Published:Updated:

88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா!

88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா!

"இதுவரை பாடிபில்டிங், மாஸ்டர் பிரிவு பாடிபில்டிங், வெயிட் லிஃப்ட், டெட் லிஃப்ட் னு மொத்தம் 500 பதக்கம், சான்றிதழ் வாங்கிருக்கேன். தேசிய அளவுல நடந்த பளு தூக்கும் போட்டியில 6 தடவை ஜெயிச்சுருக்கேன்."

88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா!

"இதுவரை பாடிபில்டிங், மாஸ்டர் பிரிவு பாடிபில்டிங், வெயிட் லிஃப்ட், டெட் லிஃப்ட் னு மொத்தம் 500 பதக்கம், சான்றிதழ் வாங்கிருக்கேன். தேசிய அளவுல நடந்த பளு தூக்கும் போட்டியில 6 தடவை ஜெயிச்சுருக்கேன்."

Published:Updated:
88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா!

சின்ன தொப்பையைக் குறைப்பதற்கே இளைஞர்கள் பலரும் திணறிக்கொண்டிருப்பதை கவனித்திருப்போம். சேலத்தில், 88 வயதிலும் ஜிம்முக்குச் சென்று தன் உடலை `கட்டுமஸ்தானாக' வைத்துள்ளார் சொர்ணப்பா. உடம்பை ஏற்றிப் பல இளைய பாடிபில்டர்களுக்குப் போட்டியாக, மேடையில் ராஜ தோரணையில் `போஸ்' கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார். பாடிபில்டிங், உடலும் மனமும் ஒருங்கே ஒத்துழைக்க வேண்டிய பந்தயம். அதில் உடலுக்குக் கொஞ்சம் கூடுதல் பங்கு உண்டு. இளைஞர்கள் மட்டுமே வரிசைகட்டிக் களமாடும் பாடிபில்டிங்கில் 88 வயது சொர்ணப்பா `கெத்து' காட்டுகிறார். சேலம் அம்மாபேட்டையில் ஜிம்மில் அவரை சந்தித்துப் பேசினோம். 

``சின்ன வயசுல எங்க வீட்டுக்குப் பக்கதுல ஒரு உடற்பயிற்சிக் கூடம் இருந்துச்சு. அங்க இருந்தவங்க எல்லாம் நல்ல `புஷ்டியா' இருந்தாங்க. நான் எங்க அம்மாட்ட என்னையும் அங்க சேர்த்து விடச்சொல்லி அடம் புடிச்சேன். அடம் தாங்க முடியாத எங்க அம்மா என்னைக் கூட்டிப்போய், `இவனையும் சேர்த்துக்குங்கனு' சொன்னாங்க. அங்க இருந்த மாஸ்டர் பேரு ஜோசப். வெள்ளைக்கார துரை. என்னைப் பார்த்த அவரு `நாளையிலிருந்து வா'னு சொன்னாரு. அங்க பாடிபில்டிங், வெயிட் லிஃப்டிங், டெட் லிஃப்டிங் என சகலத்தையும் சொல்லித் தந்தாங்க. 13 வயசுல 49 கிலோ இருந்தேன்.

அப்போ, சேலம் அருங்காட்சியத்துல நடந்த பாடிபில்டிங் போட்டியில் முதலிடம் பிடிச்சேன். தினமும் 15 நாட்டுக் கோழி முட்டை பச்சையா சாப்பிடுவேன். எனக்கு 21 வயசு இருக்கப்ப, எங்க ஜிம்முல தண்டால் போட்டி வச்சாங்க. சொன்ன நம்ப மாட்டீங்க. ஆயிரம் தண்டால் எடுத்தேன். இப்ப  தொடர்ச்சியா 50 தண்டால் எடுப்பேன்" எனச் சொன்னவர், தாண்டால் எடுத்துக் காண்பித்தார். தண்டால் எடுத்து முடித்த கையோடு தான் வாங்கிய பதக்கங்கள் குறித்துப் பேசினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சேலத்துல மாடர்ன் தியேட்டர்ஸ் பிரபலம். எனக்கு உடம்பு கச்சிதமா இருந்ததால, அங்க சண்டைக்கு டூப் போடுற வேலைக்குப் போவேன். 1951-ல இருந்து 1960 வரைக்கும் அங்க வேலை பார்த்தேன். நாடு முழுக்க நிறைய இடங்கள் சுத்தியிருக்கேன். இதுவரை பாடிபில்டிங், மாஸ்டர் பிரிவு பாடிபில்டிங், வெயிட் லிஃப்ட், டெட் லிஃப்ட் னு மொத்தம் 500 பதக்கம், சான்றிதழ் வாங்கிருக்கேன். தேசிய அளவுல நடந்த பளு தூக்கும் போட்டியில 6 தடவை ஜெயிச்சுருக்கேன். மாஸ்டர் பிரிவு `ஆணழகன்' போட்டியில் ஆறு  தடவை ஜெயிச்சுருக்கேன். இன்னைக்கும் எங்க போட்டி நடந்தாலும் நான் அங்க இருப்பேன். இப்ப வரைக்கும் காலைல 5 ரொட்டி, 5 முட்டை (பச்சையாக), மதியம் கொஞ்சம் சாப்பாடு, இரவு 5 முட்டை (பச்சையாக), 5 ரொட்டி எடுத்துக்கிறேன். எனக்கு எல்லா வண்டியும் ஓட்டத் தெரியும். ஆனா, எதையும் தொட மாட்டேன். பெரும்பாலும் நடந்தேதான் போவேன்.

8 வருஷத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி இறந்துட்டா. அவ இறந்து 15 நாளுக்குப் பிறகு, மேட்டூர்ல ஆணழகன் போட்டி நடந்தது. அதில் நான் கலந்துகிட்டு ஜெயிச்சேன். என் பொண்டாட்டி இறந்தது எப்படியோ போட்டி நடத்துனவுங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. பொண்டாட்டி இறந்தும் போட்டிக்குத் தயாராகி வந்ததைக் குறிப்பிட்டு என்னைப் பெருமையாகப் பேசி கௌரவப்படுத்தினாங்க. எனக்கு ஒரே ஒரு ஆசைதான். பெரிய அளவுல நடக்குற ஆணழகன் போட்டியில கலந்துக்கணும். 

போட்டி தொடங்குறதுக்கு முன்னாடி, 50 கிலோவைத் தலையில் வெச்சுகிட்டு, 50 தடவை உட்கார்ந்து எந்தரிக்கணும். அப்புறம் போட்டியில கலந்துகிட்டு ஜெயிக்கணும். அதுக்காக தான் இப்போ பயிற்சி எடுத்துகிட்டு இருக்கேன். எனக்கு ஒரு பையன், அஞ்சு பொண்ணுங்க. எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. பையன் கோயம்புத்தூருல இருக்கான். நான் இங்க இருக்கேன். என் தேவைக்கு யாருகிட்டேயும் கேட்டது இல்ல. ஒண்ணு தம்பி... எனக்கு மது, டீ, காபி குடிக்கிற பழக்கம் கிடையாது. இப்போ சுக்குக் காபி, கிரீன் டீ குடிக்கிறேன்" என தம்ஸ் அப் காட்டினார்.

ஜிம்மே கதியென கிடக்கும்  88 வயது இளைஞருக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism