Published:Updated:

`வேர்ல்டு கப் வின்னர்...ஒலிம்பிக் மெடலும் இருக்கு.. என்ன புண்ணியம்?!’ -அன்சங் ஹீரோ பிலிப்ஸ்

`வேர்ல்டு கப் வின்னர்...ஒலிம்பிக் மெடலும் இருக்கு.. என்ன புண்ணியம்?!’ -அன்சங் ஹீரோ பிலிப்ஸ்
`வேர்ல்டு கப் வின்னர்...ஒலிம்பிக் மெடலும் இருக்கு.. என்ன புண்ணியம்?!’ -அன்சங் ஹீரோ பிலிப்ஸ்

சமீபத்தில் தமிழக அரசின் சார்பில், ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலைவாய்ப்பை இரண்டிலிருந்து மூன்று சதவிகிதமாக உயர்த்துவது தொடர்பான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஒலிம்பிக், உலகக் கோப்பை, வேர்ல்டு சாம்பியன்ஷிப், காமன்வெல்த் கேம்ஸ், ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் வென்றவர்களுக்குக் கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த விவரம் வாசிக்கப்பட்டது. இதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், கேரம் போர்டில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மரிய இருதயத்திடம் சொன்னார்... `இவங்க சொல்ற எல்லா பதக்கமும் எங்க வீட்டுல இருக்கு. ஆனா, எனக்குத்தான் ஒண்ணும் கிடைக்கலை!’

``பணம், காசை விடுங்க. வேர்ல்டு கப் மெடல் வின்னர் நான். ஒலிம்பிக் மெடலும் இருக்கு. ஆனா, பாருங்க இங்க யாருக்குமே என்னைத் தெரியலை. ஒரு ஃபங்ஷன்ல `ஐயா, என்னை யார்னு தெரியுதா?’ன்னு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர்ட்டயே கேட்டுட்டேன். அவருக்கு என்னைத் தெரியலை. நீங்ககூட யாரோ சொல்லிதானே என்னைப் பார்க்க வந்திருக்கிங்க’ எனப் படாரெனக் கேட்டுவிட்டார். `இல்லை சார், ஏற்கெனவே தெரியும்’ என்று நாம் சமாளித்தாலும், அவர் சொன்னதுதான் உண்மை.

ஒரு பேட்டியின்போது மரிய இருதயம்தான் அந்தத் தகவலையும் சொன்னார். `பாம்பேல அந்தப் பையனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதாம். ஆனா, அவர் விளையாடுற எல்லா மேட்ச்சையும் விடாமப் பார்த்துடுவானாம். பந்து போர்டுல படுற சவுண்டை வச்சே கேப்பானாம்... `கோல் அடிச்சது பிலிப்ஸா..?’ - மரிய இருதயம் சிலாகித்தது வியப்பாக இருந்தது. `ஷாட் அவ்ளோ வெயிட்டா இருக்குமாம்’ – புருவத்தை உயர்த்தியபடியே சொன்னார் மரிய இருதயம். அப்போதே அவரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது. இன்று, சர்வதேச அரங்கில் ஓய்வுபெறும் யார் யாருக்கோ, ஜாம்பவான் பட்டம் கொடுத்து விடுகிறோம். தாராளமாகச் சொல்லலாம் வி.ஜே.பிலிப்ஸ் தமிழகத்தின் Unsung Hero.

``நிச்சயமா.., ஹாக்கியில பிலிப்ஸ் ஒரு பெரிய ஆளு. ஒருவாட்டி அவரைப் பத்தி எழுதின ஸ்டோரியைப் படிச்சுட்டு ஒருத்தர் போன் பண்ணார். `நான் மலேசியாவுல இருக்கேன். இப்போ சென்னை வந்திருக்கேன். 1975 வேர்ல்டு கப்ல நான் வாலன்டியரா இருந்தேன். பிலிப்ஸ் ஆட்டத்தை நேர்ல பார்த்திருக்கேன். அவர் நம்பர் கிடைக்குமா? மீட் பண்ணணும்’னு சொன்னார். நம்மதான் அவரைக் கொண்டாடுறதில்லை.

இந்தியா ஒரே டைம்தான் வேர்ல்டு கப் வின் பண்ணியிருக்கு. அதுவும், மத்த டீம்ஸ்லாம் நல்லா ஹாக்கி விளையாட ஆரம்பிச்ச பிறகு, ஜெயிச்ச கப் அது. என்னைக் கேட்டா, அந்த வேர்ல்டு கப் வின் பண்ணதுதான் இந்தியன் ஹாக்கி டீம் இதுவரைக்கும் பண்ணதுல பெரிய சாதனை. அந்த டீம்ல பிலிப்ஸ் இருந்தார்ன்றது மட்டுமல்ல, ஐகானிக் பிளேயர், நல்ல கோல் ஸ்கோரர்னு சொல்வாங்க’’ என்றார் ஒரு சீனியர் நிருபர். ஆர்வம் மேலோங்க. அவரிடம் நம்பர் வாங்கி, ஒரு ஞாயிறு மதியம் பிலிப்ஸைச் சந்தித்தோம்.

சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட்தான் பிலிப்ஸ் பிறந்து வளர்ந்த இடம். ஒரு காலத்தில் ஹாக்கி கோலோச்சிய இடம். கதிரேசன், முத்துக்கிருஷ்ணன், கோல் கீப்பர் ஃபிரான்சிஸ் என இந்தியாவுக்கு பல வீரர்களை உருவாக்கித் தந்த இடம். ஒவ்வொருவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் இருந்தவர்கள். அங்கிருந்து புறப்பட்ட கணேசன், ஸ்டேட் பாங்க் சார்பிலும், கோல் கீப்பர் நவீன் வருமான வரித்துறை அணியிலும் கோலோச்சியவர்கள். பிலிப்ஸும் இங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவர் ஹாக்கி விளையாடாமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம். ஏனெனில்...

பிலிப்ஸ் குடும்பமே ஸ்போர்ட்ஸ் குடும்பம். அவரது அண்ணன் வி.ஜே. பீட்டர் மூன்றுமுறை ஒலிம்பிக் (1960, 1964, 1968) போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர். பிலிப்ஸ் இரண்டு ஒலிம்பிக் (1972, 1976), மூன்று உலகக் கோப்பையில் (1973,1975,1978) விளையாடியவர். அவர் தம்பி வி.ஜே.தாமஸும் இந்திய அணிக்காக விளையாடியவர். பிலிப்ஸின் இன்னொரு தம்பி வி.ஜே.வின்சென்ட், முதன்முறையாக தமிழ்நாடு சந்தோஷ் டிராபி கால்பந்து ஃபைனலுக்கு முன்னேறியபோது, அணியின் கேப்டனாக இருந்தவர். 

``கூடப் பிறந்தது மொத்தம் ஏழு அண்ணன் தம்பிங்க. அதுல நாங்க மூணு பேர் ஒரு மேட்ச்ல ஆடியிருக்கோம். அண்ணன் கோச். நாங்க பிளேயர்ஸ். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூணு பேர் ஒரு இன்டர்நேஷனல் மேட்ச்ல இது வரைக்கும் ஆடினதில்லை. அண்ணன், தம்பி ரெண்டு பேர் இருப்பாங்க. மூணு பேர்லாம் இருந்ததா கேள்விப்பட்டதே இல்லை. எங்க அப்பா சொல்லிச் சொல்லியே வளர்த்தார். அண்ணன் மூணு ஒலிம்பிக் போயிட்டான். நீ என்னடா பண்ணப் போறேன்னு.. `நானும் ஒலிம்பிக் ஆடுவேன்பா’னு சொன்னேன்.

கிறிஸ்டியன் காலேஜ்ல படிக்கும்போதே தமிழ்நாடு டீம்ல வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் ரயில்வே டீம். அங்க இருக்கும்போது இந்தியன் டீம்ல இடம் கிடைச்சது. 1970-ல இருந்து 1981 வரை இந்தியன் டீம்ல இருந்திருக்கேன். `எங்க வீட்டுல ஒலிம்பிக் தங்கம், வெள்ளி, வெண்கலம். உலகக் கோப்பை தங்கம், வெள்ளி, ஏசியன் கேம்ஸ் வெள்ளினு எல்லாப் பதக்கமும் இருக்கு. எட்டு முறை போடியம் ஏறியிருக்கிறேன். ஆனா, பாருங்க இப்படியொரு குடும்பம் இருக்கிறதே தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியலை’ என ஆதங்கப்பட்டவரை 1975 உலகக் கோப்பை பக்கம் மடை திருப்பினோம்.

``சண்டிகர்ல நடந்த கேம்ப்ல 16 பேரை செலக்ட் பண்ணாங்க. முதல்ல டீம் போறதாவே இல்லை. கடைசி நேரத்தில்தான் மலேசியா அனுப்பி வச்சாங்க. இங்கிலாந்துக்கு எதிரா ஃபர்ஸ்ட் மேட்ச். நான்தான் இரண்டு கோல் அடிச்சேன். 2-0-னு ஜெயிச்சோம். அடுத்த மேட்ச் தமிழ்க்காரங்க ரொம்ப இருக்கிற சரம்பா ஏரியாவுல நடந்துச்சு. நாங்க வர்றதைப் பார்த்து தடபுடலா வரவேற்பு இருந்துச்சு. ஆப்பனன்ட் அர்ஜென்டினா டீம். அன்னிக்கி அந்த டீம் அந்தளவு ஸ்ட்ராங் இல்லை. ஆனா, நாங்க ஒரு கோல்ல தோத்துட்டோம். தோத்ததும் ரசிகர்கள் மனநிலை அப்படியே நேரெதிரா மாறிடுச்சு. 

`எங்க மானத்தை வாங்க வந்துட்டிங்களே. ஃபுட்பால் டீம் வந்தாலும் இப்பிடிதான் பண்றாங்க. நீங்களும் இப்பிடிதான் பண்றீங்க. இப்டியே தோத்துட்டே இருந்தா, எங்களுக்குத்தான் இங்க மானம் போகுது’னு கண்ணீர் விடாத குறையாச் சொல்றாங்க. அன்னிக்கி நைட் மீட்டிங் நடக்குது. கேப்டன் அஜித் பால் சிங், `நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. வேர்ல்டு கப் கண்டிப்பா கிடைக்கும்’னு கோச்சுகிட்ட பிராமிஸ் பண்ணார். 

சொன்னது போலவே அடுத்த  போட்டியில் ஜெர்மனியை 4-0 என வீழ்த்திய இந்தியா, அதற்கு அடுத்த போட்டியில் சொந்த மண்ணில் மலேசியாவை எதிர்கொண்டது. களமிறங்கும்போது இந்திய அணியைப் பார்த்து ஊளையிடுகின்றனர் மலேசிய ரசிகர்கள். அதற்கேற்ப, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மலேசியா முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் அஸ்லா் ஷெர் கான், சிவ்ராஜ் பவான், ஹரிசரண் கோல் அடிக்க, 3-2 என முன்னிலை பெற்றது. 

``கடைசி மூணு நிமிஷம். எங்களுக்கு பெனால்டி கார்னர் கிடைச்சது. இன்னொரு தமிழ்நாடு பிளேயர் கோவிந்தாவும், நானும்தான் பெனால்டி கார்னர் சார்ஜர்ஸ். சார்ஜ் பண்ணும்போது பந்து என் ஸ்டிக்ல பட்டு சைட் லைன் போயிடுச்சு. 30 செகண்ட்தான் இருக்கு. கார்னர்ல எடுத்துட்டுப் போயி வச்சிருக்கிறேன். அதுக்குள்ள ரசிகர்கள் ஒன், டு, த்ரினு கவுன்டவுண் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. லாஸ்ட் விசில் அடிச்சதும் பந்தைக் கையில் எடுத்துட்டேன். மழை அடிச்சது பாருங்க... அப்படியொரு மழை. ஒரு ரசிகர் கூட எந்திருச்சுப் போகலை. மேட்ச் முடிஞ்சு எங்களை மலேசியன் போலீஸ் வேன்ல கூட்டிட்டு போனாங்க. மறுநாள் பாகிஸ்தான் கூட ஃபைனல்’’ என நினைவில் மூழ்கினார் பிலிப்ஸ்.  

இந்தியா – பாகிஸ்தான் மோதிய அந்த ஃபைனலில், இந்தியாவுக்குச் சாதகமாக ஒரு கோல் தரப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த சர்ச்சைக்குரிய கோல் பற்றி கேட்டதும், `கான்ட்ராவெர்சியே கிடையாது. கிளீன் கோல் அது. விஜயநாதன் ரெஃப்ரி. அவர் ஒன் ஆஃப் தி பெஸ்ட் அம்பயர். அவர்தான் ஃபைனல் நடத்துனார். பொதுவா, கோல் கம்பத்துல 7 இன்ச் போர்டு வைப்பாங்க’ எனச் சொல்லிவிட்டு சேரில் சாய்ந்து அமர்ந்தவர், இரு கைகளையும் பரஸ்பரம் நாற்காலியில் கை வைக்கும் இடத்தின் நுனிக்கு நகர்த்தினார்.

