Published:Updated:

`கர்ப்பிணிகள் ரொம்ப சிரமப்படறாங்க!' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்

`கர்ப்பிணிகள் ரொம்ப சிரமப்படறாங்க!' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்
`கர்ப்பிணிகள் ரொம்ப சிரமப்படறாங்க!' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்

``சேதமடைந்த பாலத்தைச் சரிசெய்யுங்கள் என்று அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால், அலட்சியமாக இருக்கிறார்கள். இனி தாமதிக்க மாட்டோம்; முற்றுகைதான்" என அரியலூரில் கிராம மக்கள் போராடத் தயாராகிவிட்டார்கள்.


 

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியிலிருந்து முனியன்குறிச்சி, நெருஞ்சிக்கோரை உள்ளிட்ட நான்கு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காட்டோடையின் குறுக்காகப் பாலம் கட்டப்பட்டது. இதனால், அரசுப்  பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தன. இந்நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக, பாலத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதம் அடைந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இதன் காரணமாக, முனியங்குறிச்சி நெருஞ்சிக் கோரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள், விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலம் சேதமடைந்தது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், 7 கிலோ மீட்டர் சுற்றி வரக்கூடிய  நிலை உள்ளது.  இதனால், ஆபத்தான நேரங்களில் மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியாமல் உள்ளனர். மேலும், உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் ஏழு கிலோமீட்டர் நடந்தே செல்லவேண்டிய  நிலைக்கு மாணவ மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். 


பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் பேசுகையில், ”இந்தப் பாலம் சேதம் அடைந்துள்ளதாகவும், அதை மழைக் காலத்துக்குமுன்பே சரி செய்யுங்கள் என்றும் அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தோம். அவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள்.  அதோடு சரி. காட்டாற்று வெள்ளத்தால் இப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. இதைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் ஏழு  கிலோமீட்டர் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது. கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக இருந்தால், மிகுந்த  சிரமம் அடைகிறார்கள். நாங்கள் படும் வேதனையை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் இந்தப் பாலத்தைக் கட்டித் தரவேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டிப் போராடுவோம்" என்று எச்சரித்தனர்.