Published:Updated:

`காலா' மூக்குத்தி, `96' குர்தி, `பத்மாவத்' பொட்டு... 2018 ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்!

`காலா' மூக்குத்தி, `96' குர்தி, `பத்மாவத்' பொட்டு... 2018 ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்!
`காலா' மூக்குத்தி, `96' குர்தி, `பத்மாவத்' பொட்டு... 2018 ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்!

`காலா' மூக்குத்தி, `96' குர்தி, `பத்மாவத்' பொட்டு... 2018 ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்!

`ஃபேஷன் என்றால் சினிமாக்காரர்களுக்குத்தான்' என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வோர் ஆண்டின் `ட்ரெண்ட் செட்டராக' வலம் வருபவர்கள் மக்களுள் ஒருவர்தான். விண்டோ ஷாப்பிங் தொடங்கி தனக்கு எந்த நிறத்தில் என்ன பேட்டர்ன் சரியாகப் பொருந்தும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அனைவரும் ஸ்மார்ட்டாகிவிட்டனர்.

அப்படிப்பட்ட மக்களின் விருப்பத்தில், இந்த ஆண்டு என்னவெல்லாம் ட்ரெண்டானது என்பதைப் பாப்போம்.

பிரைட்டா மஸ்டர்டா!

லட்சக்கணக்கான நிறங்களில், இந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் இருப்பது, `பிரைட்' நிறங்கள்தான். சென்ற ஆண்டு பிரைட்டும் இல்லாமல் லைட்டும் இல்லாமல், நடுநிலையில் இருக்கும் பேஸ்டல் நிறங்கள்தான் ட்ரெண்டானது. இந்த ஆண்டு கலர்ஃபுல் பிரைட் பச்சை, நீலம், பீச், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்கள்தான் மக்கள் மனதைக் கொள்ளைகொண்டிருக்கின்றன.

இதில் பெரும்பாலான பெண்களின் ஃபேவரைட் கலரான பிங்க் நிறத்தை, `பிரைட் பீச் ஷேடுகள்' பின்னுக்குத் தள்ளியுள்ளன. ஆண்டின் ஆரம்பத்தில் அடர்ந்த நிறங்கள் ட்ரெண்டானாலும், இறுதியில் 'மஸ்டர்டு' நிறம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. யெஸ்! '96' திரைப்படத்தில் த்ரிஷா அணிந்திருக்கும் குர்தி நிறம்தான் அது!

பெரிய பொட்டு:

சென்ற ஆண்டு கண்ணுக்கே தெரியாத சிறிய அளவு பொட்டு மற்றும் கற்கள் பதித்த பொட்டு ட்ரெண்டானது. ஆனால், இந்த வருடம் பழைய 25 பைசா சைஸ் பொட்டுதான் ட்ரெண்ட். `பத்மாவத்', `நடிகையர் திலகம்', `காலா' போன்ற படங்களின் தாக்கத்தினாலோ என்னவோ, புடவை, பொட்டு, மூக்குத்தி போன்றவற்றின் மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. ஸ்ட்ரெயிட்னிங், கர்லிங் என மாடர்ன் பெண்மணிகளாய் மாறியவர்கள்கூட அடர்ந்த நிறத்தில் பெரிய பொட்டு வைத்துக்கொள்கின்றனர். பேக் டு தி ட்ரெடிஷன் கேர்ள்ஸ்!

ஆன்ட்டிக் சில்வர் மூக்குத்தி:

முன்பெல்லாம் மூக்குத்தி அணியாத பெண்களைப் பார்ப்பது அரிது. `வலிக்குமே!' என்று பலர் மூக்குத்தி அணிவதைத் தவிர்த்துவந்தனர். ஆனால், தற்போது விதவிதமான டிசைன்களில் `ரெடிமேட் நோஸ் பின்ஸ்' மார்க்கெட்டில் வலம்வருகின்றன. அவற்றில், ஆன்ட்டிக் வகை சில்வர் மூக்குத்திகள்தான் இந்தக் காலத்து இளைஞர்களின் ஃபேவரைட். புடவை, சல்வார் கமீஸ், ஜீன்ஸ் என எந்த உடைக்கும் கச்சிதமாய்ப் பொருந்தும் இந்த மூக்குத்திகள், வட்டம், பூக்கள் டிசைன் போன்ற பல ஃபேன்சி ஸ்டைல்களில் கிடைக்கின்றன. யெஸ், உங்க மைண்ட் சரிதான். `காலா' ஸரீனாதான் எனக்கும் ஞாபகம் வருது. க்யூட் ஸரீனா... சாரி மூக்குத்தி!

சோக்கர்:

கி.மு.2500-ம் ஆண்டு சுமேரியன் கைவினைக் கலைஞர்களால் அன்றிருந்த உலோகங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட சோக்கர், இன்று வெல்வெட், லேஸ், தங்கம், வைரம் போன்றவற்றில் வெவ்வேறு டிசைன்களில் கிடைக்கின்றன. முன்பெல்லாம் தங்கத்தினாலான சோக்கர் செட் மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது பூக்கள், பிளெயின், கற்கள் பதித்தது என வெரைட்டிகள் அதிகமாகக் கிடைக்கும்போது வாங்காமல் இருந்தால் எப்படி! இதில், இந்த ஆண்டின் ட்ரெண்ட் கறுப்பு லேஸ் சோக்கர். டைனமிக் சோக்கர்!

