Published:Updated:

இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை!

இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை!
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை!

பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில், கடந்த செப்டம்பர் 27-28 தேதிகளில், ‘இந்திய விவசாயத்தில் உயிரித் தொழில்நுட்பத்தின் அணுகுமுறைகள் (Biotechnological Approaches in Improvisation of Indian Agriculture – Clean and Green India Mission) குறித்த தேசிய பயிலரங்கு நடைபெற்றது. ‘பசுமை விகடன்’, கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி, நபார்டு வங்கி ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில்... விவசாயிகள், உயிரித் தொழில்நுட்பவியல் துறை மாணவர்கள், வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கற்பக விநாயகா கல்லூரியின் முதல்வர், முனைவர் காசிநாதபாண்டியன்,“மாறி வரும் பருவநிலைதான் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. விவசாயிகள் அதிக அளவு உற்பத்தி செய்தாலும் அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய முன்னோடி இயற்கை விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், “பசுமைப்புரட்சி மூலமாக நம் விவசாயிகளிடம் ரசாயன உரத்தைக் கொடுத்தார்கள். அது உரமல்ல, விஷம். அதோடு, பூச்சிக்கொல்லியைத் தெளித்து நம் உணவையும் நஞ்சாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று பருவநிலை மாற்றத்தால் பருவம் தவறி பெய்கிறது, மழை. அதனால், விவசாயிகள் பருவ மாற்றத்தை உணர்ந்து விவசாயம் செய்ய வேண்டும்” என்றார்.

இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை!

தொடர்ந்து பேசிய உத்தரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன், “மத்திய அரசின் ‘ஸ்வாச் பாரத்’ திட்டத்தையும் மாநில அரசின் ‘திடக்கழிவு மேலாண்மை’ திட்டத்தையும் இணைத்து... பேரூராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியைச் செய்து வருகிறோம். விவசாயிகளையும் எங்களோடு இணைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம். பேரூராட்சிகளில் உற்பத்தியாகும் உரங்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் விதிகளை உருவாக்கி இருக்கிறோம். கிராமப்புறங்களில் வாழ்ந்தவர்கள்தான் நகர்ப் பகுதிகளில் குடியேறி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், பலரும் வீடுகளில் மாடித்தோட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். இதனால், அரசாங்கமும் மாடித்தோட்டம் திட்டத்தைக் கையில் எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்குப் பயிற்சி, உபகரணங்கள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றைப் பேரூராட்சி சார்பில் வழங்கி வருகிறோம்” என்றார்.

உயிர் உரங்களின் பயன்கள் குறித்துப் பேசிய ‘ஆர்மெட் பயோடெக்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் ஆறுமுகம், “நம்முடைய மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைப் பெருக்கி நிலத்தில் இடுவதுதான் உயிர் உரம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால், நிலத்தில் கார அமிலத்தன்மை அதிகரித்து நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டன. நிலத்தில் இடப்படும் இலைதழைகள் விரைவில் மட்க வேண்டுமென்றால் நிலத்தில் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும். மோர், தயிர், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ரசாயன உரங்கள் நிலத்தைக் கெட்டியாக்கிவிடும். உயிர் உரங்கள் பயன்படுத்தப்படும் நிலத்தின் மண் பொலபொலப்பாகும். தென்னந்தோப்பில்... ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அழுகிய அன்னாசிப் பழத்தைப் போட்டு வைத்தால், காண்டாமிருக வண்டுகள் அந்தக் கரைசலில் விழுந்து இறந்துவிடும்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை!

நிறைவாகப் பேசிய நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் முனைவர் சினேஹல் எம். பன்சத் , “மத்திய அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் 200 கோடி நிதியளித்துள்ளது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய திட்டங்களுக்கும் நபார்டு மூலமாக நிதிஉதவி அளித்து வருகிறோம். மாநில அரசாங்கங்களும் ரசாயன உரங்களைத் தவிர்த்துவிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டன. நபார்டு வங்கியின் மூலம், விவசாயிகளைக் குழுவாக ஒன்றிணைத்து விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களாக மாற்றி வருகிறோம்.  இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பட்டதாரிகளுக்கு 40% சதவிகித மானியம் உண்டு.  கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்படுகின்றன, இவற்றை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் வி. கார்த்திகேயன், முன்னோடி விவசாயிகள் ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘மதுராந்தகம்’ சுப்பு ஆகியோர்... பார்வையாளர்களை அருகில் உள்ள நிலத்துக்கு அழைத்துச்சென்று உயிர் உரங்கள் தயாரிப்பது குறித்துச் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

- பா.ஜெயவேல்