Published:Updated:

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் தெரியுமா? - திருப்பாவை- 3

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் தெரியுமா? - திருப்பாவை- 3
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் தெரியுமா? - திருப்பாவை- 3

திருவரங்கம் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி 
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகய லுகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

``பாவை நோன்பில் அதிகாலை எழுந்து, நீராடிய பிறகு மூன்று உலகங்களையும் தனது திருப்பாதங்களால் அளந்த உத்தமனான வாமனன் நாமத்தைப் போற்றிப் பாடினோமேயானால், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும். செழிப்பான நெற்பயிர்களுக்கு இடையே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். குவளைப் பூக்களில் வண்டுகள் கண்ணுறங்கும். பஞ்சம் என்ற நிலையே தோன்றாது. வள்ளல் குணம் படைத்த பசுக்கள் எல்லாம், தன்னிடம் பாலை சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல் குடம் நிறையச் சுரந்திடும். இப்படி அழியாத செல்வம் இல்லம் எங்கும் நிறைந்திட, நாராயணனைப் பாடுவோம் வாருங்கள் என்று அழைக்கிறாள் கோதை..!


பத்து அவதாரங்களுள் கோதைக்கு மிகவும் பிடித்தமானது, வாமனன் அவதாரம்தான் என்று தோன்றுகிறது. திருப்பாவையில் மட்டும் மூன்றுமுறை அந்த அவதாரம் குறித்துப் பாடுகிறாள். அதிலும், ஓங்கி உலகளந்த அந்த உள்ளம் கவர் கள்வனின்  புகழ்பாடும் பாசுரங்களில் இதுவே முதன்மையானது.
அது மட்டுமன்றி, விரதமிருந்து ஆலயம் செல்லும் கோதை, அங்கே தனக்கென்று எதுவும் கேட்காமல் தான் வாழும் நாட்டின் மக்களுக்காக இறைவனிடம் நீர்வளம், நிலவளம், பால்வளம் ஆகிய நிலைபெற்ற நீங்காத செல்வங்களைக் கேட்பதாலும் இந்தப் பாசுரம் தனிச்சிறப்பு பெறுகிறது.
கோதைக்கு மட்டுமல்ல, குவலயத்துக்கே இந்தப் பாடல் பிடிக்கும் என்பதால்தான், மற்ற எந்தப் பாடல்களுக்கும் இல்லாத சிறப்பாக, இன்றும் அர்ச்சகர்கள் கோயிலில் ஆண்டவனின் அர்ச்சனைப் பிரசாதத்தைப் பக்தர்களுக்கு வழங்கும்போது, ``வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்... நீங்காத செல்வம் நிறைந்து..!" என்று இப்பாசுரத்தைப் பாடித்தான் பிரசாதத்தை வழங்குகின்றனர்.
இந்தப் பாசுரம் எவ்வளவு சிறப்புடையதோ அதுபோலவே, வைகுண்ட ஏகாதசித் திருநாளாகிய  இன்றைய தினமும் மிகுந்த சிறப்புடையது. 

ஏன் இன்றைய தினத்தை வைகுண்ட ஏகாதசி என்கிறோம்..? 
நாரயணன் என்ற பரம்பொருளை, அவன் வசிக்கும் வைகுண்டத்தை நாம் சென்றடையத் துணை நிற்பதால்தான் இந்த நாள், வைகுண்ட ஏகாதசித் திருநாள் என்று சொல்லப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் பக்திநெறி அல்லது சரணாகதி ஆகிய இரண்டு வழிமுறைகள்தான் இறைவனைச் சென்றடைவதற்கானவை என்றபோதிலும், இன்றைய தினமான வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் விரதம் இருந்து, நாராயணனை வழிபட்டால் பிறவித்துயர் நீங்கி, 'இனி அடையும்நிலை வேறெதுவுமிலை....' என்ற பரமாத்ம பிராப்தியான வைகுண்டப் பதவியை அடைய முடியும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும் அப்படியென்ன ஒரு தனிச்சிறப்பு?
ஏகாதசி என்றால் பதினோராம் தினம் (1+10) என்று பொருளாகும். வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதம் இருமுறை வரும் இந்த ஏகாதசித் திருநாள், திதிகளில் முக்கியமான நாளுமாகும். மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளே,  'வைகுண்ட ஏகாதசி' எனக் கொண்டாடப்படுகிறது. 
மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒருநாள் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இதில், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்வரை வருகின்ற ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதான தட்சிணாயனமாக அமைகிறது. இந்த தட்சிணாயனத்தின் நிறைவுப் பகுதியில் தோன்றும் 'பிரம்ம முகூர்த்தம்' என்ற தேவர்களின் விடியற்காலைப் பொழுதுதான் மார்கழி.
அந்தப் பிரம்ம முகூர்த்தத்திலும், மகாவிஷ்ணு அரிதுயிலிலிருந்து விழித்தெழும் அந்த விநாடிப் பொழுதுதான், ஏகாதசியாம். அதனால்தான் ஏகாதசிக்கு இவ்வளவு சிறப்பு..!
ஏகாதசி பிறக்கும் நேரம் எவ்வளவு சிறப்போ, அது போலவே ஏகாதசி உருவான வரலாறும் சிறப்பு மிக்கது.  சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற அசுரனும் அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தைத் தேவர்கள், பகவானிடம் முறையிட்டவுடன் மகாவிஷ்ணு அந்த அசுரர்களுடன் போர் தொடுத்தார். அந்தப் போர் பல வருடங்கள் தொடர்ந்ததால், சோர்வடைந்த இறைவன், சிம்ஹவதி என்னும் குகையில் களைப்பு தீர நன்றாக உறங்கினார். அப்போது, ஸ்ரீமன் நாராயணனின் உடலிலிருந்து ஏகாதசி என்ற ஒரு பெண் சக்தி தோன்றி, அந்த அசுரர்களை வீழ்த்திய பின், மீண்டும் மகாவிஷ்ணுவிடம் திரும்பி வந்தது.
இறைவனது பணியை ஏற்று, அதை செவ்வனே செய்த ஏகாதசியை மெச்சி வரமளிக்க வந்த வரதனிடம், ``உன் அன்புக்கு உரியவளாக நான் எப்போதும் இருக்க வேண்டும்... நான் பிறந்த இந்த நாளில் உபவாசம் இருப்பவர்கள் அனைத்து சித்திகளும் பெற வேண்டும்..." என்று வேண்டிக்கொண்டாள் ஏகாதசி.
வேண்டிய வரமருளிய வரதன், தன்னிடமிருந்து தோன்றிய ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டான். இப்படி இறைவனிடமிருந்து தோன்றிய ஏகாதசி என்ற சக்தியானவள், வருடத்துக்கு 24 அல்லது 25 முறை வருகிறாள். வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலவில்லை என்றாலும், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது

தனிச்சிறப்பாகும்.


இன்று ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப்பு நடப்பது ஒரு பக்தனின் வேண்டுகோளை ஏற்றுத்தான் என்பது வியப்பான கதை. 
`கலியுகத்தில் முதன்முதலாக வைகுண்ட ஏகாதசி நாளன்று வைகுந்தப் பிராப்தி அடைந்தது ஆழ்வார்களில் தலையானவரான நம்மாழ்வார். அவர் முக்தியடைந்த நாளன்று வானுலகில் அவருக்காகச் சொர்க்கவாசல் திறக்கப்பட, அச்சமயம் நம்மாழ்வார் எம்பெருமாளிடம், ``எனக்காக மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்..." என்று வேண்டிக்கொண்டதால்தான், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. 

ஆம்…. 108-வது திவ்யதேசமான வைகுண்டத்துக்குச் செல்ல, பூலோகத்தில் உள்ள மற்ற திவ்யதேசங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை. வேதங்கள் சொல்வதுபோல் விவேகம், நிர்வேதம், விரக்தி, பிரசாத ஹேது, உட்கிரமணம், ஆத்மா எழுந்தருளும் நிலை, அர்ச்சிராதி மார்க்கம், திவ்யதேச பிராப்தி, பரமாத்ம பிராப்தி என்ற ஒன்பது படிக்கட்டுகளை ஏற வேண்டியதில்லை.

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து விடியற்காலை வேளையில் திறக்கப்படும் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பைப் பார்த்து, அதன் வழியாக இறைவனை தரிசித்தால் போதும் என்கிறது புராணம்.
"ஸமம் பச்யன் ஹி ஸர்வதர ஸமவஸ்திதமீச்வரம் ந ஹினஸ்த்யாமனாத்மானம் ததோ யாதி பராம் கதிம்.."
(பகவத் கீதை 13:28)
``உடலாலும், உள்ளத்தாலும் உன்னுடன் ஒன்றி, உன்னையே நினைத்து இன்று ஏகாதசி விரதமிருக்கின்றோம்..
எங்களுக்கு அனைத்துக்கும் மேலான மோட்ச நிலையை அருள்வாயாக.."
என்று வைகுண்ட ஏகாதசித் திருநாளைப் போற்றிப் பாடுகிறாள் கோதை..

அடுத்த கட்டுரைக்கு