Published:Updated:

முதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த ஆடை வடிவமைப்பாளர்... டாப் -8 டிசைனர்ஸ் 2018!

விதவிதமான ஆடைகள் வடிவமைப்பதில் நம் இந்திய வடிவமைப்பாளர்கள் திறமைவாய்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களில், இந்த ஆண்டின் ட்ரெண்ட் செட் ஆடைகளை வடிவமைத்த டாப் 8 இந்திய ஃபேஷன் டிசைனர்ஸ் இவர்கள்.

முதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த ஆடை வடிவமைப்பாளர்... டாப் -8 டிசைனர்ஸ் 2018!
முதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த ஆடை வடிவமைப்பாளர்... டாப் -8 டிசைனர்ஸ் 2018!

நாம் அன்றாடம் உடுத்தும் உடை முதல் திருமணம், பிறந்த நாள் போன்ற ஸ்பெஷல் நிகழ்வுகளுக்கு உடுத்தும் உடை வரை வெவ்வேறு பேட்டர்ன்களில் எண்ணற்ற ஆடைகள் தற்போது மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. பாரம்பர்யத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து விதவிதமான ஆடைகள் வடிவமைப்பதில், நம் இந்திய வடிவமைப்பாளர்கள் தனித்தன்மைவாய்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களில், இந்த ஆண்டின் ட்ரெண்ட் செட் ஆடைகளை வடிவமைத்த டாப் 8 இந்திய ஃபேஷன் டிசைனர்ஸ் இவர்கள்தாம்.

மஸாபா குப்தா:

``அழகு என்பது பெரும் சுமையே" என்று கூறும் மஸாபா குப்தா, முன்னாள் பாலிவுட் நடிகை நீனா குப்தா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸின் மகள். இந்தியாவின் மாபெரும் ஃபேஷன் ஷோவான `லேக்மீ ஃபேஷன் வீக்கில்' 19-வது வயதிலேயே தனது முதல் ஆடை கலெக்‌ஷனை வெளியிட்டார்.

இவருடைய `கேமரா' பிரின்ட் கலெக்‌ஷன், உலகளவில் பெரிய ஹிட். இந்தக் காலத்து பெண்கள் அனைவரும் விரும்பி வாங்கும் `பிரின்டெட் மொபைல் கவர்களை' டிசைன் செய்வது இவருக்கு மிகவும் பிடித்த ஹாபி. பாரம்பர்ய உடைகளில் நவீன டிசைன்களைப் புகுத்தி, வித்தியாச ஆடைகளை வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. ஷில்பா ஷெட்டி, பரினீதி சோப்ரா, ஆலியா பட், சோனம் கபூர் ஆகியோரின் `ஃபேவரைட் டிசைனர்'. `இன்ஸ்டாகிராம் ஷோ' நடத்திய முதல் இந்திய டிசைனர் மஸாபா. 2018-ம் ஆண்டின் ட்ரெண்ட்செட் நிறங்களான பிரைட் பிங்க், மஞ்சள், ஆரஞ்சு, மஸ்டர்ட் போன்ற நிறங்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து, தன் விதவிதமான ஆடைகளின்மூலம் பொதுமக்களிடம் கொண்டுசேர்த்தார்.

மனிஷ் மல்ஹோத்ரா:

பெரும்பாலான பாலிவுட் நடிகைகளின் விருப்பமான டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா. 2005-ம் ஆண்டு தனது பிராண்ட் லேபிளை வெளியிட்ட மனிஷ், 2014-ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரு பில்லியன் ரூபாய் வரை டர்ன்ஓவர் செய்தார். இவருக்கு மாடலிங் செய்வது பிடிக்கும். மாடல்களுக்கு ஆடை வடிவமைப்பது அதைவிடப் பிடிக்கும். 1995-ம் ஆண்டு வெளிவந்த `ரங்கீலா' படத்தில், கதாநாயகி ஊர்மிளா மடோன்கர் அணிந்திருந்த அத்தனை உடைகளையும் வடிவமைத்தவர் மனிஷ்தான். இதற்காக இவருக்குச் சிறந்த காஸ்டியூம் டிசைனருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பணிபுரிந்த இவர், பாலிவுட் நட்சத்திரங்களின் `பர்சனல் ஸ்டைலிஸ்ட்டாக' மாறினார். தற்போது, ஆஸ்கர் அகாடமியில் ஓர் உறுப்பினராக இருக்கிறார். பாலிவுட்டில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், மூன்று தலைமுறை நடிகைகளின் ஃபேவரைட் டிசைனராக வலம்வந்துகொண்டிருக்கிறார். இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, `பியூட்டி குயின்ஸ்' கரீனா மற்றும் கரிஷ்மா கபூர் போன்றோர் மனிஷின் பிடித்தமான நடிகைகள். சுமார் ஆயிரம் படங்களில் பணிபுரிந்த இவரின் தனிப்பட்ட ஸ்டைல், கனமான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள்தாம். இந்த ஆண்டு பாலிவுட் மட்டுமல்ல மோலிவுட் வரையிலும் இவரின் ஸ்டைலிஷ் Vogue கவுன்ஸ் பலரையும் ஈர்த்தது. Filmfare உள்ளிட்ட பல விருதுகளில் பங்கேற்கவிருக்கும் பிரபலங்களுக்கு, இந்த ஆண்டு அதிக ஆடைகளை வடிவமைத்த வடிவமைப்பாளர் இவரே.

