Published:Updated:

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

கண்காட்சி

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐந்தாவது கண்காட்சியாகக் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி வரை 4 நாள்கள் மஞ்சள் மாநகரமாம் ஈரோட்டில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2018’ நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் உள்ள பரிமளம் மஹாலில் பிரமாண்டமாக நடைபெற்ற இக்கண்காட்சியில் நான்கு நாள்களும் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தரங்குகள் நடத்தப் பட்டன. கருத்தரங்குகளில் வல்லுநர்கள் பேசிய விஷயங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 1-ம் தேதியன்று நடந்த கருத்தரங்கின் காலை அமர்வில் முதல் பேச்சாளராக மனைவி வாசுகியுடன் மேடையேறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ‘சம்பங்கி’ மருதமுத்து, ‘பணம் கொடுக்கும் மலர்ப்பயிர்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

“ஒரு ஏக்கர் நிலத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் என்கிற இலக்கை நிர்ணயம் செய்து சம்பங்கிப்பூ விவசாயத்தில் கால் பதித்தோம். இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி இதில் வெற்றி பெற்றோம். 10 ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்ததன் பலனாக இன்று எங்கள் நிலம் வளமான நிலமாக மாறியுள்ளது. தினந்தோறும் வருமானம் கொடுக்கக்கூடிய பணப்பயிராக மலர்ச்சாகுபடி திகழ்கிறது. இயற்கை விவசாயத்தில் அதை மேற்கொள்ளும்போது பூவின் எடை கூடுகிறது. நீண்ட நேரம் பூக்கள் மலர்ச்சியுடன் இருப்பதால், தொலைவில் உள்ள ஊர்களுக்கும் அனுப்ப முடிகிறது. செடிகளுக்கு எந்த அளவுக்கு ஊட்டம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு மகசூல் கிடைக்கும். மலர்ச்சாகுபடியைத் தொடர்ந்து இப்போது பந்தல் காய்கறிச் சாகுபடியில் இறங்கியுள்ளோம்.

கடும் வறட்சியின் காரணமாகக் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு காய்கறிப் பயிர் செய்துள்ளோம். நாள்தோறும் கிடைக்கும் 2,000 லிட்டர் தண்ணீரைக் கொண்டு 40 சென்ட் பரப்பளவில் காய்கறிச் சாகுபடி செய்து... வாரம் 7,000 ரூபாய் வருமானம் பார்க்கிறோம்” என்ற மருதமுத்து-வாசுகி தம்பதி காய்கறிகளைச் சந்தைக்கு அனுப்பிப் பெற்ற விற்பனை ரசீதுகளைப் பார்வையாளர்களுக்குக் காட்டி கைதட்டல்களைப் பெற்றனர்.

அடுத்ததாக, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வளம்குன்றா அங்கக வேளாண்மைத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சோமசுந்தரம், ‘இயற்கை விவசாயம் கொடுக்கும் இணையற்ற மகசூல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

“தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை மண்ணுக்கு உண்டு. அப்படிப் புதுப்பித்துக் கொள்ள மண்ணில் பல்லுயிர்ச்சூழல் அவசியம். பறவைகளை நிலத்துக்குள் வரவைக்க வேண்டும். பறவைகளுக்கான உணவு உங்கள் நிலத்தில் இருந்தால், நிலத்தைத் தேடி பறவைகள் வரும். மண்ணின் வளத்தை அடையாளம் காட்டுவது களைச் செடிகள் தான்.

வளமான நிலத்தில்தான் களைச்செடிகள் செழிப்பாக வளரும். வயலில் உள்ள களைச்செடிகளைப் பிடுங்கி நம் நிலத்தின் வரப்பில்தான் போடுகிறோம். அச்செடிகள் மட்கி வளமான உரமாவதால்தான், வரப்போரத்தில் உள்ள செடிகள் செழிப்பாக இருக்கின்றன. நிலத்தில் அடர்ந்து இருக்கும் களைச்செடிகள் மற்றும் பயிர்கழிவுகள்தான், மண்ணுக்கும் கீழ் வேலை செய்யும் வேலையாள்களான நுண்ணுயிர்களுக்கு நல்ல உணவாக இருக்கின்றன. உயிர்வேலி உள்ள நிலம் மகசூலை அள்ளித்தரும். வயலில் நேரடியாகக் கழிவுகளைக்கொட்டி எருக்குழிபோல மாற்றக் கூடாது. எந்தக் கழிவாக இருந்தாலும் தனியாக எருக்குழி அமைத்து அதை மட்கச்செய்து செரிவூட்டம் செய்யப்பட்ட உரமாக மாற்றித்தான் வயலில் கொட்ட வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார் முனைவர் சோமசுந்தரம்.

காலை அமர்வின் நிறைவுப்பேச்சாளராக மேடையேறிய பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற மூத்த பொறியாளர் வீரப்பன், ‘தமிழர்களின் நீர் மேலாண்மையும் இன்றைய தேவையும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

“தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருக்கின்றன. போதிய மழை கிடைத்தும் நீரைச் சேமிக்கமுடிவதில்லை. ஆயிரக்கணக்கான காட்டாறுகள் மற்றும் ஓடைகள் இங்குள்ளன. அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவேண்டும். பெருமழை காலங்களில் வீணாகச் சென்று கடலில் கலக்கும் வெள்ளநீரை இந்த இணைப்புக்கால்வாய்கள் வழியாகத் திருப்பிவிட்டு, கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் போன்றவற்றை நிரப்ப முடியும். அதனால், அந்தப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கிணறுகளில் தண்ணீர் தளும்பும். காசு கொடுத்து குடிநீரை வாங்கும் நிலை மாறும். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் தேவையும் விவசாயிகளுக்கு ஏற்படாது. ஏற்கெனவே உள்ள அனைத்துப் பாசனக் கால்வாய்களையும் பெரிதாக்க வேண்டும். காவிரி ஆற்றில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு தடுப்பணை அல்லது கதவணை என அமைக்கவேண்டும். அப்போதுதான் வெள்ளத்தைத் தடுத்துச் சேதாரம் இல்லாமல் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும்” எனத் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் வீரப்பன்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

மதிய அமர்வில், ‘பலன் கொடுக்கும் பண்ணைக் கருவிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய கோயம்புத்தூர் மத்திய வேளாண் இயந்திரங்கள் மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர்
டி.செந்தில்குமார்,

“இது கருவிகளின் காலம். புதிது புதிதாகப் பண்ணைக் கருவிகள் மற்றும் பண்ணை எந்திரங்களை எங்களது மையத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, வடிவமைத்து உழவர் பெருமக்களுக்கு வழங்கி வருகின்றனர். உழவு, பாத்தி அமைப்பு, விதைப்பு, களை எடுப்பு, உரம் வைப்பு, மருந்து தெளிப்பு, அறுவடை, அறுவடை பின்நேர்த்தி என்று பண்ணை வேலைகள் அனைத்துக்கும் எளிய கருவிகள் வந்துவிட்டன. வேளாண் பொறியியல் துறை மூலம் அவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

நிலக்கடலை, மக்காச்சோளம், உளுந்து, கொண்டைக்கடலை போன்றவற்றைக் கையால் தூவித்தான் விதைக்கிறோம். அதை எளிமையாக்கும் விதமாக, டிராக்டரின் பின்பகுதியில் பொருத்தி விதைக்கும் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். அந்தக்கருவியைப் பயன்படுத்தி இந்த நான்கு பயிர்களையும் விதைக்க முடியும். இக்கருவி மூலம், உழவும் விதைப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால், வேலை விரைவாக முடிகிறது. ஆள் களுக்கான செலவும் குறைக்கப்படுகிறது. இதேபோல மஞ்சள் விதைப்புக்கும் கருவி உள்ளது.

தக்காளி, மிளகாய், கத்திரி போன்ற காய்கறிப்பயிர்களின் நாற்றுகளை நடவு செய்ய நாதஸ்வர வடிவில் உள்ள ஒரு சிறுகருவி உள்ளது. இதன் மூலம் பதிப்பு ஏற்படாமல் நாற்றுகளை நடவு செய்ய முடியும். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஓர் ஆளே போதும்.

நெல் மற்றும் தக்கைப்பூண்டு விதைப்புக் கருவி, விதைக் கரும்பில் உள்ள ‘பருக்களை’ மட்டும் தனியாக வெட்டி எடுக்கும் கருவி, கரும்பு நாற்றுகளை நடவு செய்யும் எந்திரம், நிமிர்ந்து நடந்தபடியே களைச்செடிகளை அப்புறப்படுத்த உதவும் பவர் வீடர், டிராக்டர் மூலம் இயங்கக்கூடிய மோட்டாருடன் கூடிய ஸ்பிரேயர்... என விவசாயிகளின் பணியைக் குறைக்கப் பல கருவிகள் உள்ளன.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

மஞ்சள், நிலக்கடலை போன்றவற்றைத் தோண்டி அறுவடை செய்யும் கருவிகள், சிறுதானியங்களை அறுவடை செய்யும் கருவி, கதிரடிக்கும் கருவி, தானியங்களை பாலீஷ் செய்யும் கருவிகள் போன்றவையும் உள்ளன.

தற்போது, முருங்கை இலைக்கான தேவை அதிகம் உள்ளது. மருத்துவக் குணம் கொண்ட முருங்கை இலை, பல்வேறு மருந்துகள் தயாரிக்க மூலப்பொருளாக விளங்குகிறது. அப்படியான முருங்கை இலைகளை ஈர்க்குகளிலிருந்து உருவி எடுத்துச் சேகரிக்கும் கருவி ஒன்றையும் எங்கள் மையம் கண்டுபிடித்துள்ளது.

அறுவடை முடிந்த வாழை மரத்தையும், அதன் உள் தண்டுகளையும் துண்டுத் துண்டாக நறுக்குவதற்கும், பொடிப் பொடியாக்கி மட்கச் செய்வதற்கும், வாழை மட்டையிலிருந்து கயிறு திரிப்பதற்குமான கருவிகளும் உள்ளன. இவற்றை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார். 

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

இரண்டாம் நாள் கருத்தரங்கின் நிறைவுப்பேச்சாளராக மேடையேறினார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயிராற்றல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் ப.வெங்கடாச்சலம். ‘விவசாயிகளுக்குக் கை கொடுக்கும் உயிராற்றல்’ என்ற தலைப்பில் பேசிய வெங்கடாச்சலம், “நம்மைச் சுற்றிலும் வற்றாத ஆற்றல் நிறைந்துள்ளது. காற்றுவளம், சூரிய வளம், எரிசக்தி வளம் ஆகிய மூன்று வளங்கள்தான் அவை. அறுவடை செய்த தானியங்களின் ஈரப்பதத்தைப் போக்க அவற்றைக் காயவைக்கிறோம். சூரிய வளத்தின்மூலம் அது காய்கிறது. சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்த முடியும். அதேபோலக் காற்று வளத்தைப் பயன்படுத்திக் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சீமைக்கருவேல், கரும்புச்சக்கை, மரத்துண்டுகள், தேங்காய் சிரட்டை போன்றவற்றை எரித்து, அந்த எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆமணக்கு விதைகளிலிருந்து பயோ டீசல் எடுக்கலாம். கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி போன்ற பயிர்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யலாம். இதனால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்.

மாடுகளின் சாணத்தைப் பயன்படுத்திச் சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ஒரு குடும்பத்தின் சமையல் எரிவாயுத் தேவைக்கு இரண்டு மாடுகளின் சாணம் போதுமானது. நான்கு மாடுகள் இருந்தால் சாண எரிவாயு மூலம் ஒரு குடும்பத்துக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். பல்லாயிரக்கணக்கான மீட்டர் தூரம் பூமியைத் துளையிட்டுத்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மரத்துண்டுகள், எரிகட்டிகள், சீமைக்கருவேல் போன்றவற்றைப் பயன்படுத்தியே ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய முடியும்” என ஆதாரங்களுடன் பேசி முடித்தார்.

கருத்தரங்கில் பேசிய பிற வல்லுநர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...

- - ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

ரேக்ளா வண்டியில் வந்த விவசாயி!

ஈரோடு, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ‘முன்னோடி ஜீரோபட்ஜெட் விவசாயி’ லோகநாதன். பசுமை விகடன் இதழின் தீவிர வாசகரும்கூட. ஈரோட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சிக்கு நான்கு நாள்களும் இவர், கம்பீரமான காளை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில்தான் வந்தார்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

கண்காட்சி வளாகத்தை ரேக்ளா வண்டியில் இவர் வலம் வந்தது, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. பசுமை விகடன் விளம்பர பதாகைகளையும் தனது ரேக்ளா வண்டியில் கட்டி, மாநகர வீதிகளில் பிரசாரம் செய்தார், லோகநாதன். கண்காட்சிக்கு வந்திருந்த பலர், இவரது ரேக்ளா வண்டி மற்றும் காளைகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.