Published:Updated:

பேரழகின் ரகசியம்!

பேரழகின் ரகசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பேரழகின் ரகசியம்!

எக்ஸ்பர்ட்

திருமணப் பெண்ணுக்கு கிராண்ட் உடைகள், காஸ்ட்லி நகைகள் என எல்லாமே சிறப்பாக இருந்தாலும் சரியான மேக்கப் தேர்வு இல்லையெனில், ஒட்டுமொத்த தோற்றமும் டல்லாகிவிடும்.  அப்போதெல்லாம் கைகளுக்கு மருதாணி வைத்து, பின்னலுக்கு குஞ்சம் வைத்து ஜடையிட்டு, நெற்றியில் சுட்டிச் சூடி, பட்டுப்புடவை அணிந்துகொண்டாலே மணப்பெண் தயார். இப்போதோ `சங்கீத்’துக்கு லைட் மேக்கப், முகூர்த்தத்துக்கு ஹெச்.டி மேக்கப், மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு ஏர் பிரஷ் மேக்கப் என ஸ்டைல்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு ஈடுகொடுத்து, இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட மணப்பெண்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக அனுபவம் அள்ளி, அழகைப் பேரழகாக்கி, மணப்பெண்களின் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர், சென்னையைச் சேர்ந்த ஆயிஷா. தனது பயணம் பற்றிப் பகிர்கிறார்.

பேரழகின் ரகசியம்!

“எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. நான் பத்தாம் வகுப்பு முடித்த நேரம், குடும்பத்துடன் சென்னையில் செட்டிலானோம். அதற்கு மேல் படிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால், டெய்லரிங் க்ளாஸ் போக ஆரம்பித்தேன். அதன்பின் எனக்கு நானே பிளவுஸ்கள் தைத்துக்கொண்டேன். அதன் நேர்த்தியைப் பார்த்த அக்கம்பக்கத்துப் பெண்கள், தங்களுக்கும் பிளவுஸ் தைத்துச் தரச் சொல்லிக் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் கேட்காமலேயே அதில் நான் சின்னச் சின்ன டிசைன்ஸ் வைத்துத் தைத்துக்கொடுக்க, கஸ்டமர்கள் சர்ப்ரைஸ் ஆகிவிடுவார்கள். நம் புதிய முயற்சிகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நமக்குக் கொடுக்கும் தெம்பு. என் கஸ்டமர்கள் எனக்குச் சொன்ன பாராட்டு வார்த்தைகள் தந்த உற்சாகம்தான், புதிது புதிதாக யோசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

என் கணவர் போட்டோகிராபர். ‘எப்பவும் எதையாச்சும் புதுசா கத்துக்கோ; ஏதாச்சும் பெருசா பண்ணு’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆரம்பத்தில், அவர் புகைப்படம் எடுக்கும் திருமணங்களுக்கு, ‘நீயும் வா, என் ஃபீல்டை பற்றியும் தெரிஞ்சுக்கோ’ என்று சொல்லி என்னையும் அழைத்துச் சென்றார். வீடு திரும்பியதும், திருமணத்தில் எடுத்த புகைப்படங்களைப் பற்றி நானும் என் கணவரும் டிஸ்கஸ் செய்வோம். ஆங்கிள், லைட்டிங் பற்றிய கருத்துகளை என்னிடம் அவர் பகிர, நான், மணப்பெண்ணுக்கான மேக்கப், டிரஸ்ஸிங் பற்றி விவாதிப்பேன். ‘இதில் இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கியே... நீயே பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகிடலாமே?’ என்று விளையாட்டாக ஒருநாள் கேட்டார். ‘நாம் ஏன் இதை யோசிக்கலை?’ என்று மனதில் ஒரு ஸ்பார்க் வந்தது.

என் ஆர்வம் மேக்கப் துறையில் நிலைகுத்தியது. சென்னையில் சில மேக்கப் கோர்ஸ்கள் படித்தேன். ஆரம்பத்தில் என் குடும்பத்தில் உள்ள பெண்களை மாடல்களாக வைத்து, நிறைய வகை மேக்கப்களைச் செய்து பார்த்தேன். வீட்டில் யாரும் இல்லையென்றால், என் பாட்டியை உட்காரவைத்துகூட மேக்கப் செய்து பார்த்திருக்கிறேன். கலை கைவரப்பெற்றதும் அடுத்த கட்டமாக, குறைந்த பட்ஜெட்டில், வீடு, மண்டபத்துக்கே சென்று பிரைடல் மேக்கப்கள் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள்... பல முறை பணம் எதுவும் வாங்காமல், அனுபவத்துக்காக மட்டுமே வேலை செய்தது உண்டு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பேரழகின் ரகசியம்!
பேரழகின் ரகசியம்!

என் மேக்கப்பில் ஒரு நேர்த்தி இருப்பதாக அனைவரும் சொல்வார்கள். ஏனோதானோ என்று இல்லாமல், ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் சின்னச் சின்ன விஷயங்களில்கூட நான் மெனக்கெடும் அர்ப்பணிப்புக்கான பலன் அது. திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே மணப்பெண்ணுக்குப் பல மேக்கப்களைச் செய்து பார்த்து, ஒவ்வோர் அவுட்லுக்கிலும் போட்டோ எடுத்து ஒப்பிட்டுப் பார்ப்பேன். அவற்றில் எது மணப்பெண்ணின் சருமத்துக்குச் சரியாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுப்பேன். இதனால், திருமண நாள் அன்று மேக்கப் எப்படி இருக்குமோ என்ற பதற்றமின்றி மணப்பெண்ணும் நிம்மதியாக இருப்பார்.

பிரைடல் மேக்கப்பில் அடிப்படை முதல் டெக்னாலஜி வரை அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்ட பிறகு, ‘பிரைட்ஸ் கார்னர்’ என்ற மேக்கப் ஸ்டுடியோவை ஆரம்பித்தேன். இடத்தேர்வு, முதலீட்டுக்கான கடன், பணியாளர்கள் என நிறையச் சிக்கல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் எனக்கான அனுபவங்களாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறினேன். 

பேரழகின் ரகசியம்!

மேக்கப் செய்ய ஆரம்பிக்கும் முன், ஒருவரின் ஸ்கின்டோன், அவர் அணியவிருக்கும் உடையைப் பொறுத்துதான் என்ன வகை மேக்கப் என்பதைத் தேர்வு செய்வேன். எந்த வகை மேக்கப் என்றாலும் சிம்பிள் அண்டு நீட் லுக்தான் என்னுடைய பாலிசி. அதுவே எனக்கான அடையாளமாகவும் மாற, என்னிடம் மேக்கப் செய்துகொண்ட பெண்களே அவர்களின் தோழிகளுக்கும் என்னைப் பரிந்துரை செய்தனர். கஸ்டமர்களே எனக்கான விளம்பரத்தைச் செய்வது, தொழில் திருப்தி என்றால் என்ன என்பதை என்னை உணரவைக்கிறது.

பத்து வருடங்களாக மேக்கப் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறேன். வாட்டர் புரூஃப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப், ஹெச்.டி மேக்கப் என்று புதிது புதிதாக வரும் மேக்கப்களில் என்னை அப்டேட் செய்துகொள்கிறேன். ட்ரெண்டில் உள்ள மேக்கப்தான் செய்துகொள்வேன் என்று விரும்பும் பெண்களுக்கு மட்டுமே அதை நான் செய்துவிடுவேன். மற்றபடி, என் கைகளால் செய்யும் மேக்கப்பைதான் நான் தேர்ந்தெடுப்பேன். அதுதான் எனக்குத் திருப்திகரமாக இருக்கும். மேக்கப் ட்ரெண்ட் மற்றும் ஈவன்ட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறேன். தொழில் துறையில் பிரபலமாக விளங்கும் பெண்கள் பலர் எங்களிடம் ரெகுலராக ஈவன்ட் மேக்கப் செய்துகொள்வார்கள் என்றாலும், மணப்பெண் அலங்காரம்தான் என் மனதுக்கு நெருக்கமான வேலையாக இருக்கிறது.

என் தொழில் தகவல்களைத் தாண்டி, ஒரு தன்னம்பிக்கை விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நான் பெரிதாகப் படிக்கவில்லை; ஆனால், நான் தேர்ந்தெடுத்த துறையில் இப்போது நான் எக்ஸ்பர்ட்!’’

சு.சூர்யா கோமதி