Published:Updated:

சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!
சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

பிரீமியம் ஸ்டோரி

‘‘எங்கெல்லாம் ஆண்களால் போக முடியுமோ, அங்கெல்லாம் பெண்களும் போகலாம். ஆண்களுக்கு என்னென்ன விதிகள் பொருந்துகின்றனவோ, அவை பெண்களுக்கும் பொருந்தும்!’’ இந்த ஜூலை 18-ம் தேதி சபரிமலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சொன்ன கருத்து இது. அப்போதே, தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்துவிட்டது. ‘10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரமுடியாது’ என்ற தடை உத்தரவை நீக்கி, ‘அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்’ என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தேசம் முழுவதும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஆணாதிக்கம் தொடங்கி அரசியல் கருத்துகள் வரை கேரளத்தில் வரிசைகட்டுகின்றன. அரசியல் கட்சிகள் முதல் ஆன்மிக அமைப்புகள் வரை எல்லாமே இரண்டுபட்டு நிற்கின்றன. தீர்ப்பைக் கேரள அரசு வரவேற்கிறது. ஆனால், ‘திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்தால், அதை எதிர்க்க மாட்டோம்’’ என்கிறார், கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன். காங்கிரஸில் சில தலைவர்கள் தீர்ப்பை வரவேற்க, ‘‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு செய்ய வேண்டும்’’ என கொந்தளிக்கிறார், கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா. பி.ஜே.பி-யிலும் இப்படி இரட்டைக் கருத்துகள் எழுந்துள்ளன. கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், “இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு’’ என வரவேற்கிறார். கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் இதை வரவேற்கிறார்கள். 

சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

ஐயப்ப தர்மசேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வரைச் சந்தித்தோம். “சபரிமலைக்குப் பெண்கள் வரக்கூடாது என யாரும் கூறவில்லை. 10 வயதுக்கு உட்பட்ட, 50 வயதுக்கு மேற்பட்ட நான்கு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வருகிறார்கள். எனவே ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு பிரச்னை இங்கு எழவில்லை. இது வயது சம்பந்தப்பட்ட ஒரு கட்டுப்பாடு. உச்ச நீதிமன்றத்துக்கு அக்டோபர் 3-ம் தேதி புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்கிறார். அதன்பிறகு சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். பண்பாடு மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற நிலை ஏற்படவேண்டும்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். ‘பாரம்பர்ய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தக் கூடாது, நீங்கள் கம்ப்யூட்டரில் கேம் விளையாடினால் போதும்’ என்று இதே உச்ச நீதிமன்றம் கூறியது. அரசியல் பேதம் இல்லாமல் ‘நாம் தமிழர்கள்’ என்ற உணர்வுடன் ஒற்றுமையாகப் போராடி ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழர்கள் வெற்றிபெற்றார்கள். அதேபோல ‘நாம் மலையாளி’ என்ற உணர்வோடு சபரிமலை நடை திறக்கும் அக்டோபர் 16-ம் தேதி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். யாகங்கள், வேள்விகள் நடத்தி ஜல்லிக்கட்டு போல வெற்றி கிட்டும்வரை போராடுவோம். ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றியது போல, சபரிமலையின் புனிதத்தைக் காப்பாற்றும்விதமாகக் கேரள அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்” என்றார்.

போராட்டம் அறிவித்திருக்கும் ராகுல் ஈஸ்வர், சபரிமலை தந்திரியாக ஏற்கெனவே இருந்த கண்டரரு மகேஸ்வரருவின் பேரன். ராகுல் ஈஸ்வருக்கு ஆதரவாகவே கருத்துகளைக் கூறுகிறார் அவரின் மனைவி தீபா. “50 வயது ஆவதற்குள் சபரிமலை செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. என் தோழிகளிடமும், என் மகளிடமும் இதையே நான் கூறுவேன். இப்படி ஒரு தீர்ப்பு வந்ததால், எனது மனநிலை மாறிவிடாது. நான் மட்டும் அல்ல, ஐயப்ப சுவாமியை நம்பும் எந்தப் பெண்ணின் மனதிலும் தீர்ப்பால் மாற்றம் ஏற்பட்டுவிடாது. ஐயப்ப சுவாமி மீது நம்பிக்கை உள்ள பெண்களுக்கு மட்டுமே சபரிமலை செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக, உடனே புறப்பட்டுவிடமாட்டார்கள், 50 வயது ஆகட்டும் எனக் காத்திருப்பார்கள். பக்தியுள்ள பெண்கள் யாரும் ஆசார விதியைமீறி சபரிமலை செல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

‘‘இந்தத் தீர்ப்பு வேதனை அளிப்பதாக இருக்கிறது. நைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்ப சுவாமியை, 41 நாள்கள் விரதம் இருந்து தரிசிக்க வேண்டும். இளம்பெண்களுக்கு சில தடங்கல்கள் இருப்பதால், 10 வயதிற்கு உட்பட்ட மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றித் தெரிந்த கேரளப் பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என நம்புகிறேன். அதே நேரம் வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பழைய நிலையே தொடரவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு.

