Published:Updated:

இன்டர்ஸ்டெல்லரைத் தொட்ட இரண்டாவது விண்கலம்... வாயேஜர் 2-வின் 'வாவ்' அம்சங்கள்! #Voyager2

வாயேஜர்-2 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு வாயுக்கோள்களையும் கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இன்டர்ஸ்டெல்லரைத் தொட்ட இரண்டாவது விண்கலம்... வாயேஜர் 2-வின் 'வாவ்' அம்சங்கள்! #Voyager2
இன்டர்ஸ்டெல்லரைத் தொட்ட இரண்டாவது விண்கலம்... வாயேஜர் 2-வின் 'வாவ்' அம்சங்கள்! #Voyager2

41 ஆண்டுகளுக்கு முன் நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 தற்போது சூரிய குடும்பத்தைக் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடையும் மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது நாசாவின் வாயேஜர்-2. ஏற்கனவே வாயேஜர்-1 2012-ம் ஆண்டு இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடைந்தது குறிப்பிடத்தக்கது. 40 வருடங்களுக்கு மேல் பயணித்து வரும் வாயேஜர்-2 ஐப் பற்றிய ஐந்து முக்கியமான விஷயங்கள் இதோ…!

1.இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடையும் இரண்டாவது விண்கலம்

2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வாயேஜர்-2 சூரியக் குடும்பத்தின் எல்லைப் பகுதியான ஹெலியோபாஸ் பகுதியைச் சென்றடைந்தது. இங்கு கோள்களின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும்போதிலும் சூரியனின் ஈர்ப்புவிசை, ரேடியோ அலைகள் மற்றும் காந்த விசை வாயேஜர் 2-ன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு நவம்பரில் வாயேஜர் 2ஐ-ச் சுற்றியுள்ள பகுதியில் ரேடியோ அலைகள் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சின் அளவில் மிகப்பெரிய மாற்றம் வருவதை நாசா கண்டறிந்தது. தீவிர ஆய்வுக்குப் பின்னர், வாயேஜர்-2 ஹெலியோபாஸ் பகுதியைக் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடைந்திருப்பதை நாசா உறுதி செய்திருக்கிறது. தற்போது வாயேஜர்-2 பூமியிலிருந்து கிட்டத்தட்ட 17.91 பில்லியன் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் நமக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போல 120 மடங்கு தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

2. நீண்டநாள் நீடிக்கும் விண்வெளிப் பயணம்

வாயேஜர் சீரிஸின் முதல் விண்கலமான வாயேஜர்-2 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 20 அன்று விண்ணில் ஏவப்பட்டது. மற்றொரு விண்கலமான வாயேஜர்-1 இரு வாரங்கள் கழித்த பிறகு செப்டம்பர் 5 அன்று விண்ணில் ஏவப்பட்டது. சூரியக் குடும்பத்தில் வாயுக் கோள்களான வியாழன், சனி மற்றும் அவற்றின் துணைக் கோள்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக வாயேஜர்-2 விண்ணில் ஏவப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வாயேஜர் சீரிஸின் 40 வருட நிறைவு விழாவின்போது “சூரியக் குடும்பத்திற்கு வெளியே இரு கண்களைப் போல வாயேஜர் 1 மற்றும் 2 திகழ்கிறது” என நாசா கொண்டாடியது. வாயேஜர்-2-ற்குப் பூமியிலிருந்து ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் சராசரியாக 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது.

3. வாயுக்கோள்களைக் கடக்கும் முதல் விண்கலம்

வாயேஜர்-2 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு வாயுக்கோள்களையும் கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கோள்களின் ஈர்ப்பு சக்தி வழியாக இன்டர்ஸ்டெல்லர் பகுதியை விரைவாகச் சென்றடைந்திருக்கிறது வாயேஜர்-2. வாயேஜர்-1 செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே உள்ள “குறுங்கோள்கள்” பகுதியைத் தாண்டும்போது வாயுக் கோள்களின் பாதையைவிட்டு விலகிச் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

4. வேற்றுகிரகவாசிகளைத் தொடர்புகொள்ளத் தனி அமைப்பு

வாயேஜர்-2 விண்கலத்தில் உள்ள கருவிகளில் 90 நிமிட மேற்கத்திய இசை, பூமியில் இருப்பிடத்தைக் குறிக்கும் 115 க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வாயேஜர் பயணம் குறித்த தகவல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வைத்துள்ளது நாசா. மனிதர்களுடனான தொடர்பை குறிக்கும் வகையில் 55 மொழிகளில் செய்தியையும் பதிவு செய்து வைத்துள்ளது நாசா. இந்தத் தகவல்கள் உதவியோடு வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்ள முடியும் என நாசா கருதுகிறது.

5. இன்னும் இயக்கத்திலிருக்கும் கருவிகள்

இந்தப் பயணத்தின் அடுத்தகட்டமாக சூரியக் குடும்பத்தின் எல்லைப்பகுதி மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பகுதியைப் படம்பிடிக்க நாசா திட்டமிட்டுள்ளது. வாயேஜர்-2 விண்கலத்தில் இன்னும் இயக்கத்திலிருக்கும் கருவிகள் உதவியுடன் ஹெலியோபாஸ் பகுதியின் அமைப்பு மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பகுதியில் சூரியனின் தாக்கம் குறித்த விவரங்களைப் பெற நாசா திட்டமிட்டுள்ளது. இன்னும் நெடுநாட்களுக்கு வாயேஜர் பயணம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீடுழி வாழ்க!