Published:Updated:

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

கண்காட்சி

‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐந்தாவது கண்காட்சியாகக் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி வரை 4 நாள்கள் மஞ்சள் மாநகரமாம் ஈரோட்டில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ’ நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் உள்ள பரிமளம் மஹாலில் பிரமாண்டமாக நடைபெற்ற இக்கண்காட்சியில் நான்கு நாள்களும் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கருத்தரங்குகளில் வல்லுநர்கள் பேசிய விஷயங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

கண்காட்சியின் மூன்றாம் நாளான செப்டம்பர் 2-ம் தேதியன்று கருத்தரங்கின் காலை அமர்வின் முதல் பேச்சாளர், கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் மாநில ஆலோசகர் முனைவர் வடிவேல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்குவது எப்படி’ என்ற தலைப்பில் பேசிய வடிவேல், “பொதுவாக, விவசாயம் செய்தால், நஷ்டம்தான் வரும் என்ற மனநிலையில்தான் இந்தியாவில் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள். இந்தியாவில் வேளாண்மை, தனிநபரைச் சார்ந்துள்ளது. என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை விவசாயிதான் முடிவு செய்கிறார். இந்திய விவசாயிகள் மட்டும்தான் அனைத்து இடுபொருள்களையும் சில்லறை விற்பனையாளரிடம் வாங்குகிறார்கள். ஆனால், அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களைச் சில்லறை விலைக்கு விற்பதில்லை. அதை மொத்த வியாபாரிக்குத்தான் விற்கிறார்கள்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

இதை மாற்ற உழவர்கள் ஒருங்கிணைந்து இடுபொருள்களை உற்பத்தி செய்யவேண்டும். தனிநபர் விவசாயம், கூட்டுப் பண்ணை விவசாயமாக மாறவேண்டும். தனிநபர் விவசாயம் எப்போதும் லாபகரமானதாக இருக்க முடியாது என்ற விஷயம், 140 நாடுகள் சேர்ந்து செய்த ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்வு முடிவை, 4 பக்க அறிக்கையாக 2002-ம் ஆண்டு திட்டக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், மக்களின் உணவுப் பழக்கவழக்கம் இப்போது மாறியுள்ளதா என்பது குறித்து 8 ஆசிய நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவு இந்திய விவசாயத்தின் ஆணிவேரை ஆட்டிப்பார்ப்பதாக இருந்தது. குறைந்த விலையில் எளிதில் கிடைத்த தானிய வகை உணவு நுகர்வு குறைந்து, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்கள், காய்கறிகள், மாமிசங்களை மூலப்பொருளாகக் கொண்ட உணவு வகைகளின் நுகர்வு அதிகரித்து வருகிறது என்கிற தகவல் அந்த ஆய்வு மூலம் அறியப்பட்டது.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது. அதன் வெளிப்பாடுதான் ஹோட்டல், மால் போன்ற இடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று புதிய வகை உணவுகளை அதிக விலை கொடுத்து சாப்பிடுவது. இதனால், உணவுச்சந்தை விரிவடைந்துவிட்டது.

உணவுக்கான உற்பத்திப்பொருள் சிறுவிவசாயிகள் கையில்தான் உள்ளது. ஆனால், உணவு வணிகம் வளர்ச்சி அடைகிறது. தனிநபரின் சிறுவிவசாயம் வீழ்ச்சியில் உள்ளது. இதை மாற்றவேண்டும். விவசாயிகள் சங்கமாகச் செயல்படவேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கான கூட்டுறவு சங்கங்கள் இல்லாமல் இல்லை. அவை அனைத்தும் பயிர்க்கடன், மராமத்துக் கடன், நகைக்கடன் வழங்கும் உழவர் நலச்சங்கங்களாகவே செயல்பட்டு வருகின்றன. விளைபொருள்களைச் சந்தைப்படுத்தும் கூட்டுறவுச் சங்கங்களாக அவை இல்லை.

எனவே, விவசாயிகள் குழுக்களைக் கிராமந்தோறும் அமைத்து, கம்பெனிச் சட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் என்கிற முடிவில் திட்டக்குழு உறுதியாக இருந்தது. இந்தியாவில் இரண்டுவிதமான நிறுவனங்கள்தான் உண்டு. ஒன்று ‘பிரைவேட் லிமிடெட் கம்பெனி’. இன்னொன்று ‘பப்ளிக் லிமிடெட் கம்பெனி’. பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்பது தனிப்பட்ட நபர்கள் சேர்ந்து நடத்தும் தனியார் நிறுவனம். அதில் 200 பேர் வரை இயக்குநர்களாக இருக்கலாம். பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்பது, பொதுத்துறை நிறுவனம். இதில், பங்கு விற்பனை மூலம் பல்லாயிரம் பேரை உறுப்பினராக்க முடியும். ஆனால், வரலாற்று நிகழ்வாக, கம்பெனிச் சட்டத்தில் விவசாயிகளுக்காக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதுதான் ‘உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்’. இதன் மூலம், விவசாயமும் கார்ப்பரேட் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

500 விவசாயிகள் இணைந்து எங்கு வேண்டுமானாலும் உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளைத் தொடங்கலாம். அதன் மூலம் விளைபொருள்களை நேரடியாகச் சந்தைப்படுத்தலாம், மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம். இதற்காக மானியத்துடன் கூடிய நிதிவசதியை நபார்டு உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்குகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது ஆயிரக்ககணக்கான உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் தொடங்கப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி அங்கு விளையும் கொய்யாப்பழங்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டலில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், காய்கறி விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கில் இயங்கும் திராட்சை உற்பத்தியாளர் சங்கம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது” என்று உதாரணங்களுடன் விளக்கினார்.

தொடர்ந்து ‘மகத்துவம் கொண்ட மானாவாரிப் பயிர்கள்’ என்ற தலைப்பில், உரையாற்றினார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘முன்னோடி விவசாயி’ சென்னகேசவன்.

“மானாவாரி விவசாய விளை பொருள்களையும் மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்ட முடியும் என்பதற்குச் சாட்சி நான்தான். உலகச் சந்தையில் முருங்கை இலைக்கு அதிகத் தேவை உள்ளது. மானாவாரியில் விளையும் கறிவேப்பிலை, அகத்தி இலை, துளசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட 12 வகையான விளைபொருள்களை நல்ல விலை கொடுத்து இறக்குமதி செய்யக் கனடா நாடு தயாராக இருக்கிறது. குறிப்பாக, இயற்கை விவசாய விளைபொருள்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப் பல நாடுகள் தயாராக உள்ளன” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார், சென்னகேசவன்.

மதிய அமர்வில், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் செந்தூர்குமரன், ‘தோட்டக்கலைப்பயிர்களில் வெற்றித்தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

“தேவைக்கு அதிகமான இடுபொருள்களை விவசாயிகள் பயிர்களுக்குக் கொடுக்கிறார்கள். அது அவசியமற்றது. பரிந்துரைக்கப்பட்ட அளவைத்தாண்டி உரங்கள் இடும் மண் மலடாகிப்போகிறது. அதேபோல, பூச்சிக்கொல்லிகள் குறித்து விவசாயிகள், வேளாண் துறையிடம் ஆலோசனைகள் கேட்பதில்லை. அவற்றை விற்பனை செய்பவர்களிடம்தான் கேட்கிறார்கள். இதுவும் தவறான நடைமுறை.

ரசாயன விவசாயத்தில் கிடைக்கும் மகசூல் அளவை இயற்கை விவசாயத்தில் எடுக்க முடியாது என்ற கருத்து நிலவுகிறது. மண்ணை வளப்படுத்தினால் இயற்கை விவசாயத்திலும் நல்ல மகசூல் பெறமுடியும். வளமான மண்ணின் அடையாளம் அதன் பொலபொலப்புத்தன்மைதான். மண்துகள்களுக்குள் இடைவெளி அவசியம். மண்ணின் தன்மை அறியாமல் செய்யும் விவசாயம், புண்ணின் தன்மை அறியாமல் செய்யும் சிகிச்சைக்கு ஒப்பானது. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மண்புழு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள் ஆகியவை மண்ணின் அங்கக கரிமச்சத்தை அதிகரிக்கும்.

