Published:Updated:

வருடத்துக்கு ஆயிரம் கடல் சிங்கங்களைக் கொல்ல சட்டம்? - புதிய சர்ச்சையில் அமெரிக்கா

வருடத்துக்கு ஆயிரம் கடல் சிங்கங்களைக் கொல்ல சட்டம்? - புதிய சர்ச்சையில் அமெரிக்கா
வருடத்துக்கு ஆயிரம் கடல் சிங்கங்களைக் கொல்ல சட்டம்? - புதிய சர்ச்சையில் அமெரிக்கா

கொலம்பியா ஆற்றின் கிழக்குப் பகுதியில் வாழும் கடல் சிங்கங்களை வருடத்துக்கு ஆயிரம் என்ற கணக்கில் கொலை செய்வதற்கான சட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேல்சபையில் கடந்த வியாழக்கிழமை ஒரு சட்டம் முன்மொழியப்பட்டது. அது என்னவென்றால், கொலம்பியா ஆற்றில் சால்மன் மீன்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் சால்மன் மீன்கள் விரைவில் அழிந்து விடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சால்மன் மீன்கள் குறைவதற்கான முக்கிய காரணம் அவற்றை உணவாக உட்கொள்ளும் கடல் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாவதுதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கடல் சிங்கங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஒரு வருடத்துக்கு 1,000 என்கிற கணக்கில் அவற்றைக் கொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 1960களின் கணக்குப்படி அப்பகுதியில் வாழ்ந்த கடல் சிங்கங்களின் எண்ணிக்கை 30,000. தற்பொழுது அங்கு வாழும் கடல் சிங்கங்களின் எண்ணிக்கை 3,00,000 என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் அப்பாவி கடல் சிங்கங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்பதும், உணவுச் சங்கிலி சிதைவுக்குள்ளாகும் என்பதும் இயற்கை ஆர்வலர்களின் கருத்து. சால்மன் மீன்களின் குறைவுக்கு கடல் சிங்கங்கள் மட்டுமே காரணம் இல்லை என்றும், இந்த வகை மீன்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர் என்பதால் அரசு இதுபோல சட்டம் இயற்றுகிறது என்கிற கருத்தும் நிலவுகிறது.  

இந்த வகை மீன்கள் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதும், மற்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு வாழ்விடம் மாற்றி விடப்படும் மீன் வகைகளும், அதனால் வாழ்விடச் சிக்கல் ஏற்படுவதும்தான் காரணம் என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கண்டறிந்த உண்மை. ஆதிக்க உயிரினங்கள் அங்கு அதிகமாகிவிட்டது. அதனால்தான் சால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மட்டுமின்றி சால்மன் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதைப் பிடிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.