Published:Updated:

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ``பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் 
பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றது. எனவே, ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு விதிமுறைகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
 இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  

அப்போது மனுதாரர்கள் தரப்பில், மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மட்டுமே விதிமுறைகளைப் பிறப்பிக்கவுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் தங்களுக்குப் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு தொடர்ந்தால் தங்களது இணையதளங்களை மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு சார்பில், ``ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த பிறப்பிக்கப்படும் வரைவு விதியை மீறும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வரைவு விதிகள் ஜனவரி இறுதிக்குள் வகுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை கோரிய மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை  ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்டத் தடையை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.