Published:Updated:

பதறச்செய்யும் பருவநிலைமாற்றம்... பாராமுகம் காட்டும் பணக்கார நாடுகள்! #COP24

விகடன் விமர்சனக்குழு
பதறச்செய்யும் பருவநிலைமாற்றம்... பாராமுகம் காட்டும் பணக்கார நாடுகள்! #COP24
பதறச்செய்யும் பருவநிலைமாற்றம்... பாராமுகம் காட்டும் பணக்கார நாடுகள்! #COP24

உலகைக் காக்கவேண்டியதுதான் தங்களை பெரியண்ணன்களாக நினைத்துக்கொள்ளும் பணக்கார நாடுகளின் பணியே தவிர, யாருக்கோ ஏதோ பிரச்னை என நினைத்து ஒதுங்குவதும், பாராமுகம் காட்டுவதும் அல்ல; இயற்கைக்கு, இந்த நாடு வித்தியாசங்கள் தெரியாது!

தொழிற்புரட்சிக்கு முன்பு வரைக்கும் இயற்கையால் மட்டுமே அலங்கரிக்கப்பட்ட உலகமிது. அதன்பின்பு இந்தப் பூமியில் நடந்த மாற்றங்கள் உலகத்தின் 2.0 வெர்ஷன் எனலாம். அறிவியல், புதிய கோட்பாடுகள், அரசியல் வரைமுறைகள் அனைத்தும் இந்தக் காலத்திலிருந்து நவீனமடைகின்றன; நிறைய மாற்றங்கள் காண்கின்றன. அதுவரைக்கும் இயற்கையையும், அதன் வளத்தையும் மட்டுமே சார்ந்திருந்த நாடுகள்தாம் பணக்கார நாடுகள். ஆனால், இந்தக் கருத்தோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது தொழிற்புரட்சி. ஒருவகையில் இது வளர்ச்சிதான் என்றாலும், அதன் பாதிப்புகளின் அளவும் மிகப்பெரிதாக மாறியது. விளைவு, அதுவரைக்கும் சீராக இயங்கிக்கொண்டிருந்த இயற்கை, அதன் சமச்சீரற்ற தன்மையை நோக்கி நகரத்தொடங்கியது. அதன்விளைவுதான் இன்றைய உலகம் எதிர்கொண்டு நிற்கும் பருவநிலைமாற்றம்.

சர்வம் வெப்பமயம்: 

பூமியின் பரப்பில் வெப்பநிலை குறிப்பிட்ட சராசரி அளவுக்கு மேல் உயர்ந்தால் உலக வெப்பமயமாதல் ஏற்படும். தொழிற்புரட்சிக்கு முன்புவரைக்கும் சூரிய ஒளி அதிகரித்தல் அல்லது குறைதல், பூமி தனது நீள் வட்டப்பாதையிலிருந்து நுண்ணிய அளவில் விலகுதல், திடீர் பேரிடர்கள் போன்ற காரணங்களால் மட்டுமே பருவநிலை மாற்றம் ஏற்பட்டுவந்தது. ஆனால், அதன்பின்பு இந்தக் காரணிகள் மொத்தமும் மாறிவிட்டன. அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் (கார்பன் - டை-ஆக்சைடு, குளோரோ புளூரோ கார்பன் போன்றவை) வெளியேற்றம், பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களின் அதீதப் பயன்பாடு, அதிகரித்து வரும் மக்கள்தொகை, முக்கியமாக அழிக்கப்படும் இயற்கை வளங்கள் போன்ற மனிதனின் தொடர் செயல்களால் உலகப் பரப்பின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே சென்றது; செல்கிறது. கடந்த நூற்றாண்டில் 0.6 லிருந்து 0.9 டிகிரி செல்சியஸாக இருந்த பூமிப்பரப்பின் வெப்பநிலை இந்த நூற்றாண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. 

பாரிஸ் அழைக்கிறது!

