Published:Updated:

எளிமையின் ரூபம் கொண்ட இயேசு பிரான்- `சுக்கா'த்தில் பிறந்த தேவன்..! #Christmas #Vikatan360

மேலை நாட்டுக் கிறிஸ்தவ ஆய்வாளர்கள் சுக்காத் பண்டிகைக்கும் கிறிஸ்துவின் பிறப்பு நாளுக்குமான தொடர்பு குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகின்றனர். வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில காலக் குறியீடுகளைக் கொண்டு கிறிஸ்துவின் பிறப்பு நாள் `சுக்காத்' பண்டிகையின் முதல் நாளில் பிறந்திருக்கலாம் என்று கணிக்கின்றனர்

எளிமையின் ரூபம் கொண்ட இயேசு பிரான்- `சுக்கா'த்தில் பிறந்த தேவன்..! #Christmas #Vikatan360
எளிமையின் ரூபம் கொண்ட இயேசு பிரான்- `சுக்கா'த்தில் பிறந்த தேவன்..! #Christmas #Vikatan360

டிசம்பர் 25 நெருங்கிவிட்டது. இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வந்தேவிட்டது. வீடுகள் எல்லாம் ஒளிமயமாகின்றன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தேவனின் பிறப்பை அறிவிக்கும் நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன. மின்னொளியில் கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவுகளில் தேவனின் பிறப்பைப் பாடும் ஊழியர்களின் குழுக்கள், கைகளில் பரிசுகளுடன் மகிழ்வைக் கொண்டுவரும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் என மக்கள் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். கூடவே வீடுதோறும் இயேசு கிறிஸ்து பிறந்த எளிமையின் அடையாளமான குடில்கள்.

எளிமையின் ரூபம் கொண்ட இயேசு பிரான்- `சுக்கா'த்தில் பிறந்த தேவன்..! #Christmas #Vikatan360

சிறுவயதில் குடில்கள் அமைப்பதில்தான் பெரும் சிரத்தை இருக்கும். வைக்கோல்கள், சிறு சிறு குச்சிகளைக் கொண்டு செய்யப்பட்ட குடில்கள். அதில் ஜோசப், மரியாள் மற்றும் சிலர், ஓரிரு ஆடுமாடுகள், தேவனைக் காண நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கும் கீழை தேசத்து ஞானிகள், அவர்களின் நடுவே பூஞ்சிரிப்புடன் படுத்திருக்கும் சின்னஞ்சிறு குழந்தையாக இயேசு என அழகும் வேலைப்பாடும் அமைந்த சின்னச் சின்ன சொரூபங்களாகக் காட்சியளிப்பர். அந்தக் குடில்கள் சிறியதாக எளிமையானதாக அமைந்திருந்தாலும், காண்பவர்களின் கண்களில் அந்தக் காட்சி அத்தனை பெரிதாக விரியும். சொல்லப்போனால் ஒரு கணம் தேவனின் சந்நிதானத்தில் நிற்பதுபோன்ற உணர்வைக் காண்பவர்களுக்கு ஏற்படுத்தும். குழந்தைகள் அந்தக் குடிலைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடுவார்கள். பெரியவர்கள் போகும்போதும் வரும்போதும் `சர்வேஸ்வரனுக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லிப் போவார்கள். ஒருவகையில் கிறிஸ்துமஸ், குடில்களின் பண்டிகை என்று சொல்லலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏன் குடில் அமைக்கிறோம்... வீட்டுக்கு வீடு நட்சத்திரங்கள் ஏன் ஒளிர்கின்றன..? கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் வீடுதேடி வந்து பரிசு தருகிறார்...? கீழே உள்ள ஸ்லைடு ஷோவை கிளிக் செய்து எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேடலாம்! 

யூதர்களின் வரலாற்றில் குடில்களின் பண்டிகை என்பது ஒரு குறிப்பிட்ட அடையாளம். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் குடில்களின் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அதற்கு `சுக்காத்' (sukkot) என்று பெயர். அடிமையாக இருந்த இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்தை நோக்கி தேவன் வழி நடத்தினார். வழி நடத்திய நாள்களில் அவர்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். பின்பு அவர்கள் வளமான நிலத்தை அடைந்த பின்பு தேவன் அவர்கள் அனுசரிக்கவேண்டிய ஆசாரங்களையும் பண்டிகைகளையும் குறித்துப் பேசினார். லேவியர் ஆகமத்தில் மோசேயிடம் இறைவன் `ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாள்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். நீங்கள் ஏழு நாள்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!' என்று (லேவியராகமம் 23 : 41- 43) கட்டளையிட்டார். ஒவ்வோர் ஆண்டும் இஸ்ரவேலரின் ஏழாவது மாதமான திஸ்ரி மாதத்தில் 15-வது நாளில் இது தொடங்கும்.  (தற்போதைய காலத்தில் செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் இரண்டு வாரங்களில் வரும்) இந்த ஒருவாரகாலமும் அவர்கள் ஊருக்கு வெளியே தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்க வேண்டும். அதுவும் காட்டுப்புற்களாலும், மூங்கிலாலும், இலை தழைகளாலுமே செய்யப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இலக்கியங்கள் இயேசுப்பிரான் பற்றி என்னவெல்லாம் பாடுகின்றன... கீழேயுள்ள ஆடியோவை க்ளிக் செய்து கேளுங்கள்!

