Published:Updated:

தனித்துவமான உடைகள்!

தனித்துவமான உடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தனித்துவமான உடைகள்!

டிசைனர் ஸ்டோரிஎக்ஸ்பர்ட்

திருமணத்தின்போது மணப்பெண்ணுக்குப் பாரம்பர்யமான பட்டுப்புடவை அல்லது சடங்குகள் நிமித்தம் கூறைப்புடவை என்று மட்டும் இருந்த காலம் மாறிவிட்டது. லெஹங்கா, கவுன், டிசைனர் புடவைகள் என மணப் பெண்ணின் காஸ்ட்யூம்கள் நவீனமாகி வருகின்றன. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பொட்டீக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சங்கீத், முகூர்த்தம், ரிசப்ஷன் என திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் மணப்பெண்ணுக்குத் தனித்துவமான உடைகளை வடிவமைத்து வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார் சென்னை, ‘சஞ்சனா பொட்டீக்’கின் உரிமையாளர் ஜோத்ஸ்னா. இன்ஜினீயரான இவர் டிசைனிங் துறைக்கு வந்தது பற்றியும், மணமகளுக்கான உடை வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் பகிர்கிறார்.

தனித்துவமான உடைகள்!

“நான் படித்தது எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங். ஆனா, என் எண்ணமும் விருப்பமும் அழகியல் சார்ந்தே இருந்தது. நான் அணியும் உடைகளில் ஒரு  தனித்துவத்தைக் கொண்டுவருவதற்காக, அதில் சின்னச் சின்ன கைவேலைப்பாடுகள் செய்து போட்டுப்பேன். பார்க்கிறவங்க எல்லோரும் ‘வாவ்’ சொல்றதோட, அவர்களுக்கான பரிந்துரைகளையும் என்கிட்ட கேட்க ஆரம்பிச்சாங்க. ‘ஜோத்ஸ்னா, இதை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்தா அழகா இருக்குமா?’, ‘இந்த டிரஸ்ஸுக்கு என்ன ஹேர்ஸ்டைல், நகைகள் பொருத்தமா இருக்கும்?’னு என்கிட்ட கேட்டுக் கேட்டே, என் தன்னம்பிக்கை லெவலை அதிகரிக்கச் செய்த அவங்களுக்கு எல்லாம் நன்றி. அடுத்தகட்டமா, ஃப்ரெண்ட்ஸின்  உடைகளுக்கு ஸ்டோன் வொர்க் செய்றது, மேட்ச்சிங் ஆக்சஸரீஸ் செய்து கொடுக்கறதுனு டிசைனிங்கை ஒரு பொழுதுபோக்காகச்  செய்ய ஆரம்பிச்சேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தனித்துவமான உடைகள்!

படிப்பை முடிச்சதும் இன்ஜினீயர் வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஏன்னா, அந்த நேரத்தில் என் டிசைனிங் கனவைத் துரத்துறதைவிட, என் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டிய பொருளாதாரச் சூழலிலிருந்தேன். அலுவலகத்திலிருந்து திரும்பினதும் வீட்டு வேலைகள் எனக்காகக் காத்திருக்கும். இப்படி வாழ்க்கை மெஷின் மாதிரி போக ஆரம்பிச்சது. ஒரு கட்டத்தில், `சுவாரஸ்யம் இல்லாம ஒரு வேலையை செய்றதுக்கு, நமக்கு ரொம்பப் பிடிச்ச உடை வடிவமைப்பில் ஏதாச்சும் செய்யலாமே’னு ஒரு ஸ்பார்க் வந்தது. இன்ஜினீயரிங் வேலைபார்த்துட்டே ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். இன்னொரு பக்கம், பொட்டீக் ஆரம்பிக்கத் தேவையான முதலீட்டை என் சம்பளத்தில் இருந்து சேமிக்கத் தொடங்கினேன். ரெண்டு வருஷங்களில், அதன் தொழில்நிமித்த விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டேன். ‘இது நம்ம கனவை நனவாக்க சரியான நேரம்’னு தோணின ஒரு நல்ல நாள்ல, இன்ஜினீயர் வேலையை விட்டுட்டு பொட்டீக் தொடங்குறதுக்கான ஏற்பாடுகள் செய்ய களத்தில் இறங்கினேன்.

