கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஃபோர்டு எண்டேவர் டீசல்

லைப்பிரதேசங்களில் அருவிகள் எங்கேயாவது இருக்கலாம். ஆனால், திரும்பிய பக்கமெல்லாம் அருவிகளாகவே இருந்தால்?! அப்படி ஓர் இடம் கேரள மாநிலம் மறையூரில் இருக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து உடுமலைப்பேட்டை வழியாக மூணார் செல்லும் சாலையில் செக்போஸ்ட் கடந்து, சின்னார் வனச்சரகம் தாண்டி, கேரளாவின் மறையூர் கிராமத்துக்குச் சென்றபோது... அது அருவிச் சத்தத்தில் நனைந்து கொண்டிருந்தது. 

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

 ``அருவில நடுங்கிக்கிட்டே குளிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும் அங்கிள். அப்பா, அம்மா, நான், சித்தி, சித்தப்பா, தம்பி பாரி, தக்‌ஷன் எல்லாரும் அருவியில் குளிக்கப் போறோமா?’’ என்று உற்சாகமானாள் 7 வயது பிரகதி. சரவணச்செல்வனின் ஒரே மகள். ``இத்தனை பேரா?’’ என்றால், ``எங்க கார் பெருசு. காடு பனிக்கட்டிலேலாம் எங்க கார் போகும் தெரியுமா? அப்பா சொல்லியிருக்காரு...’’ என்று பிரகதி மழலியது சரிதான். பிரகதியிடம் இருப்பது ஃபோர்டு எண்டேவர் 4 வீல் டிரைவ். புகைப்பட நிபுணர் சகிதமாக பெரிய கும்பலை ஏற்றிக் கொண்டு  இந்த எண்டேவரில்தான் காடு, மலைகள் கடந்து மறையூருக்கு ஓர் அற்புத ட்ரிப் அடித்தோம்.

* பொள்ளாச்சி வழியே வெஜ் பார்ட்டிகளுக்கு அருமையான சாய்ஸ் உண்டு. திருநெல்வேலிக்காரர் நடத்தும் `அமுதசுரபி’ என்றோர் உணவகம். பெரிய ஹோட்டல்களுக்கு இணையாக என்ட்ரன்ஸே மிரட்டுகிறது. ஆனால், விலை மீடியம் ரகம்தான். `சோறு முக்கியம் பாஸ்’ டீம் கவனிக்க!

* ஹைவேஸில் பர்ஃபாமென்ஸ் செடான் மாதிரி அசத்தியது எண்டேவர். 8 பேரை ஏற்றிக்கொண்டு போகிறோம் என்கிற உணர்வே தெரியாமல், 160 கி.மீ-ல் ஆடாமல் அசையாமல் பறந்தது. சும்மாவா... 3,200 சிசி, 197 bhp பவர் ஆச்சே!

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

* `எப்போப்பா பாறையில ஏறுவோம்... எப்போ மங்கி பார்ப்போம்’ என்று கேட்டுக் கொண்டே வந்தனர் பிரகதியும் பாரியும். ஆனால், ஏன்டா மலைச்சாலை வந்தது என்று நொந்துபோனோம். `காட் ரோடு’ ஆரம்பித்திலிருந்து பர்ஸை உள்ளே வைக்கவே விடவில்லை அதிகாரிகள். தமிழ்நாட்டில் ஆரம்பித்து கேரள செக்போஸ்ட் வரை ஒவ்வொன்றிலும் 50, 100 என சமமாக வசூலித்தார்கள். ரசீது கேட்டதற்கு, ``இவ்வளவு பெரிய கார் வெச்சிருக்கீங்க... இந்த டீக்காசு கொடுக்கிறதுலயா குறைஞ்சுபோயிடுவீங்க’’ என்று தமிழிலும் மலையாளத்திலும் ஒரே மாதிரியாகவே சொன்னார்கள் அதிகாரிகள். (தட் ‘அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்’ மொமென்ட்.)

* ஆரம்பத்தில் சின்னார் வனச்சரகம்தான் திட்டம் தீட்டியிருந்தோம். செக்போஸ்ட்டிலேயே ``சின்னார்ல வேற ஒண்ணும் கிடையாதுங்க.. ட்ரெக்கிங் மட்டும்தான்’’ என்றார் அதிகாரி. ஆனால், ``சின்னார் ட்ரெக்கிங் செமயா இருந்துச்சு. எவ்வளவு அனிமல்ஸ்...’’ என்று புளகாங்கிதப்பட்ட சிலரைப் பார்த்தோம்.

* மலைச்சாலை முழுவதும் `அனிமல் க்ராஸிங்’ ஏரியா என்ற போர்டு மட்டும் இருந்தது. ஆனால், குரங்குகள் மட்டும்தான் குட்ஈவ்னிங் சொல்லின. சன் ரூஃபைத் திறந்துவிட்டு காடு முழுக்க வேடிக்கை பார்த்தபடி, `மங்க்கி ஏன் மரத்துல ஏறுது? எலிஃபென்ட் ஏன் கறுப்பா இருக்கு?, டைகர், லயன்லாம் எங்க சாப்பிடும்? ரோடு ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது?’ என்று கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர் தெய்வத் திருவாண்டுகள்.

* மறையூரிலும் ஒரு செக்போஸ்ட் வந்தது. கண்ணைக் கட்டியது. `இனிமே எங்ககிட்ட காசு இல்லடா... எங்களை விடுங்கடா’ என்று கவுண்டமணிபோல் கத்தணும்போல இருந்தது. ஆனால், மறையூர் செக்போஸ்ட்டில் காசு வாங்கவில்லை. `சும்மாயிட்டு ரெஃப்ரென்ஸ் மட்றுமானு’ என்று கார் நம்பர் மட்டும் நோட் பண்ணிக் கொண்டார்கள். 