தொழிற்புரட்சியைத் தொடர்ந்து காலனியாதிக்கம், உலகப்போர்கள், புரட்சிப் போராட்டங்கள் என்று ஒவ்வொரு நாடும் பிஸியாக இருந்ததால் சுற்றுச்சூழலை பற்றி தாமதமாகவே உணர்ந்தனர். அதன்பின்னர்தான் ஐ.நா.,வில் சுற்றுச்சூழலை காப்பதற்காகத் தனி அமைப்பு நிறுவப்பட்டது. மேலும் 1992-ம் ஆண்டு தொடங்கிய United Nations Framework Convention on Climate Change (UNFCCC) என்ற அமைப்பு உலகளவில் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பல நிகழ்வுகள் சுற்றுச்சூழல் சார்ந்து நிகழ்ந்துவந்தாலும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற `பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்' தீர்க்கமான முடிவுகளை வலியுறுத்தித் தீர்வை பெற்றது. இதன்படி, தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததிலிருந்து 2℃ அளவுக்குப் பூமியின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாடும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 2020-ம் ஆண்டுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்ய வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்றும் கூறப்பட்டது. பெட்ரோல் பயன்பாட்டை விரைவில் குறைத்துக்கொண்டு பசுமை எரிவாயுக்களை பயன்படுத்தப்போவதாக ஐரோப்பிய நாடுகளும் நம்பிக்கையளித்தனர்.

அமெரிக்கா - பொறுப்பு துறப்பு! 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியிலிருந்து வெளியேற்றிய பசுமை குடில் வாயுக்களுக்கு வரலாற்று ரீதியில் பொறுப்பேற்க வேண்டும் (Historical Responsibility) என்று `கியோட்டோ பருவநிலை மாற்ற ஒப்பந்தம்' (1997) குறிப்பிட்டது. பாரிஸ் ஒப்பந்தத்திலும் தன் தொடர் அலட்சியங்களுக்குப் பிறகே ஒரு வழியாக இணைந்தது அமெரிக்கா. ஒப்பந்தத்துக்கான முன்னெடுப்புகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அப்போதைய பிரதமர் ஒபாமா உறுதியளித்தார். ஆனால், கடந்த ஆண்டு அதிபர் ட்ரம்ப் தலைமையிலான `புதிய அமெரிக்கா', ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அமெரிக்காவின் திறன்களும் வேலைவாய்ப்பும் குறையும், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். மேலும் வளர்ந்த நாடுகளைக் குற்றம் சாட்டி, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே ஒப்பந்தம் சாதகமாக உள்ளது என்று விலகலுக்கான காரணத்தைக் கூறினார் ட்ரம்ப். `அமெரிக்காவுக்கே பொறுப்பில்லை, நாங்க மட்டும் பண்ணணுமா' என்று இதையடுத்து பல நாடுகள் ஒப்பந்தத்தை அலட்சியப்படுத்தினார்கள். இது நாடுகளின் தன்னார்வ அற்பத்தனத்தையே வெளிப்படுத்துகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகளை புறக்கணித்து, தொடர்ந்து ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தது அமெரிக்கா.

நிலைமை இப்படியிருக்கையில் சில நாடுகள் மட்டும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இயங்கிவருகின்றன. இந்நிலையில், 2020-க்குள் அனைத்து நாடுகளையும் பாரிஸ் உடன்படிக்கைக்காக ஒருங்கிணைத்துச் செயல்படுத்த சமீபத்தில் `COP24 - Katowice' சந்திப்பு போலந்தில் நடைபெற்றது. மொத்தம் 196 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு பாரிஸ் உடன்படிக்கைக்காக வழிமுறைகளையும், அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் விவாதித்தனர். தொழில்நுட்ப ரீதியாக எப்படிப் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது என இதில் பேசப்பட்டது. இறுதியில் அனைத்து நாடுகளும் பாரிஸ் உடன்படிக்கைக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ``இது மிகப்பெரிய பொறுப்பு" என்கிறார் கூட்டத்தை முன்னின்று நடத்திய மைக்கேல் குர்ட்டைக்கா.

இந்த வார்த்தைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், உலகின் பணக்கார நாடுகளின் செயல்பாடுகள் இதில் திருப்தியளிக்கும்படி இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அந்த வகையில் இந்தச் சந்திப்பு கிட்டத்தட்டத் தோல்வியடைந்துவிட்டது என்பது அவர்கள் வாதம். ஒருவேளை காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் அதிகமாகி புயல்,வறட்சி மற்றும் கடல்மட்டம் உயருதல் போன்ற பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டால், சில ஆண்டுகளில் மனித குலம் மிகப்பெரிய விளைவைச் சந்திக்க வேண்டும்; இதிலிருந்து உலகைக் காக்கவேண்டியதுதான் தங்களை பெரியண்ணன்களாக நினைத்துக்கொள்ளும் பணக்கார நாடுகளின் பணியே தவிர, யாருக்கோ ஏதோ பிரச்னை என நினைத்து ஒதுங்குவதும், பாராமுகம் காட்டுவதும் அல்ல; இயற்கைக்கு, இந்த நாடு வித்தியாசங்கள் தெரியாது!

அடுத்த கட்டுரைக்கு