Published:Updated:

மின் வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் பாய்ந்து மாடு பலியான சோகம்

மின் வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் பாய்ந்து மாடு பலியான சோகம்
மின் வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் பாய்ந்து மாடு பலியான சோகம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே மின்சாரம் தாக்கி 50,000 ரூபாய் மதிப்புள்ள மாடு உயிரிழந்தது. மின்சாரத்தில் மாடு சிக்கியதை அறியாமல் அதைக் காப்பாற்ற முயன்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மின் வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் பாய்ந்து மாடு பலியான சோகம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. அவருக்குச் சொந்தமான மாட்டை வழக்கம் போல மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள மின் கம்பத்தில் மாடு உரசியபோது எதிர்பாராதவிதமாக மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து தாக்கியுள்ளது. அதனால் பதற்றம் அடைந்த மாடு சத்தம் போட்டுக் கத்தியபடியே கீழே விழுந்துள்ளது.

ஊருக்கு நடுவில் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய தெருவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் தெருவில் நின்றிருந்த தினேஷ், வன்னியபெருமாள் ஆகியோர் திடீரென மாடு சரிந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்து அதைத் தூக்கிவிட முயன்றுள்ளனர். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதனால் பதற்றம் அடைந்த இருவரும் மாட்டைப் பிடித்திருந்ததை உதறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மின்சாரத்தில் சிக்கிய மாட்டின் கால் பகுதியில் தீப்பற்றி எரிந்தது. அதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சம்பவம் குறித்து மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதிலும் உடனடியாக பணியாளர்கள் யாரும் வந்து மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை. சம்பவம் குறித்த தகவல் அளிக்கப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பின்னரே மின் வாரியப் பணியாளர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மின் வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் பாய்ந்து மாடு பலியான சோகம்

மின் கம்பத்தில் இருந்து  தரையில் அமைக்கப்பட்ட எர்த் பைப் முறையாக தரைப் பகுதிக்குள் செலுத்தப்படாமல் தரைக்கு வெளியே தெரியும் வகையில் இருந்ததால், அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். தெருவில் சிறுவர்கள் விளையாடிவரும் நிலையில், அவர்கள் மீது மின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.