Published:Updated:

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!
பிரீமியம் ஸ்டோரி
சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

Published:Updated:
சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!
பிரீமியம் ஸ்டோரி
சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

னைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கேரளாவின் பல பகுதிகளில் நடைபெற்றுவந்த சரண கோஷப் போராட்டம், சபரிமலையில் மையம்கொண்டிருக்கிறது. சபரிமலைக்கு வழிபடச் சென்ற பெண் பக்தர்கள்மீது தாக்குதல், பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் என எரிமலையாகத் தகிக்கிறது சபரிமலை.

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அக்டோபர் 17-ம் தேதி ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. ‘சபரிமலைக்கு வழிபடச் செல்வோம்’ என்று பெண்கள் அமைப்பினர் சிலர் அறிவித்திருந்த நிலையில், பெண் பக்தர்கள் சிலர் மாலையணிந்து வழிபாட்டுக்குத் தயாரான சூழலில், இவர்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தன. சபரிமலைக்குப் பெண்கள் செல்வதை எதிர்ப்பவர்களால் நிலக்கல் என்ற இடத்தில் ‘சரண கோஷம் செக்போஸ்ட்’ 16-ம் தேதியே ஏற்படுத்தப்பட்டது. சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியும், பெண் செய்தியாளர்களும் நிலக்கல்லில் தாக்கப்பட்டனர். இதைக் காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்ததால், சிறிய அளவில் தடியடி நடத்தியும், போராட்டக்காரர்களின் பந்தலை அகற்றியும், கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தது போலீஸ். 17-ம் தேதி, நிலக்கல்லில் பெரும் போலீஸ் படை குவிந்திருந்ததால், அதற்கு முன்பாக இருக்கும் இலவக்கல் சந்திப்பிலேயே பெண்கள் கூடிநின்று வாகனங்களை மறிக்கத்தொடங்கினர். அங்கிருந்த ‘ராஷ்டிரிய சேவிகா சமிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஸ்மிதா, ‘‘நான் மூன்று வயது முதல் பத்து வயது வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சபரிமலை சன்னிதானம் சென்றுவந்துள்ளேன். சபரிமலையின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, இங்கு போராட்டம் நடத்த வந்துள்ளேன். சபரிமலையின் புனிதத்தைச் சீர்குலைக்க பினராயி விஜயன் அரசு முயற்சி செய்கிறது’’ என்றார்.

தடியடி நடந்த நிலக்கல் பகுதிக்கு வந்திருந்த  பி.ஜே.பி நிர்வாகியான ஷோபா சுரேந்திரன், ‘‘முதல்வர் பினராயி விஜயன், ‘சபரிமலைக்குப் பெண்களை அனுப்ப மாட்டோம். ஆனால், வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்போம்’ என்று கூறியிருந்தார். ஆனால், அவர் பெண்களை மறைமுகமாகச் சன்னிதானத்தில் நுழைய வைக்க முயற்சி செய்கிறார். பக்தர்களுக்குப் போராட முழு உரிமை உண்டு. போராடும் பக்தர்கள்மீது காவல்துறையின் லத்திமுனை பட்டாலும், கேரள மாநிலம் சும்மா இருக்காது’’ என்று எச்சரித்துக் காவல்துறையினரிடம் ஆவேசம் காட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

அதே நிலக்கல்லில், சபரிமலை பாரம்பர்யம் காக்க வேண்டும் என்று பிரார்த்தனை நடத்திக்கொண்டிருந்தார்கள் காங்கிரஸ் கட்சியினர். ‘‘சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, நான் தண்ணீரே கொண்டுவரவில்லை. ஐயப்பன் அருளால் வழியில் தண்ணீர் கிடைத்தால் தாகம் தணிப்பேன். ‘பம்பை நதியில் ஆடைகளைப்போட்டு அசுத்தம் செய்யாதீர்கள்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பாரம்பர்யத்தைச் சிதைக்கும் வகையில், அனைத்து வயது பெண்களையும் சன்னிதானத்தில் அனுமதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கர்நாடகாவில் அன்னப்ப சுவாமி கோயிலில் நிர்வாண நிலையில் நக்ன சன்னியாசிகள் இருப்பதால், பெண்கள் அந்தக் கோயிலுக்குச் செல்வதில்லை. அதுபோன்றுதான், நைஸ்டிக பிரம்மசாரியான ஐயப்பன் கோயிலுக்கும் பெண்கள் வரக்கூடாது’’ என்றார் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த குருசுவாமி வெங்கடேஷ்.

