Published:Updated:

வரும் காலங்களில் உணவுக்காக அடுத்த மாநிலங்களிடம் கையேந்தப் போகிறதா தமிழகம்?

வரும் காலங்களில் உணவுக்காக அடுத்த மாநிலங்களிடம் கையேந்தப் போகிறதா தமிழகம்?
வரும் காலங்களில் உணவுக்காக அடுத்த மாநிலங்களிடம் கையேந்தப் போகிறதா தமிழகம்?

ழக்கம் போல `கஜா புயல்' எனும் பேரிடரை வழியனுப்பி வைத்த கையோடு, 2019-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2016-ல் வர்தா புயல், 2017-ல் ஒகி புயல், 2018-ல் கஜா புயல் எனும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் பேரிடர்கள் அனைத்துமே நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களுக்கு இடைவெளியில் நிகழ்ந்த பேரிடர்கள். இப்போது, தமிழகம்-ஆந்திர எல்லையை நோக்கி நகர்ந்து வந்த பெய்ட்டி புயல், தமிழகத்தைத் தொடாமல் விட்டுச் சென்றிருக்கிறது. பெய்ட்டி புயல் தமிழகத்தைத் தாக்கியிருந்தால் தமிழகக் கடற்கரை மாவட்டங்களின் நிலை இன்னும் மோசமாகியிருக்கும். இந்தப் புயல்கள் அனைத்தும் உணர்த்துவது ஒன்றுதான்...`இயற்கையை இயற்கையாக வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான்'.

ஆனால் தமிழகம் இன்று மோசமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆம், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்கள் அடுத்த ஆண்டு அதிரடியாகக் களமிறங்க வரிசை கட்டி நின்றுகொண்டிருக்கின்றன. இந்த வருடம் கிட்டத்தட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி கிடைத்துவிட்டன என்று கூட சொல்லலாம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முன்னரே உள்ள இரண்டு அலகுகளோடு சேர்த்து கூடுதலாக நான்கு அலகுகள் கட்ட அனுமதி பெறப்பட்டு பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. ஏற்கெனவே உள்ள இரண்டு அலகிலும் சரிவர மின் உற்பத்தி நடைபெறவில்லை. இந்நிலையில் அதைச் சரிசெய்வதை தவித்துவிட்டு அடுத்த அலகுகள் அமைக்கத் தயாராகும் திட்டத்தைச் சரியானதுதான் என ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே உள்ள அணு உலைகள் அதிகமாகப் பழுதடைந்ததும் இந்த ஆண்டுதான். இந்த ஆண்டுதான் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு மூன்று இடங்களில் அனுமதி கொடுத்திருக்கிறது. அதற்கான அனுமதியை வேதாந்தா நிறுவனம் பெற்றுள்ளது.

அத்திட்டமும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடங்கலாம். தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. நியூட்ரினோ மையம் இடைக்காலத் தடை தீர்ப்பில் `இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்தத் திட்டத்தை தொடர முடியும்' எனச் சொல்லியிருக்கிறது. வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி பெறப்பட்ட பின்னர் இத்திட்டம் அரங்கேற வாய்ப்புகள் அதிகம். தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணான மேற்குத் தொடர்ச்சி மலை பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

மத்திய அரசின் நிதி உதவியோடு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு என முதலில் அறிவிக்கப்பட்டு, 7 ஆயிரம் கோடியாக இறுதி செய்யப்பட்டு, சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு முனைப்போடு செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. மொத்தமாக 277 கி.மீ தொலைவு கொண்ட சாலை அமையவிருக்கும் இத்திட்டத்தில் 5 மாவட்டங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவருகின்றன. கையகப்படுத்தப்படும் நிலங்களில் விவசாய நிலங்களும், வனப்பகுதிகளும் அதிகமாக அழிக்கப்படும். மக்களுக்காக என்று அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அது பாதுகாப்பு கேந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகத்தான் எனப் பல தரப்பினராலும் சொல்லப்படுகிறது. இத்திட்டமும் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும். இத்திட்டத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவது விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்தாம்.

அடுத்ததாகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சாலை நகரமான தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, துப்பாக்கிச்சூட்டில் முடிந்திருப்பதும் இந்த ஆண்டுதான். 100 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது வராத தமிழக அரசு, மொத்தமாக 14 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. அன்றே `ஆலையை மூடியது ஒரு நாடகம்' எனத் தமிழகக் கட்சித் தலைவர்களும், சட்ட வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். ஆலையை மூடியது தவறு என ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் மீண்டும் செயல்பட உள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம்.

தொடர்ச்சியாக இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் 2018-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தொடர்பாக, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்கள் அரங்கேறத் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த ஆண்டு கிட்டத்தட்ட அனைத்துச் சூழலியல் திட்டங்களும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குரிய எல்லாப் பணிகளும் முடிந்துவிட்டன என்றுகூடச் சொல்லலாம். கடந்த 16 ஆண்டுகளில் உருவான காற்றழுத்தத்தில் `கஜா புயல்' பத்தாவது காற்றழுத்த மண்டலமாகும். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான காற்றழுத்தத்தை ஒப்பிடும்போது, முந்தைய காலங்களை விட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறது, தமிழக அரசின் பருவநிலை மாற்றத்துக்கான செயல்திட்ட அறிக்கை. இவ்வாறு இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுதான். ஆனால், 2019-ம் ஆண்டு சுற்றுச்சூழலை அசுத்தமாக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும் என்ற எண்ணம்தான் சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. எப்போதுமே ஒரு நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டில் காலடி எடுத்து வைப்போம். இப்போது இந்த ஆண்டில் அந்த நம்பிக்கையும் உடைக்கப்பட்டிருக்கிறது. விவசாய மாநிலமான தமிழகத்தில் இப்படி அடுத்தடுத்த திட்டங்கள் நிறைவேறினால், நமது உணவுத் தேவைக்கு அடுத்த மாநிலங்களிடம்தான் கையேந்த வேண்டிய நிலை வரும். 

அடுத்த கட்டுரைக்கு