Published:Updated:

`அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் வாங்கியது எப்படி?!’ - மாணவிகள் பேட்டி

39-வது பட்டமளிப்பு விழாவில் 1,35,098 பேர் இளநிலை பொறியியல் பட்டத்தையும், 22,235 மாணவர்கள் முதுநிலை பொறியியல் பட்டத்தையும், 1011 பேர் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.

`அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் வாங்கியது எப்படி?!’ - மாணவிகள் பேட்டி
`அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் வாங்கியது எப்படி?!’ - மாணவிகள் பேட்டி

கடந்த சில ஆண்டுகளில், பட்டமளிப்பு விழாவில் 3,000 ரூபாய் மதிப்புள்ள தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு 32,000 ரூபாய் மதிப்புள்ள தங்கப் பதக்கத்தை வழங்கி மாணவர்களைக் கௌரவித்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். தங்கப்பதக்கம் வாங்கிய நான்கில் மூன்று பேர் மாணவிகள். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுரப்பா பதவியேற்றபின் நடத்தப்படும் முதல் பட்டமளிப்பு விழா என்பதால், இந்த விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தினர். கடந்த ஆண்டுவரை சிறப்பான முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தின் மீது தங்க முலாம் பூசிய தங்கப் பதக்கம் வழங்குவதையே வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், இந்த ஆண்டு 32,000 ரூபாய் செலவு செய்து 10 கிராம் தங்கத்தையே பதக்கமாகச் செய்து, மாணவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நேற்று (22.12.2018) நடந்தது. இந்த விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், பொறியியல் படிப்புகளில் முதன்மையாகத் திகழ்ந்த 138 பேருக்குத் தங்கப்பதக்கத்தையும், 1,011 பேருக்கும் முனைவர் பட்டத்தையும் வழங்கினார். 

மெக்கானிக்கல் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற கார்த்திக், ``நான் சென்னையில்தான் ப்ளஸ் டூ முடித்தேன். நான்கு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று, பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். முதல் செமஸ்டரில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அதன்பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டுப் படித்து அதிக மதிப்பெண் பெற்றேன். தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களே என்னுடைய துறையில் இருப்பதால் கடுமையான போட்டி இருந்தது. கடைசி செமஸ்டர் முடிந்தபின்பு என்னுடைய துறையில் நான் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதாக சொன்னார்கள். பி.இ முடித்து தற்போது ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் டிசைனிங் துறையில் சேர்ந்திருக்கிறேன். பல்கலைக்கழக வேந்தர் கையில் தங்கப்பதக்கம் வாங்கியது சந்தோஷம். ஆர்வமுள்ள துறையில் சேர்ந்தால் எல்லோரும் பதக்கம் வாங்க முடியும்" என்றார். 

தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி சௌமியா ஶ்ரீநிதி, ``என்னுடைய சொந்த ஊர் ஆதம்பாக்கம். 2014-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் படிக்க இடம் கிடைத்தது. முதல் செமஸ்டரிலிருந்தே வகுப்புகளில் தவறாமல் கலந்துகொண்டேன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது குறிப்பெடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களை அன்றைக்கே படித்து முடித்துவிடுவேன். இதுவே நான் வகுப்பில் நிறைய மதிப்பெண் எடுக்க உதவியாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் விழாக்களில் பங்குபெற்று என்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டேன். இதன்மூலம் வளாகத்தேர்வில் நிதி சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்கப்பதக்கம் கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. மேலாண்மைத் துறையில் சாதிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் உள்ளேன்" என்றார். 

சிவில் இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றிருக்கும் கவிதா, ``பன்னிரண்டாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிவில் இன்ஜினீயரிங் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படித்தேன். முதல் செமஸ்டரில் மட்டுமே கொஞ்சம் கடினத்தை உணர்ந்தேன். அதன்பின்பு கல்லூரியில் ஒவ்வொரு செமஸ்டரிலும் முதல் மதிப்பெண் பெற்றால் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்கள். அதனால், முதல் மதிப்பெண் பெறுவதில் மிகப் பெரிய அளவில் போட்டி இருந்தது. ஆனாலும், என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் கூட்டாக அமர்ந்துதான் படிப்போம். எங்களுடைய துறைத்தலைவர் எப்படியாவது இந்த ஆண்டு பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வாங்கிவிட வேண்டும் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய ஆசையைப் பூர்த்தி செய்திருக்கிறேன். கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றபோது கிடைத்த ஊக்கத்தொகையைக் கொண்டே முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறேன். என்னுடைய படிப்புக்காகவே அரக்கோணத்திலிருந்து பெற்றோர்கள் சென்னைக்குக் குடியேறினர். அடுத்து, இன்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியோடு படித்து வருகிறேன்" என்றார் மகிழ்ச்சி பொங்க.

பயோடெக்னாலஜி பாடப்பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றிருக்கும் செஞ்சிலட்சுமி, ``மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற இலக்கு வைத்திருந்தேன். ஆனால், பொறியியல் கலந்தாய்வில் பயோ டெக்னாலஜி கோர்ஸில் இடம் கிடைத்தது. என்னுடைய துறையில் அதிக மதிப்பெண் பெற்றதால் தமிழக அரசின் சார்பில் ஜப்பானுக்கு கல்வி சுற்றுப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. தற்போது, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் பாம்பு, தேள் கடி விஷத்தை முறியடிக்கும் மருந்துப் பொருள்களுக்கான  ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்" என்றார்.   

பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், ``இன்றைய உலகத்தின் மிகப்பெரிய சக்திகளாக வேளாண்மை, தொழில்வளம், தொழில்நுட்பங்கள் உள்ளன. பொருளாதாரம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றைச் சம அளவில் மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச்செல்லலாம். இத்தகைய துறையில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினார். 

39-வது பட்டமளிப்பு விழாவில் 1,35,098 பேர் இளநிலை பொறியியல் பட்டத்தையும், 22,235 மாணவர்கள் முதுநிலை பொறியியல் பட்டத்தையும், 1011 பேர் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.