கேரள பி.ஜே.பி தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, ‘‘இந்தத் தீர்ப்பை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சபரிமலை கோயிலின் ஆசாரம், அனுஷ்டானங்களை நிலைநிறுத்த வேண்டும் என விரும்புகிறேன். வனத்தில் வசிப்பவர் ஐயப்பன். நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பதுதான் ஐயப்பனின் முக்கிய தத்துவம். தீர்ப்பிற்குப் பிறகு கருத்துக் கூறிய 95 சதவிகிதம் பெண்கள், ‘நாங்கள் குறிப்பிட்ட வயதிற்குள் சபரிமலை போக விரும்பவில்லை’ என்றுதான் கூறினார்கள். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, சபரிமலை கோயில் நம்பிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கே.கோபாலன், ‘சபரிமலைக்குச் செல்லும் பணத்தில் நமக்கான சீருடை வாங்கலாம்’ என்று கூறினார். அதே நிலையை மீண்டும் கொண்டுவர மார்க்சிஸ்ட் கட்சி நினைக்கிறது. அதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.

கேரளத்தில் தொடர் பகவத் கீதை வகுப்புகளை நடத்திவருபவரும், ‘கம்யூனிஸ்ட் சுவாமி’ என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான சந்தீபானந்தகிரி சுவாமி, ‘‘ஆதிசங்கரர் தொடங்கி, விவேகானந்தர், ஸ்ரீநாராயணகுரு வரையுள்ளவர்கள் அங்கீகரித்த நிலைப்பாட்டைத்தான் நீதிமன்றம் எடுத்துள்ளது. ‘ஆசாரமும், அனுஷ்டானமும் நமக்காக நாமே உருவாக்கியது, நாம் உருவாக்கியவற்றில் நாமே சிக்கிவிடக்கூடாது’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். மாலை அணிந்து விரதம் இருந்தால் ஆண்களை ஐயப்ப சுவாமியாகவும், பெண்களை மாளிகைப்புறத்து அம்மனாகவும் கருதுபவர்கள்தான் உண்மையான இறை நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுக்கு வேறு எந்த எண்ணமும் ஏற்படாது.

சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

இந்துக்களின் மிகப்பெரிய விழா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் ஆயிரக்கணக்கில் சன்னியாசிகள் வருவார்கள். ஆனால் கும்பமேளாவுக்குச் செல்லும் பெண்கள் சிறு பாதிப்புக்குக்கூட ஆளாவது இல்லை. எனவே, பதினெட்டாம் படியில் பெண்கள் பாதம் பட்டால் தவறு ஒன்றும் நடந்துவிடாது. எங்கோ இருக்கும் கைலாய மலைக்குச் சாதாரணமாகச் சென்றுவரும் பெண்கள், அருகில் உள்ள சபரிமலைக்குச் செல்லமுடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.

தர்ம சாஸ்திரத்தில் பிரம்மச்சரியம் என்றால், ‘பிரம்மமாகிய பரம்பொருள் வழியில் நடப்பவன்’ என்று பொருள். ராமாயணத்தில் நைஷ்டிக பிரம்மச்சாரி என அறியப்படுபவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்குப் பரம்பொருள் குறித்த பிரம்ம வித்தையைக் கற்றுக்கொடுத்தவர் ஸ்ரீராமரின் மனைவி சீதை. எனவே, ‘பெண்கள் சென்றால் ஆண்களின் விரதம் கெட்டுவிடும்’ என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடலளவில் மட்டும் இருப்பது அல்ல விரதம், அது மனதைச் செம்மைப்படுத்துவது. குரு பூர்ணிமாவில் தொடங்கி நான்கு மாதங்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்கள் பெண்கள். அதனால்தான், பெண்களை ‘பதிவிரதை’ என்று அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் விலக்கு, விரதத்தில் தடையை ஏற்படுத்திவிடாது’’ என்கிறார்.

எழுத்தாளர் எம்.லீலாவதி, “சபரிமலைக்குப் பெண்கள் செல்வதில் எந்தக் குழப்பமும் இல்லை. முன்பு பட்டியல் இனத்தவர்கள் கோயிலுக்குள் நுழையமுடியாத நிலை இருந்தது. மகாராஜா ஒரே உத்தரவில் அந்த நிலையை மாற்றினார். பட்டியல் இன மக்கள் கோயிலுக்குச் சென்றபோது, சாமிக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. பெண்கள் சென்றாலும் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டுவிடாது. கேரளத்தில் நூற்றுக்கணக்கான ஐயப்ப சுவாமி கோயில்களில் பெண்கள் சென்றுவருவதால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. சபரிமலை காட்டில் இருப்பதால், விருப்பம் உள்ள பெண்கள் போவார்கள். பெண்கள் விலக்கு காலத்தில் மட்டும் பிற கோயில்களுக்குப் போகமாட்டார்கள். அதுபோல சபரிமலைக்கும் அந்த நாள்களில் பெண்கள் போகாமல் தவிர்க்கலாம். கூட்ட நெரிசல் ஏற்படுவதால் செல்ல வேண்டாம் என்று சிலர் கூறுகிறார்கள். குருவாயூர் போன்ற கோயில்களில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பெண்கள் சென்றுவரும்போது, சபரிமலையில் மட்டும் சென்றுவரமாட்டார்களா?’’ என்று அதிரடிக்கிறார்.

சபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை!

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். மண்டல பூஜைக்காக விரைவில் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், பெண் பக்தர்களுக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாம். இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய பத்மகுமார், ‘‘அக்டோபர் 3-ம் தேதி நடக்கும் போர்டு மீட்டிங்கில் இதுபற்றி விவாதிக்க இருக்கிறோம். சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. அதேசமயம் பதினெட்டாம் படியில் ஆண்களைத் தனியாகவும், பெண்களைத் தனியாகவும் பிரித்து விடுவதா... அல்லது, வேறு என்ன வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம் என்று ஆலோசிப்போம். தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்வது பற்றியும் முடிவெடுப்போம். தீர்ப்பை ஏற்று அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்கைகள் எடுப்போம். இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் ஒரேமாதிரி நிலைப்பாட்டை எடுத்துள்ளன. எனவே, இதில் யாரையும் குறைகூறுவதில் அர்த்தம் இல்லை” என்றார்.

சபரிமலை குறித்த விவாதங்கள் மண்டல பூஜையைத் தாண்டி நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

- ஆர்.சிந்து

‘‘பெண்கள் போன வரலாறு உண்டு!’’

பரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, முன்பு பெண்கள் போன வரலாறு உண்டு. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. திருவிதாங்கூர் மகாராஜா தன் மகாராணியுடன் போனதாகக் குறிப்புகள் உள்ளன. கேரள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டு நிகழ்ச்சியை ‘சோறு ஊணு’ என கோயில்களில் நடத்துவார்கள். அப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைய சோறு ஊணு நிகழ்வுகள் நடந்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்த டி.கே.ஏ.நாயர், ‘‘எனக்கு சோறு ஊணு சபரிமலை ஐயப்பன் கோயிலில்தான் நடந்தது. என் அம்மா உள்பட நிறைய பெண் உறவினர்கள் வந்திருந்தார்கள்’’ என்கிறார். இவர், 1939-ம் ஆண்டு பிறந்தவர். 1990-ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு செயல் அலுவலராக இருந்த சந்திரிகா, தன் 22 வயது மகளின் குழந்தைக்கு இங்குதான் சோறு ஊணு நடத்தினார். சந்திரிகாவின் மகளும் இதில் பங்கேற்றது, பெரும் சர்ச்சையானது. ‘‘1987-ம் ஆண்டு 18 வயதில் ஐயப்பனைத் தொட்டு வழிபட்டேன்’’ என நடிகை ஜெயமாலா சொன்னது இன்னொரு சர்ச்சை.

‘மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை, விஷு வழிபாடு ஆகிய நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பெண்களுக்கு அனுமதி இருந்தது. 1950-ம் ஆண்டு சபரிமலை கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகே விதிமுறைகள் கடுமையாகின. 83-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் விதித்த தடை, 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்க ஆதாரமாக ஆனது’ என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

‘‘வழிபாட்டில் நீதிமன்றம் தலையிடக் கூடாது!’’

ச்ச நீதிமன்ற அமர்வில் மற்ற நான்கு நீதிபதிகளும் சபரிமலையில் பெண்களுக்கு வழிபாட்டு உரிமையை அனுமதித்தனர். மாறுபட்ட தீர்ப்பை வழங்கியவர், அந்த அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா. ‘இந்தியா பல்வேறுவிதமான நம்பிக்கைகளைக் கொண்ட பல பிரிவினரைக் கொண்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு. ஆயிரக்கணக்கான கோயில்களும் மசூதிகளும் தர்க்காக்களும் தங்களுக்கென பிரத்யேக வழிபாட்டு மரபுகளைக் கொண்டிருக்கின்றன. மத வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்தது. அதில் எது தேவை, எது தேவையில்லை என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். இதில் நீதிமன்றம் தலையிட்டு கருத்துகள் கூறத் தேவையில்லை. இது அவர்களின் வழிபாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரானது. மத நம்பிக்கை என்பது நீதிமன்றத்தின் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயம்’ என்கிறார் இந்து மல்ஹோத்ரா.

‘பல நூற்றாண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மாற்றுவது, இந்தக் கோயிலின் அமைப்பையே சிதைத்துவிடும். பக்தர்களின் நம்பிக்கையையும் அவமதிப்பது போல’ என இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பில் எழுதியுள்ளார். இந்து மல்ஹோத்ரா சொல்வதை ஆதரிக்கும் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ‘இந்த வீரம் இந்துக்களுக்கு எதிரானது மட்டுமா? பிற வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு எதிராகவும் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா?’ என உச்ச நீதிமன்றத்தை விளாசியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு