Published:Updated:

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?
வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

நான் பொதுத்துறை வங்கியொன்றில் 18 ஆண்டு காலத்திற்கு வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். தற்போது இந்தக் கால அளவை 10 ஆண்டுகளாகக் குறைக்கும்படி வங்கியில் கேட்டேன். ஆனால், அப்படிக் குறைப்பதைவிட ஒவ்வொரு மாதமும் மாதத் தவணையோடு கூடுதல் தொகை செலுத்திவந்தால் கடன் தொகையை விரைவாகக் கட்டிமுடிக்கலாம் என்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியா?

ராஜகோபால், தென்காசி

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் (ஓய்வு)

“அவர்கள் சொன்னது சரியே. வங்கிக் கடனைப் பொறுத்தவரை, நாம் செலுத்தும் மாதத் தவணையில், அந்த மாதத்திற்கான வட்டியும், கடன் தொகையின் (பிரின்சிபிள் அமவுன்ட்) ஒருபகுதியும் மட்டுமே கழியும். கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவைக் குறைத்தாலும் இதேபோலத் தான் கழிக்கும் முறை இருக்கும். இதற்குப் பதிலாக, மாதத் தவணையுடன் கூடுதலாகப் பணம் செலுத்தும் யோசனையைக் கூறியுள்ளார்கள். பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, மாதத்தவணையைவிட கூடுதலாகச் செலுத்தும் தொகை, நேரடியாகக் கடன் தொகையில் கழிக்கப்படும். எனவே, இந்த முறையால் எளிதில் கடனை அடைக்க இயலும். ஆனால், தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, கூடுதலாகப் பணம் செலுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு.” 

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

என் வயது 30. மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் - ரூ.3,000, மிரே இந்தியா அஸெட் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.4,000, பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் - ரூ.5,000 ஆகிய ஃபண்டுகளில்  எஸ்.ஐ.பி முறையில் 12 ஆண்டுகள் இலக்குடன் முதலீடு செய்துவருகிறேன். இதில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா?

விக்னேஷ் குமார், சென்னை

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“நல்ல திட்டங்களைத்தான் தேர்வு செய்திருக் கிறீர்கள். முதலில் உள்ள இரண்டு திட்டங்களும் ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தது. அதற்குப் பதிலாக, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பிரைமா ஃபண்டைச் சேர்க்கலாம். மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களான ஆதித்ய பிர்லா சன்லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபண்டுகளையும் சேர்க்கலாம். அவ்வப்போது மறுஆய்வு செய்யவும்.”

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

வியாபாரம் மூலமான எனது ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாயாக உள்ளது. நான் ஜி.எஸ்.டி-யின்கீழ் பதிவு செய்யவேண்டியது கட்டாயம் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

தங்கமணி, மதுரை

கே.வைத்தீஸ்வரன், ஆடிட்டர்

“உங்கள் பொருள்களை தமிழ்நாட்டிற்குள் மட்டும் விற்பனை செய்வதாக இருந்தால், உங்கள் ஆண்டு டேர்ன்ஓவர் ரூ.20 லட்சத்திற்குள் இருந்தால், ஜி.எஸ்.டி பதிவு செய்யத் தேவையில்லை. மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்வதாக இருந்தால், ஜி.எஸ்.டி பதிவு செய்வது அவசியம்.”

பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்குமா?

மகேஷ் குமார், பொள்ளாச்சி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை மட்டும் கணக்கில்கொண்டு முதலீடு செய்வது ஆபத்தானது. வீழ்ச்சியிலிருக்கும் ஒரு சந்தை மேலும் இறங்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது அளவாக, சிஸ்டமேட்டிக் முறையில் செய்வதே சிறந்தது. அப்படிப் படிப்படியாக முதலீடு செய்வதற்கு சந்தை நிலவரத்தைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. இன்றைக்கு ஆரம்பிப்பதே சிறப்பானது. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது இத்தகைய ‘டைமிங்’ உத்திகள் தேவையில்லை.’’

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

நான் ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். ஓய்வு நேரங்களில் மார்க்கெட்டிங் துறையில் ஈடுபடுகிறேன். இதிலிருந்து பெறும் கமிஷன் தொகையை வருமான வரிக் கணக்கில் எப்படிக் காட்டுவது?

வில்சன், நாகர்கோவில்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“உங்களுடைய மாத வருமானம் மற்றும் மார்க்கெட்டிங்கிலிருந்து வரும் கமிஷன் தொகை இரண்டையும் ஐ.டி.ஆர் 3 படிவத்தின்மூலம் கணக்கில் காட்டலாம். மார்க்கெட்டிங் கமிஷனைக் கணக்கிடும்போது, அதற்கான செலவுகளை கமிஷனிலிருந்து கழித்துவிட்டு, மீதித் தொகையை மட்டும் கணக்கிடவும்.”

நான் (வயது 30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். வரிச் சேமிப்பிற்காக ரூ.1 லட்சம் முதலீடு செய்ய விரும்புகிறேன்.  ஆலோசனையைக் கூறவும்.

கார்த்திகைச்செல்வன், திருச்சி.

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“உங்களது ஒரு லட்சத்திலிருந்து ரூ.4,000 வீதம் மாதாந்திர எஸ்.ஐ.பி முறையில் இன்வெஸ்கோ இந்தியா டாக்ஸ் பிளானிலும், எல்&டி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்டிலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு முதலீடு செய்யவும்.

மீதமுள்ள 52,000 ரூபாயை இரண்டாகப் பிரித்து, ரூ.26,000 வீதம் மொத்த முதலீடாக பிரின்சிபல் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்டிலும், டி.எஸ்.பி டாக்ஸ் சேவர் ஃபண்டிலும் முதலீடு செய்து பலன் பெறுங்கள்.”

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் எனது சம்பளம் ஆண்டுக்கு 15 லட்சம் என்பதால், 30% வருமான வரி வரம்பில் இருக்கிறேன். பங்குச் சந்தையில், பங்கு களை வாங்கி விற்பதன்மூலமாகவும் வருமானம் கிடைத்துள்ளது. இந்தக் குறுகிய கால முதலீட்டு லாபத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

செந்தில்குமார், சேலம்

ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்

“நீங்கள் ஏற்கெனவே 30% வரி வரம்புக்குள் இருந்தாலும்கூட, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை விற்பதன்மூலம் பெறும் குறுகியகால முதலீட்டு லாபத்திற்கு வருமான வரிச் சட்டப்படி 15% வரி மட்டும் கட்டினால் போதும்.”

நான் கணக்கு வைத்துள்ள பொதுத்துறை வங்கியில், காசோலை இருப்பவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் ரூ.1,000 வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இந்த ஆயிரம் ரூபாய், மாதத்தில் ஒருநாள் மட்டும் இருந்தாலே போதும். மாதம் முழுவதும் இருக்கத் தேவையில்லை என்கிறான் நண்பன். எது சரி?

ராஜ்குமார், மதுரை

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, சங்கரன்கோவில்

“ஒருநாள் மட்டும் ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்பது தவறு. மினிமம் பேலன்ஸ் தொகை என்பது அந்த மாதத்தின் சராசரியைக் குறிக்கும். ஆயிரம் ரூபாய் மினிமம் என்றால், ஒருநாள் இரண்டாயிரம், மறுநாள் பூஜ்ஜியம் என்றும்கூட பேலன்ஸ் இருக்கலாம்.

ஆனால், மொத்தத்தில் 30 நாள் சராசரியாக ஆயிரம் ரூபாய் வரவேண்டும். இந்த மினிமம் பேலன்ஸ் தொகை வங்கிக்கு வங்கி வேறுபடும்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு