Published:Updated:

படைப்புழுவுக்கு எதிராக நாவாய்ப்பூச்சி... மக்காச்சோளத்தின் `ஹீரோ வில்லன்' மோதல்!

நெல் பயிரை படைப்புழு தாக்கினால், மகசூல் வெகுவாக குறையும். தற்போது 50 ரூபாய்க்கு வாங்கும் அரிசி, 200 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்படும். இந்நிலையில், மக்காச்சோளத்தைத் தாக்கிவரும் படைப்புழுவை அழிக்க ஒரு ஹீரோவை களத்தில் இறக்கிவிடும் பணிகள் முனைப்பாக நடந்து வருகின்றன. 

படைப்புழுவுக்கு எதிராக நாவாய்ப்பூச்சி... மக்காச்சோளத்தின் `ஹீரோ வில்லன்' மோதல்!
படைப்புழுவுக்கு எதிராக நாவாய்ப்பூச்சி... மக்காச்சோளத்தின் `ஹீரோ வில்லன்' மோதல்!

னிதகுலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்குமான தீர்வை உருவாக்கியே வைத்திருக்கிறது இயற்கை. இயற்கையைப் புரிந்துகொண்டால் பல்வேறு சூழலியல் சிக்கலிலிருந்து நாம் தப்பிக்கலாம். நமது சுயநலத்துக்காக இயற்கை சமநிலையை அழித்ததன் விளைவு, மனிதர்கள் மட்டுமல்ல; பயிர்களும் பேராபத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வயலிலும் பயிர்களைத் தின்னும் வில்லன் பூச்சிகளும், அந்த வில்லன்களை மட்டுமே தின்னும் ஹீரோ பூச்சிகளும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் ஹீரோ, பயிரின் வெளிப்பகுதியில் வில்லன்களைத் தேடிக்கொண்டேயிருப்பார். அவருக்கு பயந்து, வில்லன்கள் பயிர்களின் உள்ளும், இலைகளுக்குப் பின்னாலும் மறைந்து வாழும். இந்த நிலையில், விவசாயிகள் பயிர்களுக்குத் தெளிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளால் முதலில் பாதிக்கப்படுவது ஹீரோக்கள்தாம். 

மருந்தடித்து மருந்தடித்து ஹீரோக்களை ஒழித்துவிட்டோம். தற்போது வில்லன்கள் கூட்டம் அதிகரித்து, பயிர்களை சர்வநாசம் செய்து வருகின்றன. சமீபத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது. இதனால் பெரும் சேதத்தை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். இந்தப் படைப்புழு எந்த ரசாயன மருந்துக்கும் கட்டுப்படுவதில்லை. ரசாயன மருந்துகளுக்கு எதிராக, எதிர்ப்பு சக்தியை அதிகமாக வளர்த்துக்கொண்டுவிட்டது. எனவே குறைந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பரவிவிட்டது.

மக்காச்சோளத்தை அடுத்து, கம்பு, சோளம், கரும்பு எனப் புல்லினப் பயிர்களை வரிசையாகத் தாக்கிவருகிறது. இதன் அடுத்த தாக்குதல் நெல் பயிர் மீது இருக்கலாம் என விஞ்ஞானிகள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். நெல் பயிரை படைப்புழு தாக்கினால், மகசூல் வெகுவாக குறையும். தற்போது 50 ரூபாய்க்கு வாங்கும் அரிசி, 200 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்படும். இந்நிலையில், மக்காச்சோளத்தைத் தாக்கிவரும் படைப்புழுவை அழிக்க ஒரு ஹீரோவை களத்தில் இறக்கிவிடும் பணிகள் முனைப்பாக நடந்து வருகின்றன. 

