Published:Updated:

``என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என முன்னரே தெரியும்!" - யுவராஜ் சிங் உருக்கம்

``என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என முன்னரே தெரியும்!" - யுவராஜ் சிங் உருக்கம்
``என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என முன்னரே தெரியும்!" - யுவராஜ் சிங் உருக்கம்

ஐ.பி.எல் ஏலம் ஏமாற்றம் அளிக்கவில்லை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். 2007-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு பிரமிக்க வைத்தவர். ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் யுவராஜ் சிங்தான். 2015-ம் ஆண்டு 15 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 6 போட்டிகளில் வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக யுவராஜ் சிங்கை அந்த அணி கழற்றிவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் முதல் சுற்றில் யுவராஜ் சிங்கை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. பின்னர் யுவிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப விலையான 1 கோடி ரூபாய்க்கே அவரை ஏலத்தில் எடுத்தது மும்பை அணி.  

இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், `` கிரிக்கெட் மீதான எனது வெறி இன்னும் குறையவில்லை; அதான் நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொடரில் நிச்சயம் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடுவேன். ஐ.பி.எல் ஏலத்தின் முதல் சுற்றில் என்னை யாரும் எடுக்க முன்வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் இதில் நான் எந்த ஏமாற்றமும் அடையவில்லை. இளம்வீரர்களைத் தேர்வு செய்யத்தான் அனைவரும் விரும்புவார்கள். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப்பகுதியில் இருக்கிறேன். கடைசியாக என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

இந்த வருடத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தேன் அது தற்போது அமைந்துள்ளது. மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் என்னைப்பற்றிக் கூறிய விஷயங்கள் மேலும், எனக்குத் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. மும்பை அணியில் எனக்கு உகந்த சூழல் இருக்கும். ஜாகீர் கான், சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மா ஆகியோருடன் நான் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவர்களுடன் இணைந்து விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். அணியில் உங்களுக்கு ஆதரவு இருக்கும்போது நீங்கள் திறம்பட செயல்பட முடியும். நல்ல ஊக்கமாக அமையும்.

கடந்த சீசனில் நான் சரியான ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் 4 ஆட்டங்களில் வெவ்வேறு நிலைகளில் களமிறக்கப்பட்டேன். ஒரே வரிசையில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முறை எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொள்வேன்”என்றார்