Published:Updated:

எப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி?
எப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி?

எப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி?

பிரீமியம் ஸ்டோரி

‘மயக்கம் போட்டு விழுந்தார்’, ‘உணவில் ஏதோ கலந்துகொடுத்துவிட்டார்கள்’ ‘கொலை செய்யப்பார்க்கிறார்கள்’ என்ற தகவல்கள், ‘மே 17 இயக்க’த்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் உடல்நிலை தொடர்பாக வட்டமடிக்கின்றன. சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரும் அவருக்காக பதற்றத்துடன் குரல் கொடுக்கிறார்கள். ஆனாலும் இறுக்கத்தைத் தளர்த்த மறுக்கிறது காவல் துறை. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், உடல்நலக்குறைவால் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். திருமுருகன் காந்தியைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருந்த அவரின் தந்தையான சா.காந்தியைச் சந்தித்தோம். கலங்கிய கண்களுடன் அதே சமயம் தீர்க்கமாகப் பேசுகிறார் காந்தி.

எப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி?

“ஜெனிவாவிலிருந்து திரும்பி வந்ததுமே அவரைக் கைது பண்ணணும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இருந்தது. அவங்க போட்ட வழக்குகள்ல நீதிமன்றம் விடுவிச்சாலும், ‘பெரியார் சிலைக்கு மாலை போட்டார்’னு சாக்கு சொல்லி கைது பண்றாங்க. முதலில் புழல் சிறைக்குத்தான் கொண்டுப்போனாங்க. அடுத்த நாளே வேலூருக்கு மாத்திட்டாங்க. நிறைய அலைச்சல். இடையில் கிட்டத்தட்ட 15 முறைக்கு மேல சென்னைக்குக் கூட்டிட்டு வந்துருக்காங்க. வழக்குன்னு சொல்லியே தூத்துக்குடி, சீர்காழி, நாகர்கோவில் என அலைக்கழிச்சிருக்காங்க. சரியான உணவு இல்ல. டாய்லெட் போறதுக்குக்கூட சரியான வசதிகள் இல்லை. இதெல்லாமே திருமுருகனின் உடல்நிலையை ரொம்ப பாதிச்சிடுச்சு. சீர்காழி நீதிமன்ற நீதிபதிகிட்ட, ‘எனக்குத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருக்கு. உடம்பு சரியில்ல. மருத்துவமனைக்குப் போகணும்’னு நேரடியாகவே முறையிட்டார். ‘உடனே மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போங்க’னு நீதிபதி உத்தரவு போட்டார். அதன்பிறகுதான், மருத்துவமனைக்கே கூட்டிட்டுப் போயிருக்காங்க.

மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சொல்லித்தான், தனிமைச் சிறையில திரு இருக்கிறது எங்களுக்குத் தெரியும். நாங்க வருத்தப்படக்கூடாதுன்னு இதை எங்ககிட்ட திரு சொல்லல. நாங்க அவரைப் பார்க்கறதுக்கான வாய்ப்பு ரொம்பவும் குறைவு. வாரம் மூணு நாள்தான் நாங்க பார்க்குறதுக்கு அனுமதி. ஆனா, அப்பவும் விசாரணைக்கு வெளியே கூட்டிட்டுப் போயிடறாங்க. பலநேரம் நீதிமன்ற வாசல்ல நின்னுதான் பார்க்க முடிஞ்சது. சில நிமிஷம் மட்டும் பேச முடியும். பலநாள் மதிய உணவே கொடுக்கலைன்னு கேள்விப்பட்டேன். இதுபோன்ற காரணங்களால சிறைக்குள்ளேயே திரு மயக்கம் போட்டு விழுந்து, அப்படியே கிடந்திருக்கார். ஒரு சிறைக்காவலர் பார்த்து தகவல் சொன்ன பின்னாடிதான் சிகிச்சை கொடுத்திருக்காங்க. மருத்துவமனையில ரெண்டு நாள் இருக்கணும்னு மருத்துவர்கள் சொன்னதைக்கூட காவல்துறை ஏத்துக்கலை” என்றவரிடம் “தேச விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தது பற்றிச் சொல்லுங்கள்?” என்றோம்.

எப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி?

“திரு மீது பதியப்பட்ட உபா (UAPA) வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தவறு இருந்தது. ‘25.7.2017 அன்று பாலஸ்தீனிய விடுதலை பற்றி திருமுருகன் காந்தி பேசியபோது ஈழ விடுதலை பற்றியும் பேசினார்’ என்று வழக்கில் எழுதியிருந்தார்கள். ஆனால், அந்தத் தேதியில் திரு, குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில இருந்தாரு. பிறகு அதைத் திருத்திவிட்டு, 2017 அல்ல... 2014 என்று பதிவு செய்தார்கள். அதை நீதிமன்றம் ஏத்துக்காம, உபா சட்டத்தில் திருவை கைது செய்ய ஆட்சேபணை தெரிவிச்சது. பிறகு இன்னொரு வழக்கு, ‘பெரியார் சிலை, அம்பேத்கர் சிலைக்குக் கூட்டமாகச் சென்று மாலை போட்டார்’னு தேச விரோதச் செயல் (Sedition) வழக்குப் போட்டாங்க. இன்னும் சில வழக்குகளும் இருக்கு. இதில், சில வழக்குகளை நீதிமன்றம் ரத்து பண்ணியிருக்கு. நாங்களும் சட்டரீதியில் தொடர்ந்து போராடுறோம். சீக்கிரமே திருவுக்கு ஜாமீன் கிடைக்கணும்” என்றார்.

“திருமுருகன் காந்தியின் மனைவி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டோம். “இயக்க வேலைகள்ல பிஸியா இருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் இரவு வீட்டுக்கு வந்துடுவாரு. குழந்தைகிட்ட ரொம்பவே அன்பா இருப்பார். திரு சிறைக்கு போய் 50 நாள்களுக்கு மேலாச்சு. மனைவியும் குழந்தைகளும்கூட சரியா அவரோட பேச முடியலை. பல நேரங்களில் நீதிமன்றத்துக்கு அழைச்சிட்டு வரும்போது தூரத்துல இருந்து மட்டுமே பார்க்க முடியுது. மருமகள் புரிஞ்சிக்கிட்டாங்க. குழந்தைகளின் கேள்விகளுக்கும் அழுகைக்கும்தான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. நவீன ஓவியத்துல அவருக்கு ஈடுபாடு அதிகம். ஒரு வீர.சந்தானம் மாதிரி அவர் வேற எங்கேயோ இருந்திருக்க வேண்டியவர். எம்.சி.ஏ பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட்டா வெளிய வந்தவர் என் மகன். நல்ல வேலையும் கிடைச்சுது. எல்லாரையும் போல வழக்கமான வாழ்க்கையை அமைச்சிக்காம சமூகத்துக்காக தன்னையே அர்ப்பணிச்சுக் கிட்டார். மக்களுக்கான பாதையாக தன் பாதையை மாத்திக்கிட்டார்” என்கிறார் அமைதியாக!

- சி.மீனாட்சிசுந்தரம்
படங்கள்: கே.ஜெரோம், சி.ரவிக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு