Published:Updated:

20 அறுவைசிகிச்சைகள்... `பிரஸ்ஸல்ஸ்' தாக்குதலில் சிக்கிய நிதி இப்போது எப்படி இருக்கிறார்?!

பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்பில் சிக்கிய நிதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மீண்டும் நடக்க மாட்டார் என்றார்கள் அவரோ மீண்டும் பறக்க தயாராகி வருகிறார்.

20 அறுவைசிகிச்சைகள்... `பிரஸ்ஸல்ஸ்' தாக்குதலில் சிக்கிய நிதி இப்போது எப்படி இருக்கிறார்?!
20 அறுவைசிகிச்சைகள்... `பிரஸ்ஸல்ஸ்' தாக்குதலில் சிக்கிய நிதி இப்போது எப்படி இருக்கிறார்?!

டந்த 2016-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி. அமைதியான பிரஸ்ஸல்ஸ் நகரமே அலறியது. அங்குள்ள, சவென்டெம் விமான நிலையத்தை வெடிகுண்டுகள் உருக்குலைத்துப் போட்டன. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு. பெல்ஜியம் மட்டுமல்லாமல் ஐரோப்பாவே மிரண்டு போனது.  தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்துக்குப் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50- க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஐரோப்பிய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய வெடிகுண்டு சம்பவம் இது. சவென்டம் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பதற்குச் சற்று முன்தான் மும்பையில் இருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் லேண்ட் ஆகியிருந்தது. ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப் பெண் நிதி சாப்பேகரும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். நிதியின் புகைப்படம் அப்போது இணையத்தில் வைரலாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பிரஸ்ஸல்ஸ் சம்பவத்துக்கு பிறகு நிதியின் வாழ்க்கை மாறியது. இதன் பாதிப்பில் இருந்து மீளவே பல நாள்கள் பிடித்தன. வெடிகுண்டுகளில் இருந்து பாய்ந்த சிறிய உலோகங்கள் அவரின் உடல் உள்ளுறுப்புகளில் பாய்ந்திருந்தன. அவற்றைக் கண்டுபிடித்து அகற்ற வேண்டியது அவசியமானது. அதனால், தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். ஒருவரின் உடல் எத்தனை அறுவை சிகிச்சைகளைத்தான் தாங்கும். கடந்த இரண்டு வருடத்தில் தொடர்ச்சியாக 20 அறுவை சிகிச்சைகள். இன்னொரு அறுவை சிகிச்சையும் காத்திருக்கிறது. மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சை சமீபத்தில் நடைபெற்றது. நிதி உடலில் செய்யப்படும் 21-வது அறுவை சிகிச்சை இது. தன் உடலில் செய்யப்படும் கடைசி அறுவை சிகிச்சையாக இது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார் நிதி. 

அமிர்தசரஸ் அருகேயுள்ள சாதாரண கிராமத்தில் பிறந்து ஏர் ஹோஸ்டஸ் ஆன நிதிக்கு மீண்டும் விமானத்தில் பறக்க வேண்டுமென்பதே கனவு. ஆனால், தொடர்ச்சியாக அறுவை சிகிச்சைகள் செய்தது அவரை முடக்கிப் போட்டுவிட்டது. மும்பையில் உள்ள INSTITUTE OF AEROSPACE MEDICINE நிறுவனத்தில்தான் விமான கேப்டன்கள், பைலட்டுகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். நிதியின் உடலில் பல அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதால், இங்கேதான் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், பித்தப்பையில் சிறிய உலோகம் பாய்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மீண்டும் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடலளவில் பறக்க தகுதி ஆகி விடுவேன் எனத் திடமாக நம்புகிறார் நிதி. 

தற்போது 43 வயதான நிதி, `பிரஸ்ஸல்ஸ் சம்பவம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு’ என்கிறார். ''பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பில் என் கால் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீண்டும் என்னால் நடக்க முடியாது என்றே சொன்னார்கள். அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு நடந்து காட்டினேன். எல்லா நாள்களும் நமக்கு நல்ல நாள்களாக இருக்காது. கடந்த 2 வருடங்களில் நான் சந்தித்த வலிகள் அதிகம். சம்பளத்துக்காக மீண்டும் நான் வேலைக்குப் போக துடிக்கவில்லை. என்னைப் போன்றவர்கள் சோர்ந்து விடக் கூடாது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் துடிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். நம் மீது நாம் வைக்கும் தன்னம்பிக்கைதான் எரிபொருள். சரியாகச் சிந்தித்து இயங்கினால் வாழ்க்கையில் எத்தகைய இன்னல்களையும் தகர்த்து விடலாம்'' என்கிறார் நிதி. 

நடக்கவே முடியாது என்றவர்கள் முன்  நடந்து காட்டிய நிதி, பறந்தும் காட்டுவார் என்று நம்புவோம்!