திருந்தனர். ‘ஐ.டி விங்’ எனப் பெயர் பொறித்த டிஷர்ட் அணிந்த இளைஞர் கூட்டமொன்று உலவிக் கொண்டிருந்தது.

எல்லாப் பக்கங்களிலும் ரூபாய் நோட்டில் காந்தி தாத்தா சிரித்துக்கொண்டிருந்தார்.

- அ.சையது அபுதாஹிர்
படம்: சு.குமரேசன், வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு