Published:Updated:

இயர் எண்ட் ஆஃபர் வந்தாச்சு... முதல் கார் வாங்கப்போறீங்களா... இது உங்களுக்கான செக்லிஸ்ட்!

இது உங்கள் முதல் கார் என்பதால் இந்த கேள்வி. கார் ஓட்டத் தெரியுமா? புது கார் எடுத்துத்தான் ஓட்டக் கத்துக்கப்போறேன் என்றால் உங்கள் எண்ணத்துக்கு முற்றி புள்ளி வைத்துவிடுங்கள்...

இயர் எண்ட் ஆஃபர் வந்தாச்சு... முதல் கார் வாங்கப்போறீங்களா... இது உங்களுக்கான செக்லிஸ்ட்!
இயர் எண்ட் ஆஃபர் வந்தாச்சு... முதல் கார் வாங்கப்போறீங்களா... இது உங்களுக்கான செக்லிஸ்ட்!

டிசம்பர் மாதம் வந்துவிட்டது. இருக்கும் பழைய ஸ்டாக்கை எல்லாம் எப்படி ஓரம் கட்டுவது என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள் கார் டீலர்கள். கார் வாங்க நினைப்பவர்கள் இப்போது எந்த கடையில் எவ்வளவு ஆஃபர் என்று வெறிகொண்டு தேடுவார்கள். மற்ற சீஸன் என்றால் நமக்குப் பிடித்த காரை அடம்பிடித்து வாங்குவோம். ஆனால், டிசம்பர், ஜனவரி மாதங்கள் நம் மனதை மாற்றிவிடுகின்றன ஆஃபர்கள். உங்கள் முதல் காரை வாங்கப்போகிறீர்கள் என்றால் ஆஃபர்களை கடைசியாக வைத்துவிட்டு இந்த விஷயங்களை முதலில் பாருங்கள்.

பட்ஜெட்

கார் வாங்குவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் தேர்வு செய்யவேண்டியது பட்ஜெட். அதிலும் மாத சம்பளக் காரர்களுக்கு இது மிகவும் முக்கியம். உங்கள் சம்பளம் எவ்வளவு. அதில் காருக்காக எவ்வளவு ஒதுக்கமுடியும். எந்த விஷயங்களில் எல்லாம் மிச்சம் பிடித்தால் வருங்காலத்தில் சிரமம் இருக்காது. வங்கிக் கடனில் வாங்கப் போகிறீர்கள் என்றால், மாதத் தவணை எவ்வளவு செலுத்த முடியும்; நீங்கள் எடுக்கும் காருக்கான டவுன் பேமென்ட் எவ்வளவு திரட்ட முடியும்; மாதந்தோறும் கார் பராமரிப்புக்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்க முடியும், கார் EMI எவ்வளவு வரும் என்பதை சில வங்கிகளில் இணையதளத்தில் பார்க்கலாம். கார் வாங்க முடிவு செய்துவிட்டால் உங்கள் முதல் வேலை இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதுவதுதான்.

பெட்ரோல் vs டீசல்

கேள்விக்குப் பதில் எழுதி பட்ஜெட்டை ஒதுக்கியாச்சு என்றால் அடுத்து உங்கள் தேவைக்கு எந்த கார் செட்டாகும் என்று பார்க்கவேண்டும். பெட்ரோலை விட டீசல் விலை குறைவு அதனால் டீசல் கார் வாங்குவோம் என்று யோசிக்கக்கூடாது. அதிகம் பயன்படுத்தப்போவதில்லை; மாசம் 1,000 கிலோ மீட்டர் கூட ஓட்ட மாட்டேன். எப்போவாவதுதான் டூர் அடிப்பேன்’ என்பவர்கள் நிச்சயம் பெட்ரோல் காரை தேர்வு செய்வதுதான் சரி.

‘காரை எப்படியும் மாதம் 1,500 கி.மீ தாண்டி ஓட்டுவேன்’ என்பவர்கள் டீசல் காருக்கு போகலாம். பெட்ரோல் காரை விட டீசல் கார் 1 லட்சம் விலை அதிகமாக இருக்கும். இப்போது பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வெறும் 5 ரூபாய்தான் வித்தியாசம். டீசல் கார் வாங்கும் காசில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீங்கள் பெட்ரோல் போட்டு ஓட்டலாம். 

ரீசேல் வேல்யூ

ரீசேல் வேல்யு அதிகமாக இருக்கும் காரை தேர்வு செய்யவேண்டும். சில ஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்யவேண்டிய நிலை வரும், அப்போது ரீசேல் வேல்யு அதிகமாக இருந்தால் உங்கள் கார் நல்ல விலைக்குப் போகும். ரீசேல் வேல்யுவை கணக்கிட எந்த ஃபார்முலாவும் இல்லை. ஒரு முறை OLX போன்ற ரீசேல் சந்தையில் எந்த கார் பிராண்டின் கார்கள் அதிகம் விற்பனையாகின்றன, எவ்வளவு விலை போகின்றன என்பதைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்துவிடும் ரீசேல் வேல்யு கிடைக்குமா, கிடைக்காதா என்று. நம் ஊரில் ஸ்விஃப்ட், எட்டியோஸ், இனோவா, ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரீசேல் வேல்யு அதிகம் உண்டு. க்விட், மைக்ரா, வென்ட்டோ, ஃபிகோ, புன்ட்டோ போன்ற கார்களை புதிதாக வாங்குபவர்கள் உண்டு. ஆனால், அதற்கு ரீசேல் சந்தையில் மதிப்பு கிடையாது.

பராமரிப்பு 

கார் வாங்குவதை விட அதைப் பராமரிப்பதுதான் கஷ்டம். 5 லட்ச ரூபாய் பைக்குக்கு கொடுக்கும் சர்வீஸ் தொகையைவிட 3 லட்ச ரூபாய் காருக்கு அதிகம் கொடுக்க வேண்டியது வரும். முதல் கார் எடுப்பவர்கள் மெயின்டனென்ஸ் குறைவான கார்களை பார்ப்பது நல்லது. பொதுவாக டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களின் பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும். ஆனால், சரியாக பராமரிக்கவில்லை என்றால் இன்ஜின் சீக்கிரமே அதன் தன்மையை இழந்துவிடும். டீசல் காருக்கு அதிக பராமரிப்பு தேவை. அவ்வப்போது செலவு செய்யக் கேட்கும். ஆனால், அதிக நாள்கள் தாக்குப்பிடிக்கும். பராமரிப்பு என்றால் செலவுகள் மட்டுமில்லை. சர்வீஸ் சென்டர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் என எல்லாமே அடங்கும். முதல் கார் என்றால் அதிக சர்வீஸ் சென்டர் கொண்ட பிராண்ட்டை வாங்குங்கள். ஸ்பேர் பார்ட்ஸ் சுலபமாக கிடைப்பது மட்டுமில்லை சர்வீஸ் பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு சர்வீஸ் சென்டருக்கு செல்லலாம்.

யூஸ்டு கார்

இது உங்கள் முதல் கார் என்பதால் இந்தக் கேள்வி. கார் ஓட்டத் தெரியுமா? புது கார் எடுத்துத்தான் ஓட்டக் கத்துக்கப்போறேன் என்றால் உங்கள் எண்ணத்துக்கு முற்றி புள்ளி வைத்துவிடுங்கள். புது கார் வாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்தான். ஆனால், கார் வாங்குவதே ஓட்டுவதற்காகத்தான். டிரைவரிடமோ, நண்பரிடமோ கொடுத்து ஓட்டச் சொல்வதற்கு புது கார் எதற்கு? இருக்கவே இருக்கிறது யூஸ்டு கார் எனும் ஆப்ஷன். கையில் இருக்கும் தொகையை முன்பணமாகச் செலுத்தி மிச்சத்தை லோன் போட்டு புது கார் வாங்குவதற்குப் பதிலாக கையில் இருக்கும் தொகையில் ஒரு பழைய காரை வாங்கி நன்றாக கார் ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள். நன்கு பழகியதும், எக்ஸ்சேஞ்ஜ் ஆப்ஷனில் கொடுத்துவிட்டு, புது கார் வாங்கலாம்.