தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

இன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? - உமா சக்ரவர்த்தி

இன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? - உமா சக்ரவர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? - உமா சக்ரவர்த்தி

எதிர்க்குரல்மருதன்

ந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது உமா சக்ரவர்த்தியின் வயது ஆறு. `நவீன இந்தியாவோடு சேர்ந்துதான் நானும் வளர்ந்தேன்.  என்னைச் சுற்றி அப்போது நடந்த எல்லாவற்றையும் என்னால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்றாலும் இரு நிகழ்வுகள் என் மனத்தில் ஆழமாகத் தங்கிவிட்டன' என்று நினைவுகூர்கிறார் உமா சக்ரவர்த்தி.

இரண்டுமே 1956-ம் ஆண்டு நடைபெற்றவை. முதலாவது, 2500 ஆண்டுப் பழைமை வாய்ந்த பௌத்தத்தைக் கொண்டாடும் வகையில் கலாசார விழாக்கள், உரைகள், கருத்தரங்குகள் என்று தேசமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரண்டாவது, நாக்பூரில் அம்பேத்கரின் தலைமையில் 25,000 மகர் பிரிவினர் இந்து மதத்திலிருந்து வெளியேறி, பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். இரண்டுமே பௌத்தத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள். இரண்டுமே இந்தியா முழுக்கப் பெரும் அதிர்வுகளை உருவாக்கின. இருந்தும் முதலாவதற்குக் கிடைத்த ஆரவாரமான, முழுமையான வரவேற்பு ஏன் இரண்டாவது நிகழ்வுக்குக் கிடைக்கவில்லை? பௌத்தம் கொண்டாடப்படும்போது அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் ஏன் விமர்சிக்கப்பட வேண்டும்?

டெல்லியில் பள்ளிக்கல்வி முடிந்ததும் பெங்களூரு சட்டக் கல்லூரியில் இணைந்தார் உமா. பனாரஸ் இந்துக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இணைந்து முதுநிலைப் பட்டம் பெற்றார். மேற்கொண்டு கற்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் அவர் வரலாற்றையே தேர்ந்தெடுத்தார். ஆனால், வரலாற்றில் குறிப்பாக எதைப் படிப்பது? அரசியல் வரலாற்றில் அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. கலாசார வரலாறு, கலை வரலாறு இரண்டிலும்கூட அதிக ஆர்வமில்லை. எனவே, முற்கால இந்திய வரலாற்றை அவர் தேர்ந்தெடுத்தார். இளம் வயதிலிருந்து தனக்குள் உருண்டுகொண்டிருந்த கேள்விகளுக்கு விடை தேடும் நோக்கத்துடன் அவர் பௌத்தத்தின் வரலாற்றை ஆய்வு செய்யத் தொடங்கினார்.

சில அடிப்படையான  கேள்விகளை முதலில் அவர் எழுப்பிக்கொண்டார். புத்தர் எப்படிப்பட்டவர்? அவருடைய காலகட்டம் எப்படி இருந்தது? அவர் எப்படிச் சிந்தித்தார்? அவருடைய சிந்தனைகளை அப்போதைய சமூகம் எப்படி எதிர்கொண்டது? அவரை யாரெல்லாம் நாடிவந்தனர்? புத்தர் தோற்றுவித்த `சங்கம்' சாதித்தது என்ன?

இன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? - உமா சக்ரவர்த்தி

ஆர்வத்துடன் புத்தரை நெருங்கியபோது முதல் சிக்கலை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அடையாளம் காண முடியாதபடிக்கு புத்தரைச் சுற்றிலும் பலவிதமான தொன்மக் கதைகள் பின்னிப் படர்ந்திருந்தன. அவற்றையெல்லாம் கவனமாகக் களைந்தெடுத்து புத்தரை ஒரு வரலாற்றுப் பாத்திரமாக உயிர்ப்பித்து எடுக்கவேண்டிய பணியைத்தான் உமா முதலில் செய்யவேண்டியிருந்தது.

அதைச் செய்துமுடித்தபிறகு, புத்தர் ஒரு மனிதராக உருத்திரள ஆரம்பித்தார். புத்தரின் காலகட்டம் என்பது சமணம், ஆசிவகம், பொருள்முதல்வாதம் உள்ளிட்ட பலவிதமான தத்துவப் பள்ளிகள் தீவிரமாகச் செயல்பட்டுவந்த ஆறாம் நூற்றாண்டு.

கங்கைப் பள்ளத்தாக்கில் வசித்துவந்த மக்கள் முதன்முறையாக முனைப்புடன் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர். விவசாயத்துக்கு நிலம் பிரதானம்.  அதுவரை பொதுப் பயன்பாட்டில் இருந்துவந்த நிலத்தைச் சிலர் தனியுடைமையாக மாற்றிக்கொண்டிருந்தனர். யாரிடம் அதிக நிலம் இருந்ததோ அவர் செல்வாக்குமிக்கவராக  இருந்தார். நிலமற்றவர்கள் விவசாயக் கூலிகளாகச் சுருங்கிப்போயினர். இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்னும் பிரிவினை தெள்ளத்தெளிவாகச் சமூகத்தில் தென்பட ஆரம்பித்தது. பௌத்த இலக்கியங்களால் தத்துவத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டுமன்றி, வேளாண் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்திருந்ததை உமா கண்டறிந்தார். ஏழை, பணக்காரர்; வசதிமிக்கவர், வசதியற்றவர்; அதிகாரமிக்கவர்கள், அதிகாரமில்லாதவர்கள் ஆகிய சொற்கள் பௌத்தப் பதிவுகளில் மிகுந்திருந்ததை அவர் கண்டார்.

இன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? - உமா சக்ரவர்த்திவேறு எந்தத் தத்துவப் பிரிவிலும் இந்தப் பாகுபாடுகள் விவரிக்கப்படவில்லை. அதே போல, வறுமையை இனம் கண்டு முதன்முறையாகச் சுட்டிக்காட்டியதோடு அது குறித்து விவாதிக்கவும் முயன்ற ஒரே தத்துவம் பௌத்தம் என்பதையும் உமா கண்டுகொண்டார்.  ஏழைகள் குறித்து மட்டுமல்ல; ஆதர வற்றோர், பலவீனமானோர், அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தோர் என்று இதுகாறும் புறக்கணிக்கப்பட்டுவந்த ஒரு பெருந்திரளான மக்கள் குறித்து புத்தர் சிந்தித்திருந்தார். சமூகத்தில் மேலடுக்கில் இருந்தவர்கள், நிலவுடைமையாளர்கள், பணக்காரர்கள் ஆகியோரையும் புத்தர் அலசினார். அதிகாரத்தின் இயல்பு என்ன, அது ஒருவரை எப்படியெல்லாம் மாற்றும், கட்டுப்பாடற்ற அதிகாரம் எத்தகைய தீங்குகளை ஏற்படுத்தும் என்பவற்றை யெல்லாம் முதலில் விவாதித்தவர் புத்தரே. சாதி அமைப்பு கெட்டிப்படுவதற்கு முன்பே பிறப்பின் அடிப்படையில்  மனிதர்கள் பாகுபடுத்தப்படுவதை புத்தர் எதிர்த்திருந்தார்.

அரசியலை உமா சக்ரவர்த்தி ஒதுக்கிதான் வைத்திருந்தார். ஆனால், பௌத்தத்தின் சமூக வரலாற்றை ஆராயத் தொடங்கியபோது புத்தரின் தெளிவான அரசியலை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டுக்கு,  புத்தரின் சங்கத்தில் வசதிமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள், ஏழைகளும் இருந்தார்கள். சாக்கியர்களும் இருந்தார்கள், பிராமணர்களும் இருந்தார்கள். தன்னைப் போன்ற  நாவிதர்கள் பலர் சங்கத்தில் இணைந்ததைக்கண்ட உபாலியும் ஒரு நாள் தன்னை இணைத்துக்கொண்டார். சங்கத்தில் சேர்வதற்குமுன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல; இணைந்தபிறகு அனைவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்பது சங்கத்தின் நியதி. ஆனால், சாக்கியர்கள் அவ்வாறு கருதவில்லை. ஆகவே, புத்தர் ஒரு முடிவுக்கு வந்தார். சங்க உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து முதல் துறவியாக அறிவிக்க வேண்டிய காலம் வந்தபோது, புத்தர் உபாலியைத் தேர்ந்தெடுத்தார்.  அது ஓர் அரசியல் செயல்பாடு என்பதை உமா உணர்ந்தார்.

ஒரு மனிதராக அணுகியதாலோ என்னவோ, புத்தரின் இன்னொரு பக்கத்தையும் உமா சக்ரவர்த்தியால் தரிசிக்கமுடிந்தது. ஆம், புத்தர்  அடித்தட்டு மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தார். ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த விரும்பினார். வேதங்களோடு தத்துவச் சமர் புரிந்தார். ஆனால், அதே புத்தர் பாலினப் பாகுபாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.  புத்தரின் சங்கத்தில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.  தன்னைத் தூக்கி வளர்த்த தாய் சங்கத்தில் இணைவதற்கு ஆர்வம் தெரிவித்தபோதும்கூட, புத்தர் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிரதான சீடர்களில் ஒருவரான ஆனந்தா, புத்தரிடம் இதுகுறித்து வாதிட வேண்டியிருந்தது.  `ஆண்களைப்போல பெண்களும் கடுமையாகப் பாடுபட்டால் அவர்களாலும் அதே லட்சியத்தை அடைய முடியுமா?' என்று ஆனந்தா கேட்டபோது, `பெண்கள் சங்கத்துக்குள் நுழைய முடியாது' என்று உறுதியாகப் பதிலளித்தார் புத்தர்.

ஆனந்தாவுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. எனவே, அவர் புத்தரை இன்னொரு கேள்வியால் மடக்கினார். `ஆண்களைப்போல பெண்கள் விடுதலை பெறுவதை நீங்கள் ஏன் தடுக்க நினைக்கிறீர்கள்? ஏன் அவர்கள் சங்கத்தில் இணையக் கூடாது?' புத்தரால் இந்த முறை விளக்கமளிக்க முடியவில்லை. எனவே, அவர் பெண்களுக்குச் சங்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆனாலும், புத்தர் மாறிவிடவில்லை என்கிறார் உமா. `ஆண்களைக் காட்டிலும் கடினமான, அதிகமான விதிமுறைகளைப் பிக்குணிகளுக்கு அவர் விதித்தார். பிக்குணிகள் பிக்குகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்குமாறும் பார்த்துக்கொண்டார். பௌத்தத்தின் வரலாற்றில் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவராக நான் ஆனந்தாவையே பார்க்கிறேன்' என்கிறார் உமா.

இன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? - உமா சக்ரவர்த்தி

இந்த இடத்தில்தான் அம்பேத்கர் உமா சக்ரவர்த்தியின் உதவிக்கு வந்தார். புத்தரை உள்ளவாறே முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்திருந்ததால் அம்பேத்கர் தனக்கேற்றாற்போல புத்தரை உருமாற்றிக்கொண்டார். ஒரு மனிதனின் மதிப்பை அவனுடைய பிறப்பு தீர்மானிப்பதில்லை என்று முழங்கிய புத்தரின் அரசியல் அம்பேத்கரின் சாதியொழிப்பு அரசியலுக்கு ஏற்றதாக இருந்தது. தவம், புண்ணியம், மறுபிறப்பு, கர்மா போன்ற தேவையற்ற அம்சங்களை நீக்கிவிட்டு, 21-ம் நூற்றாண்டுக்கும் தேவைப்பட்ட ஒரு பௌத்தத்தை அம்பேத்கர் வளர்த்தெடுத்தார். அந்த வகையில் அம்பேத்கர் முன்னெடுத்தது புத்தரின் போரைத்தான். அந்தப் போரை அம்பேத்கரைக் கடந்து நாமும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்கிறார் உமா சக்ரவர்த்தி.  `சாதி, மதம், வர்க்கம், பாலினம் என்று மனிதர்களைப் பாகுபடுத்தியும் பிரித்தும் வைத்திருக்கும் சக்திகள் அதிக பலம் பெற்றிருக்கும் இன்றைய சூழலில் முன்பைவிட  அதிகமாக பௌத்தம் நமக்குத் தேவைப்படுகிறது' என்கிறார் அவர்.

உமா சக்ரவர்த்தியின் ஆய்வு பௌத்தத்தை ஒரு வாழ்வியல் தத்துவமாகவும் போராட்ட ஆயுதமாகவும் நமக்கு முன்னிறுத்துகிறது. கடவுள், ஆன்மிகம், பக்தி என்று உள்ளுக்குள் சுருங்கிக் கிடக்காமல்  தனது சமூகத்தின் பிரச்னைகளையும் சிக்கல் களையும் முழுவிழிப்போடு புரிந்துகொள்ள முயன்றார் புத்தர். ஒரு தத்துவவியலாளராக வெறுமனே வியாக்கியானம் அளிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தீர்வுகளை அளிக்கவும் விவாதிக்கவும் அவர் முயன்றார். புத்தர் எல்லாப் பிரச்னைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டாரா, எல்லாவற்றுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்தாரா, எல்லாவற்றுக்கும் ஒரே தொனியில் எதிர்க்குரல் எழுப்பினாரா என்றால், இல்லை. புத்தர் தோற்றுவித்த சங்கம் அவர் காலத்துப் பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைத்ததா என்றால், அதுவும் இல்லை. ஆனாலும், புத்தர் நமக்குத் தேவைப்படுகிறார். நம் சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை அடையாளம் காணவும், சமத்துவத்துக்கான தேடலை முன்னெடுக்கவும் புத்தர் நமக்குத் தேவைப்படுகிறார்.

இன்றைய புத்தர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் முடிவு செய்துகொள்ள முடியும். புத்தரிடமிருந்து எவற்றை யெல்லாம் ஏற்க வேண்டும், எவற்றை நகர்த்தி வைக்க வேண்டும், எவற்றைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். அம்பேத்கரைப் போல் நாமும் நம் காலத்துக்கு ஏற்ற பௌத்தத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். அம்பேத்கரின் புத்தர் கோபமே கொள்ளாதவர் அல்லர். அநீதியைக் கண்டு உள்ளம் கொதிப்பவர் அவர். அம்பேத்கரின் புத்தர் காலை மடக்கி போதி மரத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலிப்பவர் அல்லர். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அவர்களுடன் இணைந்து வியர்வை சிந்திப் போராடுபவர். அருள்  அளிப்பதில் அல்ல, போராடுவதில்தான் அவர் அக்கறை கொண்டிருந்தார். என்னைப் பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு முன்னால் பாய்ந்து செல்லாமல், அவர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக்கொண்டு,  அவர்களோடு சேர்ந்து அடியெடுத்து வைப்பவர். அம்பேத்கரின் புத்தர் அம்பேத்கரைப் போலவே இருந்ததை உமா சக்ரவர்த்தி கண்டார். அப்படியானால் கற்றுக்கொள்ளுதல் என்பதும் மாற்றியமைத்தல் என்பதும் வெவ்வேறானவை கிடையாதா? பின்பற்றுதல் என்பதும் தலைமையேற்றல் என்பதும் ஒன்றேதானா?

பௌத்தம் உமா சக்ரவர்த்தியையும் மாற்றியமைத்தது. ஓர் ஆய்வாளராகவோ, பேராசிரியராகவோ தன் வாழ்வைச் சுருக்கிக்கொள்ள அவர் தயாராக இல்லை. சிந்தனைகளை ஒட்டிய செயல்கள். வரலாற்றோடு ஒட்டிய அரசியல். அதைத்தான் புத்தர் செய்தார். அதைத்தான்  அம்பேத்கர் செய்தார். என் வழியும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் உமா சக்ரவர்த்தி. சமூகப் போராட்டங்களில் தன்னைப் படிப்படியாக இணைத்துக்கொள்ள ஆரம்பித்தார். வன்முறைக்கு எதிராகவும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராகவும் போராட ஆரம்பித்தார். வேதகாலத்தில் சாதி அமைப்பு, தலித்தியம், தலித்தியப் பெண்ணியம், அயோத்தி, நிர்பயா, முசாஃபர் நகர், வகுப்புவாதம், வலதுசாரி அபாயம், தொழிலாளர் நலன் என்று தொடர்ச்சியாக விரிவடைந்துகொண்டிருக்கின்றன அவர் கவனம் செலுத்தும் துறைகள்.  சமூகவியல் துறையைச் சேர்ந்த ஆனந்த் சக்ரவர்த்தியை மணந்துகொண்ட உமா, இப்போது டெல்லியில் வசித்துவருகிறார். இன்று 77 வயதிலும், சிறிதும் தொய்வின்றித் தீர்க்கமாக ஒலிக்கிறது அவர் குரல்.

உமா சக்ரவர்த்தியின் ஆய்வுகளால், செயல்பாடுகளால் உத்வேகம் அடைந்து, எழுதவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் போராடவும் முன்வந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பௌத்தம் குறித்த அவருடைய நூல் இன்றளவும் இத்துறையை அறிய விரும்புபவர்களுக்குக் கைவிளக்காக நீடிக்கிறது. இந்திய மகளிர் இயக்கப் பணிகள் குறித்தோ, பெண்ணியச் சிந்தனைகள் குறித்தோ விவாதிக்க விரும்புபவர்கள் உமா சக்ரவர்த்தியின் எழுத்துகளையும் உரைகளையும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கும்.

படிப்பு, ஆய்வு, போராட்டம் என்று மூழ்கிக்கிடந்தாலும் உமா சக்ரவர்த்தி அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவராக  இருக்கிறார். `ஓர் ஆவணப் படத்தை எப்படி இயக்குவது என்பதைச் சமீபத்தில் கற்றுக்கொண்டேன்' என்று புன்னகைக்கிறார். `இளம் வயதில் எனக்குள் ஓயாமல் கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இப்போதும் அந்த வழக்கம் தொடர்கிறது. சமூகத்தை நாம் விரும்பியதைப்போல மாற்றியமைத்துவிட முடியும் என்று இளம் வயதில் நம்பினேன். அந்த நம்பிக்கையை இப்போதும் நான் கைவிடவில்லை!' என்கிறார்.  

போராடுவதன்மூலம் மட்டுமே சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்று புத்தர் நம்பினார். அம்பேத்கரின் நம்பிக்கையும் இதுவேதான். இந்த இருவரையும் நன்கறிந்தவர் உமா சக்ரவர்த்தி. அதனால்தான், `ஒரு லட்சிய சமூகத்தை நீங்கள் அமைக்க விரும்பினால், கனவு காண்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது, முழு விழிப்போடு அதற்காகப் போராட முன்வர வேண்டும்' என்கிறார் உமா.