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

* `கரிமுட்டி ஃபால்ஸுக்கு எவ்வளவு தூரம் போகணும்?’ என்று கேட்டால், சும்மா கையை நீட்டினார் அதிகாரி. கையெழுத்துப் போட்டுவிட்டு காரில் ஏறி 50 அடி நகர்ந்த போதே அருவிச்சத்தம் சிம்பொனி மீட்டியது. கரிமுட்டி அருவி, எக்கோ டூரிஸம் என்றார்கள். கரிமுட்டி அருவிக்கு ஜனவரி முதல் ஜூலை வரை சீஸன் இல்லை என்றார்கள். பல மூலிகைகளைக் கலந்தடித்துக்கொண்டு விழுவதால், குளித்தால் நோயெல்லாம் பறந்துபோகும் என்றார்கள். அருவி வாசமே நாசியை நிரப்பியது.

* வார நாள்கள் என்பதால், கரிமுட்டியில் முட்டல் மோதல் இல்லாமல் குளித்தார்கள் வாண்டுகள். சின்ன அருவி என்றாலும் அதில் மின்சாரம் எடுத்துக்கொண்டிருந்தது கேரள டூரிஸம். கரிமுட்டி அருவி விழும் விசையிலிருந்து எத்தனையோ வாட்ஸ் கரன்ட் எடுப்பதாகச் சொன்னார்கள். இங்கே மறையூர் ஹெரிடேஜ் சஃபாரி என்றொரு சுற்றுலா வசதி உண்டு. ஜீப்பில் மறையூரில் இருக்கும் ஸ்பெஷல் ஏரியாக்களுக்கு ரவுண்ட் அடித்துக் காட்டுகிறார்கள். 6 மணி நேரத்துக்கு 6 பேருக்கு 10 இடங்களைச் சுற்றிக் காண்பிப்பதற்கு 2,000 ரூபாய் கட்டணம்.

* ``அய்... ஸ்டார் டார்ட்டாய்ஸ்’’ என்றாள் பிரகதி. ஆம்! நட்சத்திர ஆமை வடிவில் எக்கோ ஷாப் அமைத்திருந்தார்கள். பார்ப்பதற்கே செமயாக இருந்தது. அருவியில் குளித்துவிட்டு கேரள கொடம்புளி, கேரள வெல்லம், நார்ப்பைகள் என வெரைட்டியாக ஷாப்பிங் பண்ண ஆரம்பித்தனர் சரவணச்செல்வன்-சத்தியமூர்த்தி தம்பதியினர்.

* மறையூரில் தங்கும் விடுதிக்குப் போவதற்குள் இரண்டு அருவிகள் க்ராஸ் செய்துவிட்டன. தங்குவதற்கு மறையூரில் எப்போதுமே பிரச்னை இல்லை. எல்லா வீடுகளையும் ஹோம் ஸ்டே கட்டி விட்டிருந்தார்கள். மறையூர் முழுக்க மதியம் 12 மணிதான் செக்-அவுட் நேரம் என்பது மறுநாள்தான் தெரிந்தது. மூணாரிலும் சில ரிசார்ட்டுகளில் அப்படித்தான்.

* மறையூர் 8 மணிக்கெல்லாம் அடங்கி விட்டிருந்தாலும், அருவிகளின் ஆரவாரம் ஓட்டல் வரை கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாள் அருவிச் சத்தத்தோடு, மறையூர் பஸ் நிலையம் தாண்டி புதிதாய் ஒரு வாசம் அடித்தது. வீரப்பனுக்குப் பிடித்த வாசம். ஆம்! சுமார் 65,000 சந்தனமரங்கள் உண்டாம். சந்தனப்பொருள்கள் விற்பனைக் கண்காட்சியும் வைத்திருக்கிறார்கள். 10 மில்லி சுத்தமான சந்தன எண்ணெய் 3,500 விலை என்றார்கள். ஒரு லிட்டர் 3.5 லட்சம். ‘‘இந்தக் காசுக்கு கிட்டத்தட்ட 4,000 லிட்டர் பெட்ரோல் போட்ருவேனே’’ என்று டைமிங்காய் கணக்குச் சொன்னார் சத்தியமூர்த்தி.

* மறையூரில் கற்கால ஸ்பெஷல் ஏரியா ஒன்று உண்டு. டால்மென் கல் வீடுகள். அதாவது, பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அமைத்த கல்மேடை, கற்குகைகள் மறையூரின் பெருமை பேசுகின்றன. இந்தக் குகைகளில் ராமர், சீதா வாழ்ந்ததாக புராணக் கதைகள் உண்டு.

* மூணாறு போவதற்கு 23 கி.மீ-க்கு முன்பாக இருக்கிறது லக்கம் அருவி. காரிலிருந்து இறங்கும்போதே சத்தம் காதை அழகாய் இம்சைபண்ணியது. 20 ரூபாய் டோக்கன். முழங்கால் அளவு தண்ணீரில் நடந்துதான் அருவியை நெருங்க முடியும். ஹோவென்ற பேரிரைச்சலுடன் `பக்கத்துல வாங்க’ எனக் கூப்பிடுகிறது லக்கம் அருவி.

தூரமாக இருக்கும்போதே மனதையும் உடலையும் தூறல் அடித்து நனைத்துவிடுகிறது அருவியின் சாரல். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்கிற ரேஞ்சில் படுசீற்றமாக விழுந்துகொண்டிருந்த லக்கம், எனக்கு மினி அதிரப்பள்ளியைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஆயில் மசாஜ் மட்