நாற்றங்கால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்து நடவு செய்தால், 100 சதவிகித மகசூலைப்பெற முடியும். மேட்டுப்பாத்தி மற்றும் குழித்தட்டு முறைகளில் நாற்றங்கால் உற்பத்தி செய்யலாம். தக்காளி, மிளகாய், கத்திரி, பப்பாளி உள்ளிட்ட நாற்றுகளை, இந்த முறைகளில் உற்பத்தி செய்யலாம். 3 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், அரையடி உயரம் கொண்ட மேட்டுப்பாத்தியில் குழந்தையின் சுண்டுவிரல் எளிதாகப் பதியும்படி மண்ணின் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 10 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைகளைத் தூவி, நிரவிப் பூவாளிப்பாசனம் செய்ய வேண்டும். வேர் அழுகல், தண்டு அழுகல் நோய்களைத் தடுக்கச் சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்” என ஆலோசனை வழங்கினார் செந்தூர்குமரன்.

தொடர்ந்து, ‘கால்நடைகளுக்குப் பாரம்பர்ய மருத்துவம்’ என்ற தலைப்பில், கால்நடை மூலிகை மருத்துவர் டாக்டர் புண்ணியமூர்த்தி பேசினார்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

“கறவை மாடுகளை வாங்கும்போது கவனம் தேவை. வாய்ச்சப்பை, கோமாரி போன்ற நோய்கள் தாக்கிய மாடுகள் முழுமையான குணம் அடைந்துவிட்டதா என்று பார்க்க வேண்டியது முக்கியம். பால் உற்பத்திக்காக மாடுகள் என்றில்லாமல் இயற்கை வேளாண்மைக்கும் மாடுகள் அவசியம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டுப்பசு மூலம், 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய முடியும். அந்தப்பகுதிக்கு ஏற்ற மாடுகளை வளர்ப்பது சிறப்பானது. பால் கறக்கும்போது வெதுவெதுப்பான உப்பு நீரில் மடியைக் கழுவி விடவேண்டும், அதேபோல் பால் கறப்பவர் கைகளும் சுத்தமாக இருந்தால் மாடுகளுக்குப் பரவும் தொற்று நோயைத் தடுக்கலாம்” எனப் பயனுள்ள நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மூன்றாம் நாளின் நிறைவுப் பேச்சாளராக மேடையேறிய, முன்னோடி இயற்கை விவசாயி ‘கேத்தனூர்’ பழனிச்சாமி, ‘இயற்கை வழியில் காய்கறிச் சாகுபடி’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

“ஒவ்வொரு விவசாயியும், தங்கள் நிலத்தில் நான்கில் ஒரு பங்கிலாவது காய்கறி விவசாயம் மேற்கொள்ள வேண்டும். நகரங்களை ஒட்டியுள்ள விவசாயிகள் அதிகப்பரப்பளவில் காய்கறி விவசாயம் செய்யலாம். இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகளுக்குத் தேவை அதிகரித்து வருகிறது. பாகல், பீர்க்கன், புடலை, சுரை, கோவைக்காய் போன்ற கொடிவகைக் காய்கறிகளை ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் செலவு குறைந்த மூங்கில் பந்தல்களை அமைத்துக் கொள்ளலாம். கல்தூண்கள் அமைத்து கம்பிவலை பின்னல் முறைப்பந்தல் அமைக்க ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். இப்படி அமைக்கும் பந்தல்கள் 50 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும். கல்தூண் பந்தல் அமைக்கத் தோட்டக்கலைத்துறை மானியமும் உண்டு.

காய்கறி விவசாயத்துக்குச் சொட்டுநீர்ப் பாசனம் உகந்தது. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் உள்ளிட்ட இடுபொருள்களையும் சொட்டுநீர்க் குழாய்கள் வழியே கொடுக்கலாம். சொட்டுநீர் மூலம் இடுபொருள்களைக் கொடுக்கும்போது... அவை, பயிரின் வேர்பகுதிக்குச் சரியாக இடுபொருள்கள் போய்ச் சேருவதால் சேதாரம் இல்லாமல் செடிகளுக்குக் கிடைக்கும். கவலை இல்லாத விவசாயம் என்றால் அது காய்கறி விவசாயம்தான்” என்று தனது சாகுபடி பாடத்தை பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய வல்லுநர்களின் உரைவீச்சுக்கள் அடுத்த இதழில்...

- ஜி.பழனிச்சாமி,

படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி