Published:Updated:

தென்னை ஓலை `ஸ்ட்ரா'... பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக ஆசிரியையின் புது கண்டுபிடிப்பு!

``தென்னங்கீற்று உறிஞ்சிகள் பலவகையிலும் பயன்தரக்கூடியவை. இவை எளிதில் மக்கும் தன்மை உடையது. அதோடு, தென்னங்கீற்றைப் பயன்படுத்தி செய்வதால், இதற்காகப் பெரிய அளவில் முதலீடு செய்யத்தேவையில்லை."

தென்னை ஓலை `ஸ்ட்ரா'... பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக ஆசிரியையின் புது கண்டுபிடிப்பு!
தென்னை ஓலை `ஸ்ட்ரா'... பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக ஆசிரியையின் புது கண்டுபிடிப்பு!

ன்று உலகம் முழுக்க மனிதர்களை அச்சுறுத்தி, சுகாதாரத்துக்கும், இயற்கைக்கும் பேராபத்தாக விளங்குவது பிளாஸ்டிக். இங்கு அங்கு என்றில்லாமல் எட்டுத்திக்கும் நீக்கமற எங்கும் நிறைந்து, மனிதர்களுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த பிளாஸ்டிக். இதை உணர்ந்த இயற்கை சூழலியலாளர்கள் பலரும், ``பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனே நிறுத்தலைன்னா, இயற்கைக்கும், மனிதர்களுக்கும் பேராபத்துகள் காத்திருக்கின்றன" என்று எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை உணர்ந்த தமிழக அரசும், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், இரு மாணவர்களுடன் சேர்ந்து, குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்ட பானங்களை அருந்த பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்றாக தென்னை ஓலைகளில் ஸ்ட்ரா செய்து புதிய முயற்சியைச் செய்திருக்கிறார் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர். இதன்மூலம், ``கஜா புயலில் வீழ்ந்த பல ஆயிரம் டெல்டா தென்னை விவசாயிகளின் வாழ்விலும் ஒளியேற்ற முடியும்" என்கிறார் அந்த ஆசிரியை. 

கரூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களான யாழினி, சுபாஷ் என்ற மாணவர்களுடன் சேர்ந்து, வழிகாட்டி ஆசிரியையான அனிதா இப்படித் தென்னை ஓலை ஸ்ட்ராவைக் கண்டுபிடித்துள்ளார். பிளாஸ்டிக் பொருள்களிலேயே மிகவும் பிரச்னைக்குரியவை திரும்பப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்கள்தாம். அதிலும் குறிப்பாக, பிளாஸ்டிக் ஸ்ட்ராவை கூறலாம். இந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களால் கடல் ஆமை, நீலத்திமிங்கலம் எனப் பல்வேறு அரிய கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த உயிரினங்கள் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை உணவென்று நினைத்து உண்ணும் போதும், சுவாசிக்கும் போதும் சுவாசக்குழாயில் சிக்கிக் கொள்வதினால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்கின்றன. அதோடு, பிளாஸ்டிக் பைகள் கடல் நீரில் மிதக்கும்போது, அது ஒருவகையான ஜெல்லி மீன்களைப் போல் தோற்றம் அளிப்பதால், இதனை உணவு என்று கருதி உண்ணும் பெரிய வகை மீன்களும் மூச்சுத் திணறி இறந்து கரை ஒதுங்குகின்றன. பல்வேறு நாடுகளில் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்துவதற்கு என்று நதிகளின் குறுக்கே சல்லடை அமைத்து தண்ணீரை வடிகட்டினாலும், மீண்டும் மீண்டும் பல்லாயிரம் டன் பிளாஸ்டிக்குகள் ஆண்டுதோறும் கடலில் கலந்து கொண்டுதான் உள்ளன.

