Published:Updated:

`இந்த அதிகாரிகளுக்கு புத்தி கொடுங்க சாமி!'- குவாரிக்கு எதிராக அம்மனிடம் மனு கொடுத்த மக்கள்

`இந்த அதிகாரிகளுக்கு புத்தி கொடுங்க சாமி!'- குவாரிக்கு எதிராக அம்மனிடம் மனு கொடுத்த மக்கள்
`இந்த அதிகாரிகளுக்கு புத்தி கொடுங்க சாமி!'- குவாரிக்கு எதிராக அம்மனிடம் மனு கொடுத்த மக்கள்

``மணல் குவாரிகளால் எங்களின் குடும்பங்கள் அழிந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா. இந்த அதிகாரிகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும்" என்று மணலையும் மக்களையும் காப்பாற்றக் கோரி சாமியிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 35 கிராம மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பொதுப்பணித்துறை மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அதிகாரிகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும் என்றும் மணலையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் எனக் கோரியும் திருமானூரில் உள்ள அம்மன் கோயிலில் அம்மனிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள், அம்மனிடம் வேண்டிக்கொண்டு தங்களையும் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணலையும் காப்பாற்ற வேண்டும் என அம்மனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

போராட்டத்தில் ஈடுபட்ட ராமமூர்த்தி என்பவரிடம் பேசினோம். ``கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக அனைத்துக்கட்சியினரையும் ஒன்றிணைத்துப் போராடிவருகிறோம். இது எங்களுக்கு உண்டான பிரச்னை அல்ல. எதிர்காலச் சந்ததியினர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதியும் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். தமிழக அரசு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும். கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அத்துடன், தொடர்ந்து 20 ஆண்டுகளாக மணல் குவாரி அமைத்து அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால், போர்வெல் மூலம் நடைபெறும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கக் கூடாது. மணல் குவாரி அமைத்தால், குடிநீர் மட்டுமன்றி விவசாயமும் பாதிக்கப்படும். நாங்கள் எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அம்மனிடம் மனு கொடுக்க வந்துள்ளோம். இந்த அம்மனாவது இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்" என்று வேதனையுடன் கூறினார்.