Published:Updated:

‘நடராஜர் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!’- மகிழ்ச்சியில் பக்தர்கள்

‘நடராஜர் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!’- மகிழ்ச்சியில் பக்தர்கள்
‘நடராஜர் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!’- மகிழ்ச்சியில் பக்தர்கள்

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்தையொட்டி அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் சிவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வழிபட்டு வருகின்றனர். 

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த ஸ்ரீபுரந்தான் என்னும் சிற்றூர் உள்ளது. சோழர்காலத்தில் சதுர்வேதிமங்கலத்தில் தலைமையிடமாக திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புடைய ஸ்ரீபுரந்தான் என்னும் சிற்றூரில் முதலாம் ஆதித்த சோழன்(871-907) காலத்தில் பெரியநாயகி உடனுறை ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் ஸ்ரீபராந்தகச்சதுர்வேதிமங்கலம் என்று பராந்தக சோழரின் பெயரால் முதலில் அழைக்கப்பட்டு தற்போது ஸ்ரீபுரந்தான் என்று மருவி அழைக்கப்படுகிறது. இப்படி பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட இந்தக் கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சாமி சிலைகள் மர்ம நபர்களால் திருட்டு போனது. இதில் நடராஜர் சிலையின் மதிப்பு மட்டும் ரூ. 31 கோடியாகும். 

இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் என்பவரைத் தமிழக சிலை திருட்டு பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஆஸ்திரேலியா அருங்காட்சியத்தில் இருந்த நடராஜர் சிலையை போலீஸார் மீட்டு இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு, அதன்பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு கோயில் குடமுழுக்கு விழாவிற்குச் சிலை வரவழைக்கப்பட்டு, பின்னர் சுவாமிமலை சிலைகள் பாதுகாப்பு மையத்திற்குப் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது. 

அதன்பிறகு நடராஜர் சிலை கோயிலுக்கு வரவில்லை. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக அறநிலையத்துறை மற்றும் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று விழாவை நடத்தத் திட்டமிட்டனர். விழாவுக்காக வேண்டி சுவாமிமலை சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்த நடராஜர் சிலை  கோயிலை வந்தடைந்தது. 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை இறக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலை ஸ்ரீபுரந்தான் சிவாலயத்துக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று இரவு வேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி வீதியுலா நடைபெற இருக்கிறது. விழா முடிவடைந்ததும் இரவு நடராஜர் சிலை மீண்டும் சிலைகள் பாதுகாப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.