கொலைகார நாவாய்ப்பூச்சிதான் அந்த ஹீரோ. ஆங்கிலத்தில் `ரெடுவீட் பக்‘ என்கிறார்கள். இதன் வேலையே புழுக்களை தின்பதுதான். இதற்கு `சிங்கிளாய்ப்' போய் பழக்கமேயில்லை. கொத்துக் கொத்தாக சிறு படைபோலத்தான் போகும். தற்போது, படைப்புழுக்களுக்கும், கொலைகார நாவாய்ப் பூச்சிகளுக்குமான யுத்தகளம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கொலைகார நாவாய்ப் பூச்சியைப் பற்றி 2015-ம் ஆண்டே பசுமை விகடனில் பதிவு செய்திருக்கிறோம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஏற்கெனவே மாவுப்பூச்சிகளுக்கு எதிரான வண்டு ஒன்றை வயல்களில் விட்டு, அதன் பரவலை தடுத்தது நினைவில் இருக்கலாம். தற்போதும் அதே வேலையைத்தான் செய்யப் போகிறார்கள். ஆய்வகங்களில் கொலைகார நாவாய்ப் பூச்சிகளை உருவாக்கி, அதை வயல்களில் விடும் யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் வேளாண் ஆராய்ச்சியாளர்கள். ஹைதராபாத்திலுள்ள தேசியப் பயிர்வள மேலாண்மை நிறுவனம், இதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், வடமலைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த உழவர் ஆர்வலர் குழுவினர், இந்தப் பூச்சிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள். வடமலைக்குறிச்சி, வீரசெல்லையாபுரம், மூலிப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை முயற்சியாக படைப்புழு தாக்கியுள்ள வயல்களில் ரெடுவீட் பூச்சிகளை விட்டிருக்கிறார்கள். 

இது தொடர்பாக அருப்புக்கோட்டை வேளாண் வணிக அலுவலர் முத்தையாவிடம் பேசினோம். ``ரெடுவீட் பக் எனப்படும் இந்தப் பூச்சி, புழுக்களைத் தின்னும் குணமுடையது. வெண்டைக்காய், கத்திரிக்காயில் உள்ள காய்ப்புழுக்களை வேட்டையாடும். ஒரு பூச்சி ஒரு நாளைக்குப் பத்து முதல் பதினைந்து புழுக்களைத் தின்னும். பசியெடுக்கும் போதெல்லாம் தேடித்தேடி புழுக்களை பிடித்துத் தின்னும். இதன் முட்டைப் பருவம் ஐந்து முதல் ஏழு நாள்கள். அதன் பிறகு பொறியும். அதை ஆய்வுக்கூடத்தில் வளர்த்து 25 முதல் 35 நாள்களுக்குள் வயலில் இறக்கிவிட வேண்டும். இந்தப் பூச்சிகளை ஆய்வகங்களில் வளர்க்கும் முறைகள் குறித்து தேசிய பயிர் வள மேலாண்மை நிறுவனத்தின் இணையதளத்தில் வீடியோ இருக்கிறது. அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இங்கு வந்தும் தெரிந்துகொள்ளலாம். மிகவும் எளிமையான தொழில்நுட்பம்தான் யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம்.

இது பொரிந்ததிலிருந்து 45-வது நாளில் முட்டையிடும். 25 முதல் 30 முட்டைகள் வரை இடும். தற்போது ஒரு பூச்சி 2.50 காசு விலையில் விற்கிறார்கள். ஒரு ஏக்கருக்கு எத்தனை பூச்சிகளை விடவேண்டும் என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. 

ஒவ்வொரு வயலிலும் இந்தப் பூச்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும். இந்தப் பூச்சிகளை வயலில் விட்ட பிறகு, ரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தால், எந்தப் பயனும் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ரெடுவீட் பக், படைப்புழுவுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன’’ என்றார்.

படைப்புழுக்களை அழிக்கவே முடியாது என்று அச்சத்தில் இருந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு ரெடுவீட் பூச்சி, மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அரசு, இதை அதிக அளவில் உற்பத்திசெய்து வயல்களில் விடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.