கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?
பிரீமியம் ஸ்டோரி
News
புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

மீடியா ரேஸ் - டிவிஎஸ்

டிவிஎஸ் மீடியா ரேஸின் முதல் சுற்றை கோவையிலும், இரண்டாவது சுற்றை சென்னையிலும் முடித்துவிட்டு உற்சாகத்தில் இருந்த நேரம். வழக்கமாக ஒன்மேக் மற்றும் நேஷனல் சாம்பியன்ஷிப் மூன்றாவது சுற்று, சென்னையில்தான் நடைபெறும். `இந்த முறை புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டுக்குக் கிளம்பி வாங்க’ என டிவிஎஸ்-ஸில் இருந்து மெயில் வந்தது. 

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

இந்தியாவின் மிகப்பெரிய ரேஸ் சர்க்யூட்டில் ரேஸைப் பார்க்கும் அனுபவம் பலருக்கும் கிடைக்கும். ஆனால், அந்த டிராக்கில் பைக் ஓட்டும் வாய்ப்பு 1000-ல் ஒருவருக்குத்தான் கிடைக்கும். கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் ரேஸ் டிராக்கை அடைய, டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து 2 மணி நேரம் பயணிக்க வேண்டும். யமுனா, ஈஸ்டர்ன் பெரிபெரல் என இரண்டு விரைவுச் சாலைகளுக்கு இடையில் இருந்தது புத் சர்க்யூட். ஃபார்முலா ஒன் போட்டியின் தடங்கள் இன்னும் புத் சர்க்யூட்டில் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

பிட் ஸ்டாப்பில் தலையை மேலே தூக்கிப் பார்த்தால் வேல்டரி போட்டாஸ், வில்லியம்ஸ் F1, பாஸ்டர் மல்டோனாடோ, சஹாரா ஃபோர்ஸ் இந்தியா, மெர்சிடீஸ் ஏஎம்ஜி பெட்ரோனால் என பிட் ஸ்டாப் போர்டுகள் அப்படியே இருந்தன. சில போர்டுகளை எடுத்துவிட்டு டிவிஎஸ் ரேஸிங், ஹோண்டா Ten10 ரேஸிங், ஏமியோ கப் போன்ற போர்டுகள் புதுவரவாக பளிச்சிட்டன. 5.125 கி.மீ தூரம்கொண்ட இந்த ரேஸ் டிராக்கை அதிக வேகத்தில் கடந்தவர் ஹாட்ரிக் ஃபார்முலா 1 வேர்ல்டு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல். வெறும் 1:27.249 நிமிடத்தில் கடந்திருக்கிறார். இதே டிராக்கை அப்பாச்சி 200 பைக்கில் கடக்க புரொஃபஷனல் ரேஸர்களுக்கு 2.50.515 நிமிடமும், மீடியா ரேஸர்களுக்கு 2.59.722 நிமிடமும் தேவைப் பட்டது. இதை அப்பாச்சி RR310 பைக்கில் கடக்க 2.28.712 நிமிடம் மட்டுமே ஆனது. 

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

மெட்ராஸ் ரேஸ் டிராக்கைவிட அகலமானது புத் சர்க்யூட். பார்க்க சுலபமாக ஓவர்டேக் செய்துவிடலாம் என இருந்தது. ஆனால், பிராக்டிஸ் லேப்பின்போதே டிராக்கின் எல்லா எதிர்பார்ப்புகளையும் அடித்து நொறுக்கிவிட்டது ஹெர்மான் டில்க்கேவின் டிசைன். மாடர்ன் ஃபார்முலா 1 டிராக்குகளின் தந்தை இவர். தற்போது ஃபார்முலா 1 மற்றும் மோட்டோ ஜிபி போட்டியில் இருக்கும் செப்பாங், மெரினா பே, ஸோச்சி, ஆஸ்டின், பஹ்ரெய்ன் போன்ற டிராக்குகளை வடிவமைத்தவர் இவர்.

நான் ஓட்டப்போகும் அப்பாச்சியில் 20.5bhp பவர் மட்டுமே இருக்கிறது. புத் சர்க்யூட்டின் நீளத்தைப் பார்த்தால் அப்பாச்சி 200 நமக்கு போரடித்துவிடுமோ என யோசித்தேன்.

மெட்ராஸ் ரேஸ் டிராக்கைப்போலவே அகலமான கார்னராக இருந்தாலும் முதல் கார்னரில் 3-வது கியரைத் தாண்ட முடியவில்லை. அதற்குமேல் போனால் டிராக்கைவிட்டு வெளியே சென்றுவிடுவோம். மொத்தம் இருப்பது 16 கார்னர்கள். அவற்றில் 7 வலப்பக்க கார்னர், 9 இடப்பக்க கார்னர். இதில் கடினமானவை 3, 4, 10 மற்றும் 16-ம் கார்னர்கள். எல்லாமே நெருக்கமான கார்னர்கள். வேகமாக வந்து அதிக ப்ரஷரில் பிரேக்கைப் பிடித்து கியரைக் குறைத்துத் திருப்ப வேண்டிய கார்னர்கள் இவை. 

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

முதல் கார்னரைக் கடந்ததும் டிராக் கீழ்நோக்கி இறங்குகிறது. 3-வது கார்னரில் 8000rpm வேகத்தில் வரும்போது டிராக் மேடாக ஏறி ஹேர்பின் பெண்டு போடும். 3-வது கியரில் லைட்டாக த்ராட்டில் கொடுத்துத் திரும்பினால்தான் உண்டு. பிறகு 1.06 கி.மீ நேர்பாதை. பைக்கின் டாப் ஸ்பீடை எட்டியவுடன் பிரேக் அடித்து வலதுபக்கம் திரும்ப வேண்டும். இது கொஞ்சம் பெரிய கொண்டை ஊசி என்பதால் கடப்பதற்குச் சுலபமாக இருக்கும். ஆனால், எந்த இடத்தில் பிரேக் அடிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இந்த கார்னரில் வேகமெடுக்க முடியும். சில சிறிய கார்னர்களைக் கடந்தால் பத்தாவது வளைவு. இந்த வளைவுக்கு `பேரபொலா’ என்று பெயர். 215 டிகிரி லூப் இது. பிரேக் தேவைப்படாது. அதனால் என்ட்ரி ஸ்பீடு மிகவும் முக்கியம். 16-வது கார்னரைக் கடந்தவுடன் ஃபினிஷ் லைன் வந்துவிடும். ஆனால், 260 கி.மீ வேகத்தில் வரும் ஃபார்முலா ஒன் கார்கூட 100 கி.மீ வேகத்தில்தான் இந்த வளைவைக் கடக்க முடியும். அவ்வளவு நெருக்கமானது. அப்பாச்சியில் 3-வது கியருக்கு பைக்கை இறக்கி பிரேக், திராட்டில், கிளட்ச் எதுவுமே இல்லாமல் பைக்கைத் திருப்ப வேண்டும். 

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

நாம் சென்றிருந்த அன்று அப்பாச்சி ரேஸுடன் ஹோண்டா CBR250 ரேஸும், ஏமியோ கப் ரேஸும் ஒன்மேக் போட்டிகளும் நடைபெற்றன. கூடவே ஸ்டன்ட் ஷோவும் இருந்தது. RTR200 Novice கேட்டகிரியில் முதல் ரேஸில் கார்த்திக் மடேட்டி, ஆயுஷ் திமான் மற்றும் ஆனந்த் முதல் மூன்று இடங்களை வெல்ல, இரண்டாம் ரேஸில் கார்த்திக் மடேட்டி, ஆனந்த் மற்றும் அனிஷ் சாம்சன் வெற்றிபெற்றார்கள். அப்பாச்சி RR310 முதல் ரேஸில் அமர்நாத் மேனன், தீபக் ரவிகுமார், யஷாஸ் ஆர்.எல் வெற்றி பெற்றார்கள். இரண்டாம் ரேஸில் K.Y.அஹமத், யஷாஸ் ஆர்.எல் மற்றும் விவேக் பிள்ளை வெற்றி பெற்றார்கள்.

புத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா?

ஃபோக்ஸ்வாகன் ஏமியோ கப் 2018-ன் கடைசிச் சுற்றும் இங்கு நடைபெற்றது. முதல் நாள் ரேஸில் பெரிய க்ராஷ் நடந்ததால் ரேஸ் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் த்ருவ் பெல் மற்றும் ப்ரதிக் சோவ்மானே வெற்றி பெற்றார்கள். இரண்டாம் நாள் போட்டியில் ஜீத் ஜபக் முதல் இடத்தில் வெற்றி பெற, இரண்டாம் இடத்தில் ரேஸை முடித்தார் த்ருவ் மோஹித். அன்மோல் சிங் மூன்றாவதாக வந்தார். இந்த சீஸனில் அதிக பாயின்ட்டுகளைப் பெற்று 2018 ஃபோக்ஸ்வாகன் ஏமியோ கப்பை த்ருவ் மோஹித் வென்றார்.

அன்று நடைபெற்ற போட்டிகளில் முதல் இடம் வென்றவர்களுக்கு 50,000 ரூபாய், இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு 40,000 ரூபாய், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூபாய் 30,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ரஞ்சித் ரூஸோ