Published:Updated:

வடுமாறாத தனுஷ்கோடி.. சிதிலமடையும் நினைவுச் சின்னங்கள்... கண்டுகொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்?#dhanushkodi

வடுமாறாத தனுஷ்கோடி.. சிதிலமடையும் நினைவுச் சின்னங்கள்... கண்டுகொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்?#dhanushkodi
வடுமாறாத தனுஷ்கோடி.. சிதிலமடையும் நினைவுச் சின்னங்கள்... கண்டுகொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்?#dhanushkodi

54 ஆண்டுகளுக்கு முன் உருக்குலைந்து போன துறைமுக நகரமான தனுஷ்கோடியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதுடன் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை துவக்கி தீவு மக்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ஆழிப்பேரலையின் பிடியில் இருந்து தப்பியவர்களின் வாரிசுகள்.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்குச் சுதந்திரத்திற்கு பின் இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகராக விளங்கியது தனுஷ்கோடி. வெள்ளையர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பெரும் உதவியாக இருந்த துறைமுகமாகவும் விளங்கியது. விமான சேவைகள் மேம்படாத காலத்தில் பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற தொழிலாளர்களுக்கான எளிய வழியாகவும் இருந்தது தனுஷ்கோடி. இலங்கை என்ற மலைப்பகுதியைப் பொன்விளையும் பூமியாக மாற்றுவதற்காக ஆயிரமாயிரம் இந்தியர்களை அடிமைகளாக இலங்கைக்குக் கொண்டு செல்லத் துணையாக இருந்ததும் இந்த தனுஷ்கோடி துறைமுகம்தான்.

இத்தகைய பல வரலாற்று பதிவுகளுக்கு சான்றாகத் திகழ்ந்து விளங்கிய தனுஷ்கோடி துறைமுக நகரத்தை ஒரே இரவில் புரட்டி போட்டது ஆழிப்பேரலை. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களையும், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான மாணவர்களையும் ஒரு சேர கடலுக்குள் ஜல சமாதி ஆக்கியது அந்த கோர புயல்.

மனித உயிர்களை மட்டுமல்லாது கால்நடைகள், துறைமுக கட்டடங்கள், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், நிர்வாக அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் என எதனையும் விட்டு வைக்காமல் தனது கோரப் பசிக்கு ஆட்படுத்திய ஆழிப்பேரலையின் வேகத்திற்கு மிச்சமாக நின்றது சிதிலமடைந்த கட்டடங்கள் சில. ஆழிப்பேரலைக்குப் பின் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது தனுஷ்கோடி. அன்றிலிருந்து மக்கள் நடமாட்டம் இன்றி இருந்து வந்த தனுஷ்கோடி சில ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலா தளமாக மாறிப் போனது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் புயலின் எச்சமாக நின்ற கட்டட இடிபாடுகளைத் தனுஷ்கோடிக்கு சென்று பார்த்து வியந்து செல்கின்றனர்.

இந்த இடிபாடுகளில் இன்றும் எஞ்சியிருப்பது தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலக கட்டடம், ரயில் நிலைய கட்டடம் உள்ளிட்ட சில மட்டும்தான். இந்த அடையாள சின்னங்கள் வருடங்கள் செல்ல செல்ல மேலும் சிதிலமடைந்து கொண்டுள்ளன. இவை தவிர இந்த கட்டடங்களில் உள்ள கற்களை பெயர்த்து எடுத்து 'ராமர் பாலம் அமைத்த' மிதவை கற்கள் எனச் சொல்லி வியாபாரமும் நடக்கிறது. இதனால் வரும் காலங்களில் தனுஷ்கோடி என்ற துறைமுக நகரத்தின் அடையாளமாகக் கடலையும் அதைச் சார்ந்த கரையோர மணலையும் தான் காட்ட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

70 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தனுஷ்கோடிக்கு சாலை அமைத்துள்ளது மத்திய அரசு . அதே நேரத்தில் தனுஷ்கோடியில் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் புயல் அடையாள சின்னங்களை பாதுகாக்கும் பணிகளில் கவனம் செலுத்தவில்லை. குஜராத்தில் 3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்ததுடன் அதனைச் சுற்றுலா தலமாகவும் உருவாகியுள்ளது மத்திய அரசு. ஆனால் தனுஷ்கோடி கடலோர பகுதியினை சுற்றுலாத் தலமாக உருவாக்குவோம் என்ற அறிவிப்புகள்  கடந்த பல 10 ஆண்டுகளாகக் கிடப்பிலேயே முடங்கிக் கிடக்கிறது.

ராமேஸ்வரம் தீவினை பொறுத்தமட்டில் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது கடலில் வாழும் மீன்களும், இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலும்தான். பல்வேறு நெருக்கடிகளால் கடலை நம்பி நடந்த மீன்பிடி தொழில் அழிவின் விளிம்புக்குச் சென்று விட்டது. மற்றுமொரு தொழிலான சுற்றுலா தொழிலுக்கு தேவையான எல்லா சிறப்புகளும் இருந்தும் அதனை மேம்படுத்த ஏனோ முயற்சிகள் எடுக்காமல் காலம் கடந்து வருகிறது.

நாட்டின் தென்கடலோர பகுதியான தனுஷ்கோடியினை சிறப்புமிக்க சுற்றுலா தலமாக மாற்றி தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ இனி வரும் நாட்களிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீவு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.