மேலை நாட்டுக் கிறிஸ்தவ ஆய்வாளர்கள் சுக்காத் பண்டிகைக்கும் கிறிஸ்துவின் பிறப்பு நாளுக்குமான தொடர்பு குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகின்றனர். வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில காலக் குறியீடுகளைக் கொண்டு கிறிஸ்துவின் பிறப்பு நாள் `சுக்காத்' பண்டிகையின் முதல் நாளில் பிறந்திருக்கலாம் என்று கணிக்கின்றனர். யோவான் ஸ்நானகனின் தந்தையாகிய சகாரியா தேவாலயத்தில் ஒரு தொழுகை நாளில் தேவ தூதனைக் கண்டார் என்று சொல்லப்படுகிறது. அந்நாள் ஏறக்குறைய சிவான் மாதத்தின் மத்தியில் அமைந்த தொழுகை நாள் என்று கணக்கிடுகிறார்கள். சகாரியா தேவதூதன் சொன்னவற்றை விசுவாசிக்காததால் தேவதூதன் அவரை `அவன் சொன்னது நிகழுமட்டும் ஊமையாய் இருக்கக் கடவாய்' என்று சொல்லிவிடுகிறான். சகாரியாவின் மனைவியாகிய எலிசெபெத் கர்ப்பவதியாகி ஆறாம் மாதம் வரை அதை வெளியே சொல்லாமல் இருந்தாள். மரியாளைச் சந்தித்தபோது எலிசபெத் ஆறுமாத கர்ப்பமாக இருந்தாள் என்று வேதம் சொல்கிறது. (லூக்கா 1 : 26). இது கிஸ்லேவ் மாதமாக இருக்கக்கூடும். 

எளிமையின் ரூபம் கொண்ட இயேசு பிரான்- `சுக்கா'த்தில் பிறந்த தேவன்..! #Christmas #Vikatan360

மரியாள் அதன்பின் தேவகிருபையால் கருத்தரித்தாள். ஆய்வாளர்களின் கணக்குப்படி, யெகோவாவின் வருகையை அறிவிக்கும் புனித யோவானின் பிறப்பு முதல் மாதமான நிசான் மாதத்தின் நடுவே ஒரு நாளில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தேவன் இயேசு அவருக்கு ஆறுமாதங்கள் பின்பாகப் பிறந்தவர் என்பதால் அவர் திஸ்ரி மாதத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். திஸ்ரி மாதத்தில்தான் `சுக்காத்' பண்டிகை கொண்டாடப்படுகிறது. குடியுரிமை கணக்கெடுப்புக்காக ஜெருசலேம் வந்துகொண்டிருந்த யோசேப்பும், நிறைமாத கர்ப்பிணியான கன்னிமரியும் தஞ்சமடைந்தது பெத்லகேமில் அமைக்கப்பட்டிருந்த `சுக்காத்' பண்டிகைக்காக அமைக்கப்பட்ட  தற்காலிகக் குடில் ஒன்றில்தான் என்கிறார்கள். அதன்பின் எட்டாம் நாள் இயேசு பெற்றோரால் ஆலயத்துக்குக் கொண்டு சொல்லப்பட்டு அவருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்ட செய்தியும் வேதத்தில் காணப்படுகிறது. 

இன்றுவரை உலகெங்கும் உள்ள யூதர்கள் இந்த `சுக்காத்' பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். `சுக்காத்' என்பது கடவுள் செய்த நன்மையை நினைவுகூருவது; தேவன் நமக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வுக்காக நன்றி பாராட்டுவது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் இரண்டு வாரத்தில்தான் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்பை பலநூறு ஆண்டுகளாக `டிசம்பர் 25' என உலகம் முழுமையும் நிர்ணயித்துக்கொண்டாடி வருகிறது. இப்போது நாள்கணக்குகளில் மாறுபாடு இருந்தாலும் இயேசுவின் பிறப்பு நாளில் குடில்கள் அமைத்துக்கொண்டாடும் வழக்கம் மரபில் இணைந்துவிட்டது. 

எது எப்படியோ, தேவன் நினைத்திருந்தால் அரண்மனைகளில் பஞ்சு மெத்தையில் பிறந்திருக்கலாம். ஆனால், அவரோ ஜெருசலேம் புண்ணிய பூமிக்கு அருகிலே பெத்லகேமில் ஓர் எளிய குடிலில் அவதரித்தார். அவரின் எளிமை ரூபத்தைப் போற்றிப் பாடுவதற்காக வீடுகள்தோறும் குடில்கள் அமைப்போம்.

கிறிஸ்துமஸ் பற்றி ஒரு ஜாலி க்விஸ்... விளையாடுங்கள்... நீங்கள் எத்தனை மதிப்பெண் எடுக்கிறீர்கள் பார்க்கலாம்..!

loading...