சபரிமலை சன்னிதானத்தில் இளம்பெண்கள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, பம்பா கணபதி சன்னதியிலிருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் போராட்டம் நடத்திய தந்திரி குடும்பத்தினரைக் காவல்துறை கைது செய்ததால் ஆவேசமான பி.ஜே.பி-யினர், அதே இடத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கு தனியாக வந்திருந்த பூஞாறு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வான பி.சி.ஜார்ஜ், ‘‘மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்களை அடித்து விரட்டிவிட்டு ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனத்துக்குக் கொடுத்த கம்யூனிஸ்ட் அரசை மக்கள் புறக்கணித்தனர். சபரிமலை விவகாரத்தால் இங்கு சி.பி.எம் கட்சிக்கு அதே நிலை ஏற்படும். பெண்களைச் சன்னிதானத்தில் அனுமதித்தால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பிரச்னைகள் ஏற்படும்’’ என்றார்.

‘சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் விஷயத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை உறுதியாகச் செயல்படுத்துவோம்’ என்று கேரளத்தை ஆளும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. சபரிமலையில் நடை திறக்கப்படுவதற்கு முதல் நாள், ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். “அனைத்து வயதுப் பெண்களுக்கும் சபரிமலையில் வழிபட உரிமை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த அரசு செயல்படுத்தும். அரசியலமைப்புச் சட்டப்படித்தான் இந்த அரசு செயல்படும். கேரள மாநிலத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டைச் சிதைப்பதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தை சிலர் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். இதற்கு எதிராக, அனைத்து மதத்தினரும் இணைந்து போராட வேண்டும்” என்றார் அவர். முதல்வர் இவ்வாறு சொன்னாலும், ‘சபரிமலைக்குச் செல்வதற்காக வந்த பெண்களை நிலக்கல் பகுதியில் துரத்தியடித்த பி.ஜே.பி உள்ளிட்ட போராட்டக்காரர்களை கேரள போலீஸ் கண்டுகொள்ளவில்லை’ என்று விமர்சனம் எழுந்தது. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வியை இது எழுப்புகிறது.

‘‘பெண் பக்தர்கள் வந்தால், அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுப்போம் என்றார் முதல்வர் பினராயி விஜயன். ஆனால், பம்பையில் ஆண்கள் குளிப்பதற்கே சரியான ஏற்பாடுகள் இல்லை. மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட கரைகளுக்கு மாற்றாக மணல் மூட்டைகளை அடுக்கும் பணி இப்போதுதான் நடந்துகொண்டிருக்கிறது. கழிவறைகள் சரிந்துவிழுந்து துர்நாற்றம் வருகிறது. பெண்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியிருப்பதால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கால அவகாசம் வேண்டும் என அரசு கேட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், போராட்டத்தின் வேகம் சற்றுத் தணிந்திருக்கும். நடை திறப்பதற்கு முதல் நாள் தேவசம் போர்டு கூட்டம் நடந்தது. அதில், பம்பையைச் சரிசெய்வது குறித்தே ஆலோசித்துள்ளனர்’’ என்றனர் நம்மிடம் பேசிய தேவசம் போர்டு உறுப்பினர்கள்.

‘சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அதை வரவேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினரோ, ‘சபரிமலைக்குப் பெண்கள் செல்லக் கூடாது’ என்றார்கள். கோயில் பிரச்னைக்காகத் தனித்துப் போராடினால் இந்துத்வா சாயம் பூசிவிடுவார்கள் என்ற அச்சத்தில், ‘அனைத்துச் சமயப் பிரார்த்தனை’ என்று புது ரூட்டைக் கையிலெடுத்து, நிலக்கல்லில் பஜனை பாடி போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சி. இப்படி, நாடாளுமன்றத் தேர்தலை மனத்தில் வைத்து இரட்டைக் குதிரையில் அரசியல் கட்சிகள் சவாரி செய்கின்றன.

