Published:Updated:

'இது தாயம்மாள் வனம்!' ஓய்வூதியத்தில் வனம் உருவாக்கும் பாட்டி

திருப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் ஓய்வூதியத்தை வைத்து தன் நிலத்தில் ஓர் அடர் வனத்தையே உருவாக்கி அசத்திக்கொண்டிருக்கிறார்

'இது தாயம்மாள் வனம்!' ஓய்வூதியத்தில் வனம் உருவாக்கும் பாட்டி
'இது தாயம்மாள் வனம்!' ஓய்வூதியத்தில் வனம் உருவாக்கும் பாட்டி

தாயம்மாள்... தன் வாழ்வின் பாதி நாள்களைப் பள்ளி ஆசிரியையாகவே கழித்து முடித்த இந்த மூதாட்டிக்கு இயற்கையின் மீது எப்போதுமே தீராக் காதல். சிறு வயது முதற்கொண்டே மண்ணையும், மரங்களையும் நேசித்துக் கிடந்தவர், தற்போது தன்னுடைய சொந்த நிலத்தில் ஓர் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் மும்முரமாகக் களமிறங்கி இருக்கிறார். அதற்காக தன்னுடைய 8 ஏக்கர் நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட காட்டு மரங்களை நட்டுவைத்து, அனுதினமும் அவற்றைப் பராமரிப்பதே தன் தலையாய கடமையாகச் செய்துகொண்டிருக்கிறார்.

திருப்பூரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பொங்கலூர். அங்குள்ள தாயம்மாள் பாட்டியின் வனத்தில்தான் அவரை நேரில் சந்தித்தோம். ``இன்றைக்கு ஊர் முழுக்கக் காற்று மாசடைந்து செத்துக்கிடக்குது. காடுகளை எல்லாம் அழிச்சிட்டே இருக்காங்க. நகரப் பகுதிகளில் வாழவே முடியாத சூழலும் உண்டாகிடுச்சு. நம்மால் முடிந்த அளவுக்குக் காடுகளை உருவாக்கணும் கண்ணுங்களா!" என்கிற வார்த்தைகளோடு நம்மிடம் பேச ஆரம்பித்தார் தாயம்மாள்.

``எனக்கு சொந்த ஊரே பொங்கலூர்தான். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இங்கேயேதான். இதே ஊரில் இருக்கிற பள்ளிக்கூடத்தில்தான் படித்து முடித்தேன். இங்கேயே பள்ளி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தேன். மொத்தம் 37 வருஷம் ஆசிரியர் வாழ்க்கை. கணிதமும், சமூக அறிவியலும்தான் என்னுடைய சப்ஜெக்ட்ஸ். டவுசர் மாட்டிக்கிட்டு என் முன்னாடி உட்கார்ந்து படித்த எத்தனை குழந்தைகள் இன்றைக்கு என் தோலுக்கு மேல் வளர்ந்து நிக்குதுங்க. சின்ன வயசிலிருந்தே எனக்குக் காடுகள், மரங்களென்றால் கொள்ளைப் பிரியம். அப்போதெல்லாம் எங்கள் வீடும் தோட்டம் தொறவுமாகத்தான் இருந்துச்சு. ஆனால் ஒரு காலத்துக்குப் பிறகு அவை அத்தனையும் விற்க வேண்டிய நிலைமை. என் கண்ணு முன்னாடியே எங்களுடைய நிலம் அடுத்தவர்களுக்குச் சொந்தமானதா மாறிடுச்சு. அன்றைக்கே முடிவு பண்ணேன். `நாம வளர்ந்து, ஒரு நாள் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற காலம் வரும். அப்போது நமக்கென்று சொந்தமா ஒரு நிலத்தை வாங்கி, அதில் நம்ம மனசுக்குப் பிடித்த செடி கொடிகளை நட்டு வெச்சு வளர்க்கணும்னு. அந்த நேரத்துக்காகத்தான் காத்துக்கிட்டும் இருந்தேன். நான் நினைத்ததுபோலவே வேலையில் ஒரு நல்ல நிலைமைக்கும் வந்தேன். அதில் நான் சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில்தான் இந்த நிலத்தையும் வாங்கினேன். இந்த வயசில் நிலத்தை வாங்கிப் போட்டு இவ என்னத்தப் பண்ணப் போறான்னு, அப்போ என் காதுபடவே ஏராளம் பேர் கேட்டிருக்காங்க. அப்படிக் கேட்ட எல்லோர்கிட்டேயும் நான், `கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க!'-னு மட்டும்தான் பதிலைச் சொல்லி வைத்தேன். ஏன்னா, என் கணவர் எனக்குக் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அப்படிப்பட்டது. ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துபோயிட்டார். என் மகனும் சாலை விபத்தில் அடிபட்டு மரணமடைந்தான். இப்படி அடுத்தடுத்த பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும், என்னை அதிலிருந்து மீட்டெடுத்ததும் இந்த நிலம்தான். 

அதிகபட்சம் 4 நாள்களுக்கு மேல் என்னால் இந்த நிலத்தில் கால் வைக்காமல் இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் நிலம் முழுக்க தென்னை மரங்களைத்தான் வளர்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதன்பிறகுதான் நம் நிலத்தை வெறும் வருமானத்துக்கு உரிய வாய்ப்பாக மட்டும் பார்க்கக் கூடாது. காசு பணத்தைக் கொட்டிக் கொடுக்காட்டியும் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உதவியாக நம் நிலம் இருக்க வேண்டும்னு முடிவு பண்ணேன். அதற்காக `வனத்துக்குள் திருப்பூர்' என்கிற ஒரு அமைப்பை அணுகினேன். அவர்கள் நம் மண்ணுக்கு ஏற்ற மரக்கன்றுகளைக் கொடுத்து எனக்கு உதவினார்கள். இப்போது என் நிலத்தில் மலைவேம்பு, மருதமரம், புளியமரம், அத்திமரம், மூலிகை மரம், அரசமரம், நொச்சி, கொடுக்காப்புளி எனப் பலவகை மரங்கள் வளர்ந்து நிற்குது. அதேசமயம் தென்னை மரங்களும் இருக்கு. தென்னையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வெச்சுதான் மற்ற மரங்களுக்கான செலவுகளை ஈடுகட்டுறேன். அத்துடன் மாதாமாதம் எனக்குக் கிடைக்கும் ஓய்வூதிய பணமும் முழுக்க இந்த மரங்களுக்குத்தான் போய்ச் சேருது. போன வருடம் பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டு மரங்கள் எல்லாம் பாதிப்பைச் சந்திந்தபோதுகூட, தண்ணீர் மட்டும் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கி ஊற்றி மரங்களைக் காப்பாற்றினேன். அதுபோக இப்போது சொட்டு நீர்ப்பாசனமும் போட்டிருக்கிறேன். பூச்சிக்கொல்லி மருந்துகள், இரசாயன உரங்கள் எல்லாம் தவிர்த்துவிட்டு இயற்கையான வனமாகவே என் நிலத்தை உருவாக்க முயல்கிறேன். ஏன்னா, என் பேரப் பிள்ளைகளுக்குக் கொடுக்க நான் பெரிய அளவில் சேமித்து வைத்த சொத்து இந்த நிலமும், இங்கிருக்கும் மரங்களும்தான்!" என்றபோது தாயம்மாளின் கண்கள் உணர்ச்சி பொங்க மின்னின.

உங்களது சந்ததிக்கு மட்டுமல்ல, இந்த ஊரின் சுற்றுச்சூழலுக்கும் நீங்கள் நட்டு வைத்த மரங்கள் கைகொடுக்கும் !