Published:Updated:

`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்பம்

`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’  -  கலங்கிய காடுவெட்டி குரு குடும்பம்
`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்பம்

காடுவெட்டி குரு பயன்படுத்திவந்த இரண்டு ஸ்கார்பியோ கார்களையும், ஒரு டெம்போ வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறது வங்கி. இதுவரையிலும் கட்சித் தலைமை எதுவும் கண்டுகொள்ளாததால், குருவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.,

அவர் இறந்த பிறகு குருவின் மனைவி, 'சொத்திற்காக எனது பிள்ளைகளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று கடிதம் எழுதியது, அவரது மகன் கனலரசன், அம்மாவை அய்யாவின் பிடியில் வைத்திருக்கிறார் என்றும். குருவின் தங்கைகள் எங்களது குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக ராமதாஸ் அழித்துக்கொண்டிருக்கிறார்' என்றும் பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தது என குருவின் குடும்பமே நாள்தோறும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ஏற்கெனவே அவரது குடும்பம் கடனில் இருப்பதாகவும், அவருடைய வீடு, கார், சொத்துக்கள் உட்பட ஏலம் போவதாகவும் விகடனில் செய்தியைப் பதிவுசெய்திருந்தோம். இந்நிலையில், மகேந்திரா ஃபைனான்ஸில் கொளஞ்சி மற்றும் அவரது உறவினர் பெயரில் இரண்டு ஸ்கார்பியோ கார்களை வாங்கியிருக்கிறார். அவர் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, கார்களுக்கு உண்டான லோனை கட்டாமால் இருந்திருக்கிறார். இதனால், வங்கி ஊழியர்கள் அவர் வைத்திருந்த டெம்போ ட்ராவலர் மற்றும் இரண்டு ஸ்கார்பியோ சொகுசு கார்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது குருவின் அம்மா, காரை பறிமுதல் செய்யவந்த அதிகாரிகளிடம், தம்பி இந்தக் காரை எடுத்துட்டு போனீங்கன்னா எங்கள் ’குடும்ப மானமே’ போய்விடும். கொஞ்சம் டைம் கொடுங்கப்பா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரிகள், உங்களுக்கு டைம் கொடுத்தாச்சும்மா இதுக்கு மேலயும் கொடுக்க முடியாதுமா... என்று சொல்லி காரை எடுத்துச்சென்றிருக்கிறார்கள். காடுவெட்டி குரு ஆசைஆசையாக வைத்திருந்த காரை கூட கட்சியினரால் மீட்டுக்கொடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள், குருவின் ஆதரவாளர்கள்.