Published:Updated:

`சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வயது வரம்பைக் குறைக்க வேண்டும்!' - நிதி ஆயோக் ஆலோசனை

`சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வயது வரம்பைக் குறைக்க வேண்டும்!' - நிதி ஆயோக் ஆலோசனை
`சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வயது வரம்பைக் குறைக்க வேண்டும்!' - நிதி ஆயோக் ஆலோசனை

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, `புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உத்திகள்' என்ற பெயரில் பல்வேறு ஆலோசனைகளை  வழங்கியுள்ளது. இந்த ஆலோசனைகளில் மிக முக்கியமானதாக, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத உச்சபட்ச வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளது. 

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். தற்போது  வரை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு பொதுப் பிரிவினராக இருந்தால் உச்சபட்ச வயது வரம்பாக 32 வயது  என உள்ளது. இதை 27 வயதாகக் குறைக்க நிதி ஆயோக் அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.

நேற்று (19.12.2018), புதுடெல்லியில் வெளியிடப்பட்ட `புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உத்திகள்' குறித்த திட்ட அறிக்கையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வயது வரம்பு குறைப்பது குறித்தும், சிவில் சர்வீஸ் தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு வழங்குவது,  தேர்வில் உள்ள குறைபாடுகளைக் களைவது, யூனியன் பப்ளிக் சர்வீஸ் ஆணையத்தை சுய அதிகாரம் மிக்க அமைப்பாக மாற்றுவது, இதை 2022-2023-ம் ஆண்டில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது எனப் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீரமைப்பு குழு, மத்திய அரசுக்கு 1519 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரையில் பொதுப்பிரிவினருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான உச்சபட்ச வயது வரம்பு 25 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 28 ஆகவும் வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.