Published:Updated:

``போராட்டம் தோல்வியடைந்தால் மன அழுத்தம் வரத்தான் செய்யும்!" - இரா.முத்தரசன் #LetsRelieveStress

``போராட்டம் தோல்வியடைந்தால் மன அழுத்தம் வரத்தான் செய்யும்!" - இரா.முத்தரசன் #LetsRelieveStress
``போராட்டம் தோல்வியடைந்தால் மன அழுத்தம் வரத்தான் செய்யும்!" - இரா.முத்தரசன் #LetsRelieveStress

"எந்தப் போராட்டமும் எடுத்த எடுப்பிலேயே வெற்றிபெற்றுவிடாது. அதேநேரத்தில் தோற்றும்போயும்விடாது. ஒரேநாளில் முடியலாம் அல்லது நாள்கள் அதிகமாகலாம். இந்த மாதிரியான நேரங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், போராட்டத்தில் உறுதியாக இருந்து வெற்றிபெற வேண்டும்.

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். மக்கள் பிரச்னைக்காக எப்போதும் களத்தில் நிற்பவர். வாழ்க்கையில் தனக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அவற்றை எதிர்கொண்டு, எப்படி வெற்றிபெற்றார் என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

``இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1968-ம் ஆண்டில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அப்போதுதான் கீழவெண்மணிச் சம்பவம் நடந்தது. அது கொடூரமானது. அந்தச் சம்பவம் நடந்த மறுநாள் எங்களது கிராமத்தில் கட்சித் தோழர்கள் தலைமையில் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது, பிரபல தினசரி பத்திரிகை ஒன்றில் முதல் பக்கச் செய்தியாக கீழவெண்மணிச் சம்பவம் வெளியிடப்பட்டிருந்தது. தோழர்கள் அந்தச் செய்தியைக் கூட்டத்தில் எல்லோருக்கும் கேட்கும்படி, உரக்கப் படிக்கச் சொன்னார்கள். அப்போது எனக்கு 18 வயது. அந்தச் செய்தியைப் படிக்கும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல், அழுதேன். பிறகு, அந்தச் சம்பவத்தைக் கண்டித்து பலகட்ட போராட்டங்களைக் கட்சி நடத்தியது. 

கீழவெண்மணிச் சம்பவத்தையொட்டி, கிழக்கு தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களின் கூலி மற்றும் வேலைநேரம் எவ்வளவு என்பதை ஆய்வு செய்ய கணபதியார் கமிஷனை, தமிழக அரசு நியமித்தது. அந்த கமிஷன் ஒவ்வொரு தாலுகா அலுவலகம் மூலமும் மனுக்களைப் பெற ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அப்போது, ஒவ்வொரு மையத்திலும் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு, தங்களுடைய கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். அதேபோல, நிலவுடைமையாளர்கள் `கூலி உயர்வு கூடவே கூடாது’ என்று மனு தந்தார்கள். 

எல்லோரிடமும் மனுக்களைப் பெற்று, அதுகுறித்து முழுமையாக விசாரணை செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், `விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி மிக மிகக் குறைவாக இருக்கிறது. அரசுப் பணியில் கடைநிலை ஊழியருக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியம்கூட விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த ஊதியத்தையாவது அவர்கள் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்தது.

கமிஷனால் பரிந்துரை மட்டும்தான் செய்ய முடியும். இதை அரசு ஏற்கலாம், அல்லது நிராகரிக்கலாம். ஆனால், இதுகுறித்து அப்போதைய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, கமிஷன் பரிந்துரையை அரசு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள் என ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினோம்.

முதன்முதலில் நான் பங்கேற்ற அந்தப் போராட்டத்தில், 150 பெண்கள் உட்பட ஏறக்குறைய 4,500 பேர் கைது செய்யப்பட்டோம். ஒரு மாதம் சிறையில் இருந்தோம். என்னுடைய முதல் சிறைவாசம் அது. தொடக்க நாள்முதலே சிறை உணவுகள் எனக்குப் பிடிக்கவில்லை. நான் வீட்டில் செல்லமாக வளர்ந்தவன். வீட்டில் சாப்பாடு நன்றாக இல்லை என்பதற்காக அம்மாவுடன் சண்டை போட்டதெல்லாம் சிறையில் நினைவுக்கு வந்துபோனது. பிறகு தோழர்கள், `இங்கே சிறை விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். சாப்பிடவில்லை என்றால் உடல்நலம் பாதிக்கும்’ என்றுகூறி என்னைச் சமாதானப்படுத்தினார்கள். முதலில் இரண்டுநாள் சரியாகச் சாப்பிடவில்லை என்றாலும், பிறகு என்னை மாற்றிக்கொண்டேன். ஆனால், அந்தச் சிறைவாசத்தின்போது ஒரு படிப்பினையைக் கற்றேன். வீட்டில் இனிமேல் சாப்பாடு சரியில்லை என்பதற்காக அம்மாவுடன் சண்டை போடக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

அதன்பிறகு, 1970-ம் ஆண்டு நிலஉச்சவரம்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தாலும், அவை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. உபரிநிலங்களை அரசு கையகப்படுத்தவில்லை. சட்டத்தை மீறி இன்னும் சிலர் நிலங்களை தங்கள்வசம் வைத்திருந்தனர். இதை அடையாளம் காட்டும் வகையில், நிலத்தில் இறங்கும் நாடு தழுவிய போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. 