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

‘‘சபரிமலைக்குச் செல்லப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் உங்கள் கட்சியின் நிலைப்பாடா?’’ என்று கேரள பி.ஜே.பி-யினரிடம் கேட்டால், ‘‘சபரிமலை சன்னிதானத்தின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்’’ என்று மற்றொரு பதிலைச் சொல்லிக் குழப்புகிறார்கள். அதாவது பரவாயில்லை. சபரிமலையில் நடை திறக்கும் நாளன்று வந்த பெண் பக்தர்களுக்கு எதிராக நிலக்கல்லில் பி.ஜே.பி மற்றும் இந்துத்வா அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அதில் பங்கேற்ற பி.ஜே.பி மாநிலப் பொதுச் செயலாளர் சுரேந்திரன், கோயில் நடை திறப்பு நிகழ்ச்சியில் தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுடன் சேர்ந்து கலந்துகொண்டார். நடை திறந்த பிறகு வெளியே வந்த அமைச்சர், “நடை திறப்பு நிகழ்ச்சியின்போது பி.ஜே.பி-யின் மாநிலப் பொதுச்செயலாளர் சுரேந்திரனிடம் பேசினேன். ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பி.ஜே.பி-யினர் ஆரம்பத்தில் வரவேற்றீர்கள். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. இப்போது, அரசியலுக்காகப் போராட்டம் நடத்தாதீர்கள்’ என்று அவரிடம் கூறினேன். அவர் எதையும் மறுக்கவில்லை” என்று அதிர்ச்சியூட்டினார்.

பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார். அதனால் அவர்களில் பலரும் காட்டுப் பகுதிக்குள் பதுங்கினர். அங்கிருந்தபடியே, சபரிமலைக்கு வரும் வாகனங்கள் மற்றும் பெண்கள்மீது கற்களை வீசினர். இதனால் பம்பை, பந்தளம், சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட சபரிமலைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது அடைப்புக்கும் பி.ஜே.பி அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வளவு நெருக்கடியிலும் பெண்கள் சிலர் கோயிலுக்குச் செல்வதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த மாதவி என்பவர் சன்னிதானம் செல்வதற்கு வந்தார். நிலக்கல்லில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து மாதவி திரும்பிச் சென்றுவிட்டார். ஆனாலும், அவர் சபரிமலை செல்ல விரும்பினால், பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரளாவின் டி.ஜி.பி அறிவித்தார். கேரளாவின் சேர்த்தலாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் லிபி என்பவர் சபரிமலைக்குச் செல்வதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், ‘‘அனைத்து தெருக்களிலும் அனைத்து சாதியினரும் நடந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்ட காலத்தில், அதுவரை அந்த உரிமை மறுக்கப்பட்ட மக்கள், தெருக்களுக்கு வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதிக்கச் சாதியினர், சாலையில் இறங்கி அந்த மக்களைத் தடுத்து நிறுத்திப் போராட்டம் நடத்தினார்கள். அனைத்து சாதியினரும் கோயிலுக்குச் செல்லலாம் என்று மன்னர் அறிவித்தபோது, அதற்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். தோள்சீலை அணிந்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்குப் பெண்கள் செல்லலாம் என்று மன்னர் அறிவித்தபோதும், அதற்கு எதிராகவும் போராட்டம் நடந்தது. ஆண்டுகள் உருண்டோடிய பிறகு, இந்த எதிர்ப்புகள் காணாமல் போய்விட்டன. அதேபோல, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைச் சிலர் இப்போது எதிர்க்கிறார்கள். இந்த விவகாரத்திலும் உரிய பதிலைக் காலம் சொல்லும்’’ என்றனர்.

- ஆர்.சிந்து
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

சபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்!

ஏன் போர்க்களமானது?

ச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு துலா மாத பூஜைக்காக அக்டோபர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்துள்ளன. ஆனால், நீதிமன்றம் தசரா விடுமுறையில் உள்ளது. 22-ம் தேதிதான் மீண்டும் திறக்கப்படும்.

எனவே, அக்டோபர் 16-ம் தேதி திருவாங்கூர் தேவசம் போர்டு நடத்திய கூட்டத்தில் இரண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தினர். ‘சீராய்வு மனுக்கள்மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்வரை, இப்போது இருப்பது போலப் பெண்களுக்குத் தடை நீடிக்க வேண்டும். தேவசம் போர்டு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்பதே அவை. ஆனால், தேவசம் போர்டு உஷாராக, ‘சீராய்வு மனு தொடர்பாக 19-ம் தேதிதான் முடிவெடுப்போம்’ என அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு சமாதானக் கூட்டமும் நடத்தியது. சபரிமலைக்குப் பெண்கள் செல்வதை எதிர்க்கும் அமைப்பினரும், பந்தளம் மன்னர் குடும்பத்தினரும், சபரிமலை வழிபாட்டு உரிமை பெற்ற தந்திரி குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர். ஆனால், இந்தக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் பந்தளம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா, ‘‘சபரிமலை போர்க்களமாவதை நாங்கள் விரும்பவில்லை. அப்படி நடந்தால், அதற்கு எங்களையோ, பக்தர்களையோ குறைசொல்லக் கூடாது’’ என வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.

அவர் சொன்னது போலவே சபரிமலை போர்க்களமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism