
கேள்வி - பதில்
என் வயது 30. டேர்ம் இன்ஷூரன்ஸ் தலா 50 லட்சம் ரூபாய்க்கு, இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் எடுக்க விரும்புகிறேன் (மொத்த காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடி). டேர்ம் இன்ஷூரன்ஸை இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா, அப்படி எடுத்தால் இரண்டு பாலிசிகளிலிருந்தும் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியுமா?
செல்வராஜ், சேலம்
கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்
‘‘இரண்டு நிறுவனங்களில் டேர்ம் பாலிசி எடுக்க முடியும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது உங்களுடைய வருமானம் மற்றும் உடல்நிலை இரண்டையும் கருத்தில்கொள்வார்கள். உங்களுடைய வருமானம் ரூ.50 லட்சத்துக்குள் இருந்தால் முதல் பாலிசி எடுக்க முடியும். அதேபோல, உடல்நலமும் நல்லபடியாக இருக்கவேண்டும். இரண்டாவதாக வேறொரு நிறுவனத்திலும், ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் பாலிசி எடுக்கும்போது, ஏற்கெனவே பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்ற கேள்வி வரும். அப்போது ஏற்கெனவே எடுத்த பாலிசி தொகையைக் குறிப்பிட வேண்டும். அப்போது, உங்களுடைய வருமானம், ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகைக்கு ஏற்றதாக உள்ளதா என்று ஆராயப்படும். அதேபோல, உடல்நலத்தையும் பரிசோதிப்பார்கள். உடல் பரிசோதனையும் காப்பீட்டுத் தொகைக்கேற்ப மாறுபடும். இது ஏற்கத்தக்கதாக இருந்தால் மட்டுமே இரண்டாவது பாலிசி கிடைக்கும். நீங்கள் ஏற்கெனவே எடுத்த பாலிசி குறித்த தகவலை மறைத்து இரண்டாவது பாலிசியும் எடுத்திருந்தால், க்ளெய்ம் செய்யும் போது அது பிரச்னையாக மாறும்.’’

என்னிடம் உள்ள ரூ.8 லட்சத்தில் ரூ.4 லட்சத்தை பத்தாண்டு கால நோக்கில் மொத்தமாக முதலீடு செய்து நல்ல வருமானம் பெற நினைக்கிறேன். இதற்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கூறவும்.
சுப்ரமணியன், உடுமலைப்பேட்டை
ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா
‘‘அவசரத் தேவைக்கான ரூ.4 லட்சத்தைக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களான ஆக்ஸிஸ் லிக்விட் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்டுகளில் தலா ரூ.2 லட்சம் எனப் பிரித்து முதலீடு செய்யலாம். மீதியுள்ள ரூ.4 லட்சத்தைப் பங்கு சார்ந்த முதலீட்டுத் தொகுப்பில் முதலீடு செய்யவும்.
மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஹெச்.டி.எஃப்.சி ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், பராக் பரிக் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.’’

வருமான வரி தொடர்பான ஆவணங்களை எத்தனை ஆண்டு காலத்திற்குப் பத்திரப்படுத்த வேண்டும்?
ராஜேஷ் குமார், சென்னை
எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்
‘‘வருமான வரி தொடர்பான ஆவணங்களைப் பத்திரப்படுத்துவது தொடர்பாகத் தனியாக எந்த விதிமுறையும் கிடையாது. ஆனால், உள்நாட்டில் மட்டுமே வருமானம் பார்ப்பவராக இருந்தால், அவரது வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு ஆறு ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது. இதைக் கணக்கில்கொண்டு பார்த்தால், இந்த ஆறு ஆண்டுகள் மற்றும் வருமானம் ஈட்டிய ஆண்டு, வருமான வரி மதிப்பீட்டு ஆண்டையும் சேர்த்து எட்டு ஆண்டு காலத்திற்குப் பத்திரப்படுத்த வேண்டும். அதேபோல, வெளிநாட்டிலிருந்தும் வருமானம் வந்திருந்தால், அதுகுறித்து விசாரிக்க 16 ஆண்டு கால அவகாசம் வருமான வரித்துறைக்கு உள்ளது. அதன்படி பார்த்தால், வருமானம் ஈட்டிய ஆண்டு, வருமான வரி மதிப்பீட்டு ஆண்டையும் சேர்த்து மொத்தம் 18 ஆண்டுகளுக்கு ஆவணங்களைப் பத்திரப்படுத்த வேண்டும்.’’

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் போன்றவை இருப்பது குறித்தெல்லாம் தெரிவிக்க வேண்டுமா, அந்தப் பழக்கங்கள் இருந்தால் பாலிசி எடுப்பது தடைபடுமா?
மணிகண்டன், நாகர்கோவில்
பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
“ஆம், காப்பீடு விண்ணப்பப் படிவத்தில் இத்தகைய கேள்வி கேட்கும்பட்சத்தில், இந்த இரண்டு வகையான பழக்கத்தையும் தெரிவிக்க வேண்டியது அவசியம்.”

கடந்த 2017-18 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தவறி விட்டேன். தற்போது வரி கணக்குத் தாக்கல் செய்ய முயற்சி செய்தால், தேதி முடிவடைந்ததன் காரணமாக இனி வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியாது என்கிறார்கள். இதுவரை வருமான வரி அலுவலகத்தி லிருந்து எந்த நோட்டீஸும் வரவில்லை. வங்கிக் கடன் வாங்க வேண்டியிருப்பதால், வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
குணசேகர், மதுரை
கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்
‘‘வருமான வரிச் சட்டப்படி, 2018 மார்ச்க்குப் பிறகு மதிப்பீட்டு ஆண்டு 2017-18-க்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியாது. எனவே, தான் வரி கணக்குத் தாக்கல் செய்யமுடியாதென்று காட்டுகிறது.
இனி அடுத்ததாக, வருமான வரித் துறை யிலிருந்து நோட்டீஸ் வரும்வரை காத்திருக்கலாம். அல்லது, மதிப்பீட்டு ஆண்டு 2017-18-க்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தவறியதைக் குறிப்பிட்டு வருமான வரித்துறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பலாம். அதனை ஏற்று, மதிப்பீட்டு ஆண்டு 2017-18-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.’’

நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக உள்ளேன். என் திருமணச் செலவுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.12,000 சேமிக்கத் திட்டமிட்டுள்ளேன். நல்ல திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.
கார்த்திக், கோயம்புத்தூர்
கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்
‘‘ஐந்து வருடங்களில் தங்களுக்குப் பணத்தேவை இருப்பதால் சற்று கவனமாக முதலீடு செய்வது நன்று. மாதம் ரூ.4,000 வீதம் குறைவான ஏற்ற இறக்கம் உள்ள பங்கு சாராத ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யவும்.
ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் லிக்விட் ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் லிக்விட் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும். சென்செக்ஸ் புள்ளிகள் 25,000-க்குக் குறைவாக வந்தால், மேலே கூறிய திட்டங்களின் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, மாதம் ரூ.4,000 வீதம் பங்கு சார்ந்த அதிக ஏற்ற இறக்கம் உள்ள கீழ்க்கண்ட மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யவும்.
எல் & டி ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி. ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட்.
போதுமான லாபம் இருக்கும்போது பங்கு சாராத, குறைவான ஏற்ற இறக்கம் உள்ள ஃபண்டுகளுக்கு மொத்தப் பணத்தையும் மாற்றிக் கொள்ளவும். சென்செக்ஸ், 25000-க்கு குறையவில்லை என்றால், முதலில் கூறிய மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி-யைத் தொடரவும்.’’
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.