Published:Updated:

"விதை நான் போட்டது!"... மதுரையில் பசுமையாய் ஒரு 'மகளிர் மட்டும்' விவசாயம்

"விதை நான் போட்டது!"... மதுரையில் பசுமையாய் ஒரு 'மகளிர் மட்டும்' விவசாயம்
"விதை நான் போட்டது!"... மதுரையில் பசுமையாய் ஒரு 'மகளிர் மட்டும்' விவசாயம்

``கம்புப் பயிருல நிறைய தூக்கணாங்குருவிக வந்து உக்கார்ந்து அம்புட்டுப் பயிரையும் தின்னுபுடும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி `2.0' படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்த எங்க இளைய பையன், `அதுகளை வெரட்டாதீங்க. வேற எங்க போய்ச் சாப்பிடும், பாவம்'ன்னு சொல்லி அதுக திங்கிறதை ரசிச்சுக்கிட்டுக் கெடந்தான்."

துரை வாடிப்பட்டி குலசேகரன்கோட்டைச் சாலையில் பயணித்தபோது, ஒரு சிறிய வீட்டின் பக்கமிருந்து மொச்சை வாசம் மூக்கைத் துளைத்தது. நின்று பார்த்தால், நீண்ட பரப்பு முழுவதும் காய்கறி, பயிர், பயறு, பழங்கள் எனப் பல்வேறு வகைகளைக் கலந்து கட்டி நட்டு வைத்து விளைவிக்கிறார்கள் எனத் தெரிந்தது. அனுமதிபெற்று உள்ளே சென்றோம். வீடு நிலம் என எங்கும் பசுமை மயம்!

அந்த வீட்டில் முதுபெண்கள் இருவர், இளம் பெண்கள் இருவர், பெண் பிள்ளைகள் இருவர். மூத்தவர், காமாட்சி பாட்டி. அடுத்தவர், சாந்தி. சாந்திதான் இந்த வீட்டு விவசாயத்தின் முதுகெலும்பு. பெண்கள் நால்வரும்தான் இந்தப் பசுமையின் பங்காளிகள். மொத்தத்தில் இந்த வீட்டில் நடப்பது, `மகளிர் மட்டும்' விவசாயம்!

சாந்தி பேசும்போது, ``நாங்க கூட்டுக் குடும்பம். இந்தப் பொண்ணுங்க எங்க வீட்டு மருமக்கள். இதுக ரெண்டுமே கூடப் பிறந்த அக்கா தங்கச்சிங்க" என்று அறிமுகம் செய்தார். இளம் பெண்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ``எங்க வீட்டுக்காரங்க வெளியூர்களுக்கு வேலைக்குப் போயிருவாங்க. நாங்க இங்க இருந்து எங்க நெலத்தில விளைச்சல் பண்ணிச் சாப்பிடுறோம். விலைக்கெல்லாம் விற்க மாட்டோம். ஊருகள்ல இருக்கிற எங்க உறவுக்காரங்களுக்கே பிரிச்சுக் கொடுத்திருவோம். சரியாப் போயிரும். செலவுகள் கை மீறாம இருக்குது" என்கிறார்கள். 

பசு மாடுகள் வளர்ப்பதால், சாணம்தான் இங்கு உரமாய்ப் பயன்படுத்தப்படுகிறது. மழைக்காலத் தொடக்கத்தில் மட்டும் யூரியா அடிக்கிறார்கள். ``மழை ஆரம்பிக்கிறதுக்கு முன்னமே மாட்டுச்சாணத்தை எருவாக்கி நெலத்தில எல்லாப் பக்கமும் தூவிவிட்டிருவோம். மழை பெய்ஞ்சதும் உழுது வெதப்போம். நல்லா மொளைச்சு வளர்ந்து வந்ததும் ஒரு மாசத்தில களையெடுப்போம். மறுமாசம் மழை வந்தா, பொட்டாசியம் யூரியா அடிப்போம்.மொத்தமா மூணு மாசம்தான். அறுவடை பண்ணிடுவோம். பிறகு, ஏழு மாசத்துக்கு நெலம் சும்மா  கெடக்கும்" என விளக்கினார், சாந்தி. மழைக்குப்பின் நிலத்தை டிராக்டர் கொண்டுவந்து ஆண்கள் உழுகின்றனர். மற்றபடி, இங்கே இந்தப் பெண்கள்தான் சகலமும்.

இந்தப் பகுதியில் உங்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எனக் கேட்டோம். ``நிலத்தடி தண்ணி இங்க சுத்தமா கிடையாதுங்க. வானம் பார்த்த பூமி. பக்கத்தில இருக்கிற கண்மாய்க எதுவும் தூர்வாரப்படாம இருக்கு. இதனால நோய்த் தொற்று ஆபத்தும் இருக்கு. மழை வந்தா கொஞ்சம் தண்ணி வரும்" - தெளிவாகக் குறைகளை அடுக்குகின்ற இந்த இளம் சகோதரிகள் இருவரும் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்கள்.

செடிகளில் எலுமிச்சை, மாதுளை காய்த்துத் தொங்குகின்றன. இதயத்துக்கு நலம் அளிப்பதும், கிடைத்தற்கு அரியதுமான மலை சீத்தாப்பழ மரம் இங்கே கனி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. கம்பு, உளுந்து, தட்டைப்பயறு, மொச்சை, வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, அவரை, துவரை என்று வீட்டுக்கான எல்லாக் காய்கறிகளையுமே தங்கள் நிலத்தில் விளைய வைத்துப் பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

``கம்புப் பயிருல நிறைய தூக்கணாங்குருவிக வந்து உக்கார்ந்து அம்புட்டுப் பயிரையும் தின்னுபுடும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி `2.0' படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்த எங்க இளைய பையன், `அதுகளை வெரட்டாதீங்க. வேற எங்க போய்ச் சாப்பிடும், பாவம்'ன்னு சொல்லி அதுக திங்கிறதை ரசிச்சுக்கிட்டுக் கெடந்தான்." என்று சுவாரஸ்யமாகச் சொல்லிமுடித்தார், சாந்தி. செடிகொடி, மரங்கள் தவிர இங்கே பத்துக் கோழிகள் மேய்கின்றன. வாத்துக்குட்டிகள் ஜோடியாய் வலம் வருகின்றன. ``இன்னும், ஆடு மாடெல்லாம் இருந்துச்சு. வித்துட்டோம். அடுத்த மாசம் புதுசா வாங்குவோம்" என்கின்றனர், இந்தப் பெண் `விவசாயிகள்.'

``இங்கே இருக்கிற ஒவ்வொரு செடியும், நாங்க விதை போட்டு வளர்த்ததுதான். இதுகளுக்கு எங்க வயசுதான்" எனச் சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார், சாந்தி. நிழலாய் விரிந்திருந்த புளிய மரத்தை நிமிர்ந்து பார்த்தோம். நம் கைகளைப் பிடித்துக்கொண்டு, ``இந்தா பார்க்கிறீகளே இந்த மரத்துக்கு வெத நான் போட்டது" என்று தள்ளாத மொழியில் துள்ளிச் சிரித்தார், காமாட்சி பாட்டி.

`ஆமாம்', எனக் காற்றில் தலையாட்டியபடியே பதில் சொன்னது, புளியமரம்!

அடுத்த கட்டுரைக்கு