சபியாசச்சி முகர்ஜி:

இந்தியாவில் `டிசைனர் திருமண உடை' என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் சபியாசச்சி முகர்ஜிதான். கொல்கத்தாவை பூர்வீகமாகக்கொண்டிருக்கும் இவர், `ராவன்', `இங்கிலீஷ் விங்கிலிஷ்' போன்ற பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்துள்ளார். டார்க் நிறங்களில் கனமான எம்ப்ராய்டரி  திருமண உடைகள் டிசைன் செய்வதில் கில்லி. வித்யா பாலன், அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி, இந்த ஆண்டு திருமணமான பாலிவுட் ஸ்டார்ஸ் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களின் திருமண உடைகளை இவர்தான் வடிவமைத்துள்ளார். `பேண்ட், பஜா & பிரைட்' எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம், பல பெண்களுக்கு இலவசமாக தான் வடிவமைத்த உடைகளை வழங்கியுள்ளார். சமந்தா, ஐஸ்வர்யா ராய், தபு, சுஷ்மிதா சென், தீபிகா படுகோன், கங்கனா ரனாவத் உள்ளிட்டோரின் நம்பர் 1 டிசைனர் சாய்ஸ், சபியா.

ரித்து குமார்:

இன்று எங்கு திரும்பினாலும் பல்வேறுவிதமான `பொட்டிக்குகளை' நாம் பார்ப்பதற்குக் காரணமாய் இருந்தவர் `பத்ம ஸ்ரீ' ரித்து குமார். ஆடை வடிவமைப்பவர்கள் ஏன் அவர்களுக்கென்று தனிக் கடையை வைத்துக்கொள்ளக் கூடாது என்று எண்ணி, தனது பெயரிலேயே முதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த டிசைனர் ரித்து. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு டேபிள், நான்கு பிளாக் பிரின்டர்களுடன் கொல்கத்தா பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், தன் ஆடை வடிவமைப்புப் பணியைத் தொடங்கினார். `இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருது' பெற்ற ஒரே டிசைனர் இவர்தான். ட்ரெண்டி டிசைன்களை பாரம்பர்யத் துணி வகைகளில் பதித்து, புதுமையான ஆடைகளை உருவாக்குவதில் வல்லவர். தற்போது பாரீஸ், நியூயார்க் உள்ளிட்ட நாடுகளிலும் இவரின் பிரத்யேக ஷோரூம்கள் உள்ளன. இளவரசி டயானா, பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்ஷித் உள்ளிட்ட பலர் இவர் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை உடுத்தியுள்ளனர். அன்றாடம் அனைவரும் உடுத்தும் இந்த ஆண்டின் `கேஷுவல் ஆடைகள் வடிவமைப்பில்' இவரின் பங்கு அதிகம்.

கவுரங் ஷா:

பட்டு, காதி போன்ற `நேச்சுரல் ஃபைபர்' துணி வகைகளில் `இத்தனை அழகான டிசைன்களை உருவாக்க முடியுமா!' என்று அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியவர் கவுரங். ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சிறு வயதிலிருந்தே டிசைனிங் மீது அதிக நாட்டம்கொண்டவர். அதிலும், வெறும் இயற்கைத் துணிவகைகளை மட்டுமே கொண்டு டிசைன் செய்வது இவருடைய ஸ்பெஷாலிட்டி. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும், இந்த வருடம் வெளியாகி ஹிட் அடித்த `நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷின் அத்தனை உடைகளையும் வடிவமைத்தவர் இவர்தான். தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 500 நெசவாளர்களுடனும் பணிபுரியும் இவர், தொடக்கத்தில் வெறும் பத்து நெசவாளர்களுடன் தன் டிசைனிங் பயணத்தைத் தொடங்கினார். ``செயற்கைத் துணிவகைகளை என் ஆடை வடிவமைப்பில் நிச்சயம் பயன்படுத்தவே மாட்டேன்" என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் இவர்தான், இந்த ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக்கின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்.

தருண் தஹிலியானி:

டிசைன், ஃபினிஷ், புதுமை இவற்றோடு `ஸ்கின் டோன்களையும்' மனதில் வைத்துக்கொண்டு ஆடைகள் வடிவமைப்பது தருண் மட்டுமே. இத்தாலியன் பேட்டர்ன் கட்டிங் மற்றும் இந்தியர்களின் கைத்திறன் இரண்டையும் கலந்து `டிஜிட்டல் டெக்ஸ்டைல் பிரின்டிங்' எனும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் எனும் அங்கீகாரம் பெற்றவர். ஆண்களுக்கென பிரத்யேக `மணமகன்' கலெக்‌ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துவைத்தவர் இவர்தான். `மிலான் ஃபேஷன் வீக்கில்' விதவிதமான இந்தியத் திருமண உடைகளைக் காட்சிப்படுத்திய முதல் இந்தியர் இவர். மேலும், பிரபல பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தின் திருமண உடை, அமெரிக்கப் பாடகி `லேடி காகா'வுக்கு கான்செர்ட் புடவை, ஓப்ரா வின்ஃபிரேயின் ஸ்பெஷல் உடை எனப் பல ஹாலிவுட் பிரபலங்களின் விருப்பமான டிசைனர் தருண். இந்த ஆண்டு, இவர் வடிவமைத்த கேப் கவுன், எம்ப்ராய்டரி Fusion ஆடைகள் பிரபலங்களை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிகம் ஈர்த்தது.

நீத்தா லுல்லா:

பாலிவுட் வரலாற்றிலேயே, ஆடை வடிவமைப்புக்காக அதிகப்படியான விருதுகளை வாங்கிக் குவித்தவர் நீத்தா லுல்லாதான். சுமார் 300 படங்களில் பணியாற்றிய இவரின் வாழ்வை முற்றிலும் மாற்றியது, கல்லூரியில் முதன்முதலில் `சிறந்த ஆடை வடிவமைப்பாளர்' எனும் பட்டம்தான். 1991-ம் ஆண்டு வெளியான `லம்ஹீ' படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக ஆடை வடிவமைத்தார். அதில், மேற்கத்திய பேட்டர்னுடன் நம் பாரம்பர்ய துணிவகையை இணைத்து, `இண்டோ-வெஸ்டர்ன்' எனும் புதிய கான்செப்ட்டை உருவாக்கினார். இது பல பெண்களைக் கவர்ந்தது. நாம் அனைவரும் பார்த்து ரசித்த `தேவதாஸ்', `ஜோதா அக்பர்' படங்களில் ஐஸ்வர்யா ராயின் பிரமாண்ட உடைகளை வடிவமைத்ததும் இவர்தான். இதுமட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனின் திருமண உடைகளையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். ஷ்ரியா சரண், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் போன்ற பல ஃபேஷன் ஐகான்களையும் இந்த ஆண்டின் பல ட்ரெண்ட் செட்களையும் உருவாக்கிய பெருமை நீத்தாவையே சேரும். இந்த ஆண்டு இவர் வடிவமைத்த இண்டோ-வெஸ்டர்ன் பேட்டர்னில் லெஹெங்கா சோலி, பேன்ட் சூட் போன்ற உடைகள் இளைஞர்கள் மத்தியில் வைரல் ஹிட்.

அனிதா டோங்க்ரே:

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய டிசைனர் அனிதா டோங்க்ரே. `AND', `குளோபல் டெசி', `பிங்க் சிட்டி', `கிராஸ் ரூட்' போன்ற பிராண்டுகளைத் தெரியாத ஃபேஷன் பிரியர்கள் இருக்கவே முடியாது. இவற்றை நிறுவியவர் அனிதா. இரண்டு தையல் மெஷினுடன் தன் டிசைனிங் பயணத்தைக் தொடங்கி இன்று சர்வதேச அளவில் டாப் ஆடை வடிவமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். `டச்சஸ் ஆஃப் கேம்பிரிட்ஜ்' - கேத்தரினின் ஃபேவரைட் வடிவமைப்பாளர் இவர். மலிவு முதல் விலை உயர்ந்த ஆடை வகைகளை இவரின் வடிவமைப்பில் வாங்கலாம். சுற்றுச்சூழல் பற்றிய அதிக அக்கறைகொண்டிருப்பதால், 2013-ம் ஆண்டில் PETA அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டார். `குயின் ஆஃப் பிரெட் (Pret- ரெடிமேட் ஆடைகள்)' என்று அனிதாவுக்கு செல்லப்பெயரும் உண்டு. இந்த ஆண்டு நடைபெற்ற லாக்மீ ஃபேஷன் வீக்கில், ஷாஹித் கபூர் மற்றும் அவரின் மனைவி மீரா ராஜ்புட் இருவருக்கும் இவர் வடிவமைத்த உடைகள், இந்திய மணமக்களின் ஃபேவரிட்டாக மாறியது.