நாம் அவரது முகத்தைப் பார்த்தபோது, `இங்க பாருங்க’ எனச் சொல்லிவிட்டு, வலது கையை மட்டும் சேரின் நுனியிலிருந்து சில இன்ச்கள் முன்னால் நகர்த்தினார். ஷாட் அடிச்சதும் இப்படித்தான் பந்து, இன்னர் எட்ஜ் போர்டுல பட்டு வெளியே வந்துருச்சு. பால் அல்ரெடி கிராஸ் தி லைன். சர்ச்சை இருந்ததால, அந்த ரெஃப்ரி உடனே போட்டோ எடுத்து, டின்னர் சாப்பிட்டுட்டு இருக்கும்போது எல்லோருக்கும் 100 copy கொடுத்தார். டிவியிலும் கோல்னு காட்டுனாங்க. அப்புறம் எல்லோரும் ஒத்துக்கிட்டாங்க’’ என, உலக சாம்பியனான தருணத்தைச் சொல்லும்போது அவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு. 

ஒடிஸாவில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும், இந்தியா காலிறுதியில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் உலக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு நழுவியது. `இந்தியா வேர்ல்டு கப் ஜெயிச்சு 43 வருஷம் ஆச்சு. 43 வருஷம்...’ - அழுத்திச் சொல்கிறார் பிலிப்ஸ். 

``நாங்க ஜெயிச்சோம்னா சும்மாவா... அந்தளவு அர்ப்பணிப்போட விளையாடுனோம். பணத்தைப் பத்தி எதுவும் தெரியாது. கோல்டு மெடல் வாங்குறது மட்டும்தான் எங்க நோக்கம். கோலாலம்பூர் போறதுக்கு முன்னாடி எங்க மேனேஜர் வந்து, ஒரு நாளைக்கு ஐந்து அமெரிக்க டாலர்னு, 16 நாளைக்கு 80 டாலர் கொடுத்தார். அன்னிக்கு ஒரு டாலர் விலை 37 ரூபாய். இருந்த பணத்தை எல்லாம், பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு துணி வாங்கிறதுலயே செலவழிச்சிட்டோம். சிங்கப்பூர்லயே மொத்தப் பணமும் காலி. கோலாலம்பூர் வரும்போது பைசா இல்லாமதான் வந்து இறங்குனோம். அப்போதைய இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.எம்.ராமசாமி டோர்னமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி எங்ககிட்டவந்து,  `ஒவ்வொரு கோலுக்கும் 100 டாலர், நல்ல பாஸ் கொடுத்தா அதுக்கு 100 டாலர்’னு சொல்லிட்டார். பசங்க சிட்டா பறக்க ஆரம்பிச்சிட்டாங்க. கோலாலம்பூர் வந்ததும் எல்லா பிளேயர்ஸ் கையிலயும் ஆயிரம் டாலர் இருக்கு’’ என்றார் பிலிப்ஸ். 

இந்தியா 1975-ல் உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணம் அணியின் ஒருங்கிணைப்பு. அஜித்பால் சிங், அசோக் குமார், வரிந்தர் சிங், கோவிந்தா, அஸ்லாம் ஷெர் கான், ஹர்சரண் சிங், ஓம்கார் சிங், சுர்ஜித் சிங், மைக்கேல் ஹிண்டோ, கோல் கீப்பர் அசோக் திவான், லெஸ்லே ஃபெர்னாண்டஸ் என ஒன்பது வீரர்கள் 1972-ல் இருந்து 1980 வரை ஒன்றாக விளையாடியவர்கள். மலேசியாவில் நடந்த உலகக் கோப்பையில் எப்படியும் சாம்பியன் பட்டம் வென்றே தீர வேண்டும் என்பதில் முழு முனைப்பாக இருந்துள்ளார் கேப்டன் அஜித்பால் சிங்.

``ஈவு இரக்கமே பார்க்க மாட்டார். பச்சையா சொன்னா, `அம்மாட்ட குடிச்ச பாலை இங்க கக்கு’ எனச் சொல்வார். `வின் பண்ணலைனா, செத்துப் போயிரு’னு திட்டுவார். அவர் திரும்பிப் பார்க்கும் போது யாரும் சும்மா நின்னுட்டு இருக்கக் கூடாது. இந்தில சொல்வாங்க... `இஸ்னே மாக்கா தூத்பியா, ஓ நிக்கால்னே கிரவுண்ட்கா’னு… அதவாது செத்தாலும் கிரவுண்ட்ல சாவுன்னு அர்த்தம். அப்படி ஆடினோம். `கப் வேணும்னு கேட்டல...  இந்தா பிடிச்சிக்கோ’னு கோப்பையைக் கோச்சுகிட்ட கொடுத்தோம்’’ என கெத்தாக முடித்தவர், அடுத்து அரசை ஒரு பிடிபிடித்தார். 

அவரது கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது. 1975-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தவருக்கு, 24 ஆண்டுகள் கழித்துத்தான் அர்ஜுனா விருது கிடைத்தது. `அண்ணா கோப்பை டோர்னமென்ட்ல சதர்ன் ரயில்வே வின் பண்ணதும், கலைஞர் என் காதைப் பிடிச்சிட்டே, `இங்க அடிச்சது பெருசது இல்லை. ஒலிம்பிக்ஸ்ல வின் பண்ணணூம்’னு சொன்னார். அவர் சொன்னதுபோலவே, 1972-ல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் பிலிப்ஸ் இருந்தார். ஆனால், சென்னை திரும்பியபோது, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் அவரை வரவேற்க ஆளே இல்லை. அதேநேரம், 1975 உலகக் கோப்பை முடிந்துவந்தபோது, லாரியில் ஊர்வலமாக அழைத்து வந்தார்களாம். 

``கோல்டு மெடல் எடுத்துட்டு கலைஞரைப் பார்த்தேன். ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்தார். அப்போ அது பெருசு. அவர்ட்ட வீடு கேட்டேன்,  `தம்பி நீ என் வீட்டுப் பிள்ளை. எப்ப இருந்தாலும் உனக்குச் செய்வேன்’னு சொன்னார். அதுக்கப்புறம் ஆட்சி மாறிடுச்சு. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ல ஜெயிச்சவங்களுக்கு அந்த கவர்ன்மென்ட் (அதிமுக) சார்பா வீடு கொடுத்தாங்க. `நானும் வேர்ல்டு கப்ல கோல்டு வாங்கியிருக்கிறேன். ஒலிம்பிக்லயும் மெடல் வாங்கியிருக்கேன்’னு சொன்னேன். மினிஸ்டர் அந்த மெடலை வாங்கிப் பார்த்துட்டு, `அவங்க ஆட்சியில வாங்கியிருக்கிங்க. எங்க ஆட்சியில வாங்கியிருந்தா பண்ணிருப்போம்’னு சொன்னார். `எந்த ஆட்சினா என்னங்க, நானும் மெடல்தானே வாங்கியிருக்கேன். இது மெடல்தானே தகரமானு கேட்டேன்?’ பதில் வரலை’’ என்றார் உக்கிரமாக.

``எனக்கு 1975-லயே அர்ஜுனா அவார்டு கொடுத்திருக்கணும். 24 வருஷம் கழிச்சுதான் அர்ஜுனா அவார்டு வந்துச்சு. 24 வருஷம் கழிச்சுதான் கலைஞரை திருப்பிப் பார்த்தேன். அவர் ஒரு வீடு கொடுத்தார். இப்பலாம், ஒலிம்பிக் மெடல் ஜெயிச்சா இவ்ளோ கோடி, வேர்ல்டு கப் ஜெயிச்சா இவ்ளோ லட்சம்னு கவர்ன்மெட் சொல்லுது. எங்கிட்ட  2 தங்கம், மூனு வெள்ளி, ஒரு வெண்கலம் இருக்கு. இதுக்கெல்லாம் பணம் வந்திருந்தா, ஸ்போர்ட்ஸ்ல நான்தான் இன்னிக்கி கோடீஸ்வரன் ஆனா, பாருங்க ஜெயலலிதாகிட்ட என்னை நெருங்கவே விடலை.

`ஹாக்கிதான் உங்க முதல் பொண்டாட்டி. நான் ரெண்டாவது பொண்டாட்டி’னு மனைவி சொல்வாங்க. ரயில்வேயில இருந்தப்போ வருஷத்துல 363 நாள் ஸ்பெஷல் கேஸ்வல் லீவ் எடுத்த ஒரே ஆள் நானாதான் இருப்பேன். அப்படி விளையாடி ஜெயிச்சோம் தம்பி. இப்ப ஒரு ஸ்போர்ட்ஸ் ஈவன்ட்டுக்கு கூட என்னைக் கூப்பிடுறதில்லை. அங்கீகாரமே கிடைக்கலை’’ என அவர் முடிக்கும்போது உருக்கமாக இருந்தது. 

பேட்டி முடிந்ததும், கைகுலுக்கி விடை கொடுத்தார். காப்பு காய்த்திருந்த அந்தக் கைகள், என் கரங்களை இறுகப் பற்றிய அந்த அழுத்தத்தில், `பிலிப்ஸ் எப்படி கோல் அடித்திருப்பார்’ என்பதை உணர்ந்து கொண்டேன், அந்தப் பார்வையில்லாதவரைப் போல!