தமிழகத்தில் காலாவதியான பண்ணைகளை அடையாளம் கண்டு, யார் யாருடைய தலைமையில் நிலத்தில் இறங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்தேன். அத்துடன் இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்தேன். ஆகஸ்ட் 15-ம் தேதி நிலத்தில் இறங்கிப் போராட வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 8-ம் தேதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லா தலைவர்களும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். ஏறக்குறைய, தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10,000 பேர் கைதானார்கள். எல்லோரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது, `நீ எப்படியாவது குறிப்பிட்ட நிலத்தில் கட்சிக் கொடியை நட்டுவிடு’ என்று எனக்குச் சிறையிலிருந்து தோழர்கள் மூலம் தகவல் வந்தது. போலீஸுக்குத் தெரியாமல் திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு நடந்தே சென்று எஞ்சியிருந்த தோழர்களை ஒன்றுதிரட்டினேன். 

அப்போது மிகக் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது. போலீஸ் நுழையமுடியாத குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு இரவில் எல்லோரையும் வரச் சொல்லிவிட்டேன். மழையில் நனைந்தபடி அதிகாலை 4 மணி அளவில் வாய்க்கால் வழியாகத் தோழர்களுடன் அந்த நிலத்தைச் சென்றடைந்தோம். குறிப்பிட்ட நாளில் கனமழைக்கு நடுவே குறிப்பிட்ட அந்த நிலத்தில் 300 தோழர்களுடன் நிலத்தில் இறங்கி, கட்சிக் கொடியை நட்டேன். அதற்குள் தகவலறிந்த போலீஸ் நனைந்துகொண்டே அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். எங்களைக் கைது செய்த போலீஸார்,`நாங்கள்தான் எல்லோரையும் முன்பே கைது செய்துவிட்டோமே... நீங்கள் எங்கேய்யா இருந்தீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டனர். அந்தப் போராட்டம் மிகப் பெரும் வெற்றிபெற்றது.

தலைமறைவாக இருந்துகொண்டு, ஒரு போராட்டத்தை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியை, அது எனக்குப் பெற்றுத்தந்தது. அதன்பிறகு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். அதேபோல, படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது கட்சியின் மாநிலச் செயலாளராகி இருக்கிறேன்.

பொதுவாக, மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்துப் போராடும்போது, அது வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். சிலநேரம் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படும். ஆனால், அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது போராடக்கூடியவர்களையும் பாதிக்கும். ஆகவே, போராடுபவர்களுக்குத் தன்னம்பிக்கை தந்து, கோரிக்கைகளை அடைவதற்கு உண்டான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனாலும், இதுபோன்ற நேரங்களில் மிகக் கடுமையான மனஉளைச்சல் ஏற்படும். காரணம், நிர்வாகம் பிடிவாதமாக இருக்கும். போராட்டம் ஒன்று, இரண்டு... என பத்து நாள்களாகும்போது, `நாம் நினைத்தது நடக்காமல் போய்விடுமோ?’ என்று போராடுபவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுதற்கான வாய்ப்புகளும் உண்டு. 

இதுபோன்ற நேரங்களில் தூக்கம் போய்விடும். மனஉளைச்சல் நீடிக்கும். சாப்பாடு இருந்தாலும் சாப்பிடப் பிடிக்காது. இதுமாதிரி நிறைய நெருக்கடிகள் வரும். அப்போது மன உறுதியுடன் இருந்து போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தி, வெற்றிபெற வேண்டும். எந்தப் போராட்டமும் எடுத்த எடுப்பிலேயே வெற்றிபெற்றுவிடாது. அதேநேரத்தில் தோற்றும்போய்விடாது. ஒரேநாளில் முடியலாம் அல்லது நாள்கள் அதிகமாகலாம். இந்த மாதிரியான நேரங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், போராட்டத்தில் உறுதியாக இருந்து வெற்றிபெற வேண்டும். இதுபோன்று பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்’’ என்கிறார் இரா.முத்தரசன்

அடுத்த கட்டுரைக்கு