Published:Updated:

காரைக்குடி வின்டேஜ் கார் எக்ஸ்போவில் கவனம் ஈர்த்த அந்த ஒரு கார்!

காரைக்குடி வின்டேஜ் கார் எக்ஸ்போவில் கவனம் ஈர்த்த அந்த ஒரு கார்!
காரைக்குடி வின்டேஜ் கார் எக்ஸ்போவில் கவனம் ஈர்த்த அந்த ஒரு கார்!

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த `1956 Dodge Kings Way’ தன் உடலை நீட்டி நின்றிருந்தது. இப்போதும் பல கார்களில் டிரம் பிரேக்குதான். ஆனால், அப்போதே 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் ப்ரேக் கொடுத்திருக்கிறார்கள்.

ழைமையின் அடையாளமாக 36 கார்கள், 30 மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்ற காரைக்குடி ஹெரிடேஜ் கிளப்பின் கார் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றுவந்தேன். 1928 முதல் 1968-ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஆஸ்டின், மோரிஸ், பிளைமவுத், சிட்ரோன், பென்ஸ், செவர்லே, ஜீப், அம்பாஸிடர், ஸ்டாண்டர்டு, வாக்ஸ்ஹால் எனப் பழைமையான கார்களும் வெஸ்பா ஸ்கூட்டர், ஜாவா, மோஃபா, யெஸ்டி, என்பீல்ட், ராஜ்டூட் போன்ற பைக்குகளும் கூடவே லேம்ப்ரெட்டா ஆட்டோக்களும் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன.

வளாகத்துக்குள் நுழைந்த உடனேயே ஆஸ்டின் 7 (1926), ஆஸ்டின் 8 (1948) மற்றும் ஆஸ்டின் 10 டூரர் (1933) மூன்றும் சிவப்பு நிறத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தன. ஆஸ்டின் 7 காரை பல வின்டேஜ் ஷோக்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இதன் Chummy Tourer எடிஷன் இந்தியாவில் மொத்தமே மூன்றுதான் உள்ளன. அந்த மூன்றில் ஒன்றுதான் அங்கு இருந்தது. ஆஸ்டின் சோமர்செட் பச்சை நிற காரும் அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு நீல நிற சிட்ரான் காரும் கூட இருந்தன.

செவர்லே டீலக்ஸ் வேகன் மற்றும் ப்ளே மவுத் கார்கள்தான் அந்தக் கால இன்னோவா போல!  தங்களுக்குள் 8 பேரைத் தாங்கிக் கொள்ளுமளவு இடவசதி கொண்டிருந்தன. ஆஸ்டின் சோமர்செட், வாக்ஸ்ஹால் கார்களின் முன்பக்கம் செம அழகு என்று நினைத்தால் மோரிஸ் கார்கள் பின்பக்கம் அசரடித்தன.

``தம்மாதூண்டு ஆங்கர்தான் பெரிய கப்பலையே நிறுத்தும்" என்று அங்கிருந்த நீல நிற பீட்டிலைப் பார்த்தபோது ஞாபகம் வந்தது. பின்பக்க இன்ஜின்கொண்ட இந்த பீட்டிலை பார்க்க அவ்வளவு கூட்டம்! 1964-ம் ஆண்டைச் சேர்ந்த இந்தக் `குட்டி பயலுக்கு’ ஹார்ட்டுகள் குவிந்தன. எல்லாமே வெளிநாட்டு கார்கள்தானே என்று யோசித்தபோதுதான் பார்த்தேன்... `இந்தியாவுக்காக நாங்களும் இருக்கோம்’ என்று நின்றிருந்தன இந்தியத் தயாரிப்புகளான ஸ்டாண்டர்டு ஹெரால்டு 5 மற்றும் ஸ்டாண்டர்டு பென்னட் கார்கள். 1942-ம் ஆண்டு உற்பத்தியான Ford Army Jeep போர்களுக்கான சாட்சியாக நின்றிருந்தது. Willys low bonnet ஜீப் மக்களின் செல்ஃபி தோஸ்துகள்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த `1956 Dodge Kings Way’ தன் உடலை நீட்டி நின்றிருந்தது. இப்போதும் பல கார்களில் டிரம் பிரேக்குதான். ஆனால், அப்போதே 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் ப்ரேக் கொடுத்திருக்கிறார்கள். மெர்சிடீஸ் பென்ஸ், ஹிந்துஸ்தான் லேண்ட் மாஸ்டர், அம்பாஸிடர் என எல்லாமும் நிற்க நாமும் 20 ஆம் நூற்றாண்டுக்குச் சென்று திரும்பினோம். சிங்கிள் சிங்கமாக லம்பெர்ட்டோ ஆட்டோ (1961) ஒன்றும் அங்கு நின்றிருந்தது. RE, யெஸ்டி, ராஜ்டூட், மோஃபா, வெஸ்பா, ஆம்பி என நம் ஊர் மைனர்களுக்குப் பிடித்த மோட்டார் பைக்குகள் தோரணையாக ஜொலித்தன.

இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மூன் ஸ்டார் லெட்சுமணன் நம்மிடம் பேசினார். ``பழைமையை விரும்பும் நகரமான காரைக்குடியில் ஒளிந்து கிடக்கும் பழைய நினைவுகளை கார்களின் மூலம் கொண்டு வர விரும்பினோம். என்னுடைய தாத்தாவின் காரைத் தேடிப்போகும்போது இந்தப் பயணம் ஆரம்பமானது. கேரளாவில் இருந்த அந்த காரை மீட்க முடியவில்லை. மோரிஸ் மைனர் வாங்கிய பிறகு, ஊட்டி கார் கண்காட்சியில் கலந்துகொண்டேன். அங்குக் கிடைத்த அறிமுகம்தான் இந்தக் கண்காட்சிக்கான ஐடியாவைக் கொடுத்தது. இது எங்களுக்கு இரண்டாவது வருடம்" என்றார்.

இது வெறும் கார்கள் இல்லை. வரலாறு. கண்காட்சி முடிந்து வந்ததும் ஒரு வின்டேஜ் கார் பிடித்து, வரலாற்றைத் தேடவேண்டும் போல இருந்தது.

அடுத்த கட்டுரைக்கு