தனித்துவமான உடைகள்!

இடம் தேர்வு செய்றதில் தொடங்கி, கடைக்கான உரிமம் பெறுவது வரை நிறைய சவால்களை எதிர்கொண்டேன். ஆரம்பத்தில்   கிடைச்சதெல்லாம் பட்ஜெட் வாய்ப்புகள்தான். அதில் என்னை நிரூபிச்சாதான் அடுத்தகட்ட நகர்வு இருக்கும்னு முடிவுசெஞ்சு முழு உழைப்பையும் போட்டேன். என் நம்பிக்கைக்கான பலன் கிடைச்சது. நான் டிசைன் செய்து கொடுத்த  உடைகளே எனக்கான விளம்பரமா மாற, என்னைத் தேடி மக்கள் வர ஆரம்பிச்சாங்க. திருமணங்களுக்கு மட்டுமல்லாம மாடலிங் செய்பவர்களுக்கான உடை வடிவமைப்பு ஆர்டர்களும் வந்தன. ஐயாயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை, வேலைப்பாடுகளுக்குத் தகுந்த கட்டணம் வசூலிச்சேன். சின்ன ஆர்டர், பெரிய ஆர்டர்னு என் அணுகுமுறையிலோ, வேலைத் தரத்திலோ எந்தப் பாரபட்சமும் இருக்காது. வாடிக்கையாளர்களின் மன நிறைவுதான் முக்கியம் எனக்கு.

தனித்துவமான உடைகள்!

மணப்பெண்ணுக்கான உடை வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு  முறை பிரைடல் டிரஸ் டிசைன் பண்ணும்போதும்,  அது எனக்கு ஒரு பிரசவம் மாதிரிதான். டிசைன் தொடங்கி கலர்ஸ் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அதன் ப்ளஸ், மைனஸ் என்னன்னு கஸ்டமர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிடுவேன். தன் திருமண உடைகள் பற்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய கனவு இருக்கும். ஆனால், சில பெண்களுக்குதான் தங்களுக்கு எது பொருந்தும், பொருந்தாது என்பதில் தெளிவு இருக்கும். சிலர், ஆன்லைனில் மாடல் பார்த்தோ, பிரபலங்களின் புகைப்படங்களைப் பார்த்தோ, அதேபோல தனக்கும் செய்துதரச் சொல்லிக் கேட்பாங்க. அது அவங்களுக்கு எந்தளவுக்கு சூட் ஆகும், ஆகாதுனு நாம சொல்றதையும் தாண்டி, ‘எனக்கு இதுதான் வேணும்’னு ஆசைப்படுவாங்க. அவங்களுக்கு எந்த ஏமாற்றமும் ஏற்பட்டுவிடாத வகையில், அந்த டிசைனில் சிலபல மாற்றங்களைச் செய்துகொடுத்து திருப்திப்படுத்த, நான் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். யெஸ்... மணமகள் விரும்பும் உடையை அவங்களோட உடல்வாகுக்கு  ஏற்ற மாதிரி வடிவமைப்பதில்தான் இருக்கிறது ஒரு டிசைனரின் திறமை.

தனித்துவமான உடைகள்!

டெலிவரியைப் பொறுத்த வரை, கேட்கிற தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே எனக்கான டெட்லைனாக செட் செய்துகிட்டு,  உடையை மணப்பெண் கைகளில் கொடுத்துடுவேன். அப்போதுதான் சின்னச் சின்ன மாறுதல்கள் இருந்தாலும் கடைசி நேரப் பரபரப்பு இல்லாம நேர்த்தியாகச் செய்துகொடுக்க முடியும். ஒருமுறை நான் வடிவமைத்த எந்த டிசைனும், அடுத்த முறை வராமல் பார்த்துக்குவேன். ஹேண்ட் எம்ப்ராய்டரிதான் என் ஸ்பெஷல்’’ என்கிறவரின் ஜோத்ஸ்னாவின் ரசனையான வேலைப்பாடுகளுக்குப் பலனாக ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது இவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி! 

சு.சூர்யா கோமதி