ஸ்லிக்டு பிளாக் ஹேர் (Slicked Black Hair):

பாப் கட், அண்டர் கட், பஸ் (Buzz) கட், ஹேர் கலரிங், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல், ஸ்மூத்னிங் என `ஹேர்ஸ்டைலிலும்' ஏராளமான வெரைட்டிகள் உள்ளன. அதில் சென்ற ஆண்டு, நேராய் வளரும் முடியை சுருள்சுருளாக்கும் `கர்லிங்' மீது அனைவருக்கும் ஈர்ப்பு இருந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு கருமையான `ஸ்ட்ரெயிட் ஹேர்'தான் ட்ரெண்ட். கர்லிங், அடர்த்தியான மாயையை உருவாக்கும். ஆனால், இந்த ஸ்லிக்டு ஹேர், அடர்த்தியைக் குறைத்துக் காண்பிக்கும் என்றாலும் `சிக்கலற்ற முடி கிடைக்குமே!' எனப் பெரும்பாலானவர்கள் இதையே விரும்புகின்றனர். இதில், சுருள்முடிக்கு அதிக `மீம்ஸ்' வாங்கிய அனுபமா பரமேஸ்வரனும் அடங்குவார். பலே பிளாக் ஸ்ட்ரெயிட் ஹேர்!

ஃப்ளோரல் பிரின்ட்ஸ் மற்றும் எம்பளிஷ்மென்ட்:

சென்ற ஆண்டு `பிளெயின்' மற்றும் கலம்காரி டிசைன் ட்ரெண்டானது. என்றுமே தனக்கென ஸ்பெஷல் இடம் பிடித்திருக்கும், `ஃப்ளோரல்' டிசைன்தான் இந்த ஆண்டின் ட்ரெண்ட் பேட்டர்ன். பிரின்ட்ஸ் முதல் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் வரை அனைத்திலும் புதுமையான பூக்களின் பேட்டர்ன் மக்களை அதிகம் ஈர்த்தது. ஒற்றைப் பூவோ, முழுமையான பூங்கொத்தோ, வெஸ்டர்ன் உடைகளோ, மாடர்ன் உடைகளோ, பெண்களின் புடவையோ, ஆண்களின் சட்டையோ அனைத்திலும் பூக்களின் ராஜ்ஜியம்தான். இந்த ஆண்டு `கேன்ஸ் திரைப்பட விழாவில்' கலந்துகொண்ட சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், கங்கனா ரனாவத் போன்றோரின் சாய்ஸும் `ஃப்ளோரல்' பேட்டர்ன்தான். ஃபிரஷ் ஃப்ளோரல்ஸ்!

டெனிம்:

கார்கோ, லெக்கிங்ஸ் என எத்தனை மாடல்கள் வந்தாலும் `பேன்ட்' உலகின் கிங் என்றுமே ஜீன்ஸ்தான். மொத்தமான `டெனிம்' துணிவகையில் தயாராகும் இந்த ஜீன்ஸ், ஸ்லிம், ரெகுலர், ஸ்கின்னி, ரிப்டு போன்ற பல வெரைட்டிகள் மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. ஜீன்ஸ் பேன்ட்டுடன் ஸ்வெட்பேன்ட், ஜாக்கெட், ஷர்ட், டாப், குர்தி, ஸ்கர்ட், ஜம்ப்சூட் என விதவிதமான ஆடைகளிலும் இந்த ஆண்டு டெனிமின் பங்கு களைக்கட்டியுள்ளது. ஆடைகள் மட்டுமல்ல, டெனிம் துணியிலான கேப், ஷூ போன்றவையும் ட்ரெண்டானது. டெனிம் டார்லிங்!

பாவாடை தாவணி:

`அவுட் ஆஃப் ஃபேஷன்' என்று நாம் ஒதுக்கிவைத்த பாவாடை தாவணி, இந்த ஆண்டு ட்ரெண்டாகியுள்ளது. இதற்கு ஒருவகையில் `கடைக்குட்டி சிங்கம்', `தானா சேர்ந்த கூட்டம்', `சீமராஜா' போன்ற திரைப்பட கதாநாயகிகள் உடுத்தியிருந்த விதவிதமான அழகிய பாவாடை தாவணிகளும் காரணம். ஆம், இந்தக் காலத்து மாடர்ன் பெண்களையும் இது ஈர்த்தது. முன்பெல்லாம் பிளெயின் அல்லது கட்டம்போட்ட டிசைன்களில் குறிப்பிட்ட சில நிறங்களில் மட்டுமே இந்தத் தாவணி செட் இருந்தன. ஆனால், விதவிதமான பேட்டர்ன்களிலும் புதுமையான நிறங்களிலும் தற்போது கிடைக்கக்கூடிய இந்தத் தாவணி செட்களை வாங்குவதற்கு அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர். வெல்கம் பேக் ட்ரெடிஷன்!

டெர்மல் பியர்ஸிங் (Dermal Piercing):

காது மற்றும் மூக்கில் சிறு துளையிட்டு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினாலான அணிகலன்களை அணிந்துகொள்வது பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கைவிரல், கழுத்துப் பகுதி போன்ற இடங்களில் துளையிட்டு தகடு வைத்து, அதன்மேல் கற்கள் பதிக்கும் `டெர்மல் பியர்ஸிங்' இந்த ஆண்டின் மிரளவைக்கும் ட்ரெண்டானது. அதுவும் நிச்சயதார்த்த மோதிரத்தைக் கைவிரலில் ப(பா)திக்கும் வரை சென்றது வியப்பின் உச்சம். ஆனால், இந்த ட்ரெண்ட் இன்னும் இந்தியாவைத் தாக்கவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது. இது டெர்மல் அல்ல டெர்ரர் பியர்ஸிங்!

அடுத்த கட்டுரைக்கு