இதுபற்றி நம்மிடம் பேசிய ஆசிரியை அனிதா, ``இப்படிக் கடலில் மிதக்கும் நெகிழிப் பொருள்களை, அதன் அளவைப் பொறுத்து மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர். மைக்ரோ பிளாஸ்டிக் என அழைக்கப்படும் நெகிழிகள் (4.75 எம்.எம் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும்). இரண்டாவதாக, மீசோ பிளாஸ்டிக் என்பது 4.75 - 200 எம்.எம் அளவுடையதாகும். மூன்றாவது வகையான மேக்ரோ பிளாஸ்டிக் என்பது 200 எம்.எம் அல்லது அதற்கும் மேலான அளவுடையதாகும். 'ஓஷன் க்ளீனப் புராஜெக்ட்ஸ்' (Ocean Cleanup Projects) எனப்படும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பல்லாயிரம் டன்கள் நெகிழிப் பொருள்களை வெளியேற்றினாலும், கடலின் அடித்தளத்திலிருந்து எடுத்துக் கொண்டால், பல சி.எம் அளவுக்குமேல் மிகச்சிறிய நெகிழிப் பொருள்கள் படிந்துள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. நெகிழிப் பொருள்கள் நீர்நிலைகளின் மேல் மிதப்பதால்,உயிர் வாயுவின் (Oxygen) அளவு குறைகிறது. அது மட்டுமன்றி, அந்நீர் நெகிழியால் மாசுபடுவதனால், தேவையற்ற தாவரங்கள் நீர்நிலைகளின் மேல் படர்ந்து Eutrophiction எனப்படும் பிரச்னைக்கு வழிவகுக்கின்றன. இப்பிரச்னையைக் கருத்தில் கொண்டுதான், நெகிழி உறிஞ்சிகளுக்கு மாற்றாக ஓர் இயற்கையான தென்னங்கீற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தென்னங்கீற்று உறிஞ்சியை (Bio Straws) கண்டுபிடித்துள்ளோம். 2018-ம் ஆண்டுக்கான 26-ம் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்த ஆய்வுக் கட்டுரையை மாவட்ட அளவிலான போட்டிக்கு அக்டோபர் 27 அன்று சமர்ப்பித்தோம். இந்த ஆய்வு மாநிலப் போட்டிக்குத் தேர்வாகி,அங்கு கவனம் பெற்றது.

தென்னங்கீற்றைக் குழல் வடிவில் சுற்றி ஓரிரு நாள்கள் அதே நிலையில் வைக்கும்போது அவை வடிவம் மாறாமல் குழல் வடிவில் அமைக்கின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் தென்னங்கீற்று உறிஞ்சியில் ஈரப்பதம், பூஞ்சான்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு புறஊதா கதிர்களை உறிஞ்சியின் பொட்டலங்கள் மேல் செலுத்தவேண்டும். குளிர் பதனப்படுத்துதலால் தென்னங்கீற்று உறிஞ்சிகளை 10-15 நாள்கள் வரை உபயோகப்படுத்த ஏதுவாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்தி பழச்சாற்றை அல்லது இளநீர் போன்றவற்றை உறிஞ்சிக்  குடிக்கும்போது, அதன் சுவை மாறுவதே இல்லை. மேலும், இவ்வகை உறிஞ்சிகளைப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் போது, அவை எளிதில் மண்ணில் மக்கிவிடுகின்றன. இதனால் மண்வளம் காக்கப்படுகிறது. நெகிழிப் பயன்பாடு குறைக்கப்படுகிறது. நெகிழிப் பைகளைக்கூட நாம் மறுசுழற்சி செய்ய முடியும். ஆனால் நெகிழி உறிஞ்சிகளை நாம் மறுசுழற்சி செய்ய முடியாது. இவ்வகை நெகிழி உறிஞ்சிகள் கடலோரப் பகுதிகளில் குப்பைகளாகக் கொட்டப்படுகின்றன. அவை கடல்வாழ் உயிரினங்களைப் பெருமளவில் பாதிக்கின்றன. சிறிய மீன்கள், ஆமைகள் ஆகியவற்றின் சுவாசத் துளைகளில் இவ்வகை நெகிழி உறிஞ்சிகள் அடைக்கும் போது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது. ஆனால், இவ்வகை பாதிப்புகளை நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை. இதற்கு மனிதர்களின் அலட்சியப் போக்கே காரணமாகும். இதன் மூலம் நாம் சில அறிய கடல்வாழ் உயிரினங்களை இழந்து வருகிறோம்.

தென்னங்கீற்று உறிஞ்சிகள் பலவகையிலும் பயன்தரக்கூடியவை. இவை எளிதில் மக்கும் தன்மை உடையவை. அதோடு, தென்னங்கீற்றைப் பயன்படுத்தி செய்வதால், இதற்காகப் பெரிய அளவில் முதலீடு செய்யத்தேவையில்லை. பெண்கள் சுய உதவிக்குழு மூலம் அதைச் செய்தால் சுய தொழில் வாய்ப்பும் ஏற்படும். தவிர, தென்னங்கீற்று இயற்கையான பொருள் என்பதால், அதன் மருத்துவப் பயன்கள் நமக்குக் கிடைக்கும். சரியான முறையில் இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்வதால் சுத்தமும், சுகாதாரமும் நிறைந்ததாக உள்ளது. இவற்றை நீண்டநாள்கள் பதப்படுத்தி வைக்க முடியும். கூடவே, தூக்கி எறியப்படும்போது மண்ணில் எளிதில் மக்கி மண்ணுக்கு உரமாக மாறுகிறது. இதனால் தென்னை விவசாயிகளும் பலன் பெறுவர். குறிப்பாக தற்போது டெல்டாவைத் தாக்கி 70 லட்சம் தென்னை மரங்களைச் சாய்த்த கஜா புயலின் கோர பொருளாதார தாக்குதலிலிருந்து இந்தத் தென்னங்கீற்று உறிஞ்சி தயாரிப்பு மூலம் கைதூக்கிவிட முடியும். அதோடு, அவர்களது பொருளாதார நிலை மேம்பட தொடர்ந்து அவர்களிடம் தென்னங்கீற்று உறிஞ்சிகளை தயாரிக்க ஊக்கப்படுத்தி, அவற்றை எல்லோரும் வாங்குவதன் மூலம், அவர்களின் வாழ்வைச் சீர்ப்படுத்த முடியும். அதேபோல் புயல், பெருமழைக் காலங்களில் மரங்கள் சாயும்போது,தென்னங்கீற்றை வீணாக்காமல் இவ்வகை உறிஞ்சிகள் செய்ய பயன்படுத்தும் போது குப்பையின் அளவும் குறையும்.

இன்றைய காலகட்டத்தில் நெகிழி உறிஞ்சிகளின் பயன்பாடுகள், தெருவோரக் கடைகள் தொடங்கி, கரும்புச்சாறு, பழச்சாறு கடைகள் மற்றும் பெரிய, பெரிய உணவகங்கள் மற்றும் விசேஷங்கள் வரை பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் அவ்வகை நெகிழி உறிஞ்சிகளின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வகை சிறிய பொருள்கள் தூக்கி எறியப்படும் போது, அதன் பாதிப்புகளைப்பற்றி பெரிய அளவில் நாம் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், நெகிழிப் பொருள்கள் எளிதில் மக்குவதில்லை. அதன்காரணமாக மண் நோயுற்றதாக மாறி வருகிறது. நெகிழி உறிஞ்சிகள் தயாரிக்க பாலி புரோப்பலின் மற்றும் பிஸ்பினால் ஏ (BPA) என்னும் ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நெகிழி உறிஞ்சிகள் சிறியதாக இருந்தாலும், அது மக்குவதற்கு சுமார் 600 வருடங்கள் ஆகும் எனச் சில ஆய்வுகளும் கூறுகின்றன. இதனால், நாம் அதற்கு மாற்றாக தென்னங்கீற்று உறிஞ்சியைப் பயன்படுத்தலாம். அதுதான் நமக்கும், இயற்கைக்கும் பெரும் நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதற்கு மாற்றாக, இந்தத் தென்னங்கீற்று உறிஞ்சியைப் பயன்படுத்தச் சொல்லலாம்.

இயற்கையைப் பயன்படுத்திச் செய்யப்படும் இதுபோன்ற ஆய்வுகள் மாணவர்களைப் புதிய பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும். மேலும் அதன்மூலம், பெறப்படும் வேலைவாய்ப்புகள் வளரும் மாணவர்கள் மனதில் தொழிற்புரட்சியை ஏற்படுத்தும். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படவும் இவ்வகை ஆய்வுகள் பேருதவியாக அமைகின்றன. கூடவே,நெகிழிப் பயன்பாட்டை குறைக்கும் மனப்பான்மை மாணவர் மத்தியில் வளரவும் இது உதவுகிறது. இதுபோன்ற ஆய்வுகள் அங்கீகரிக்கப்படும் போது அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பும் அதிகரிக்கும். இயற்கையும் பேணி காக்கப்படும்" என்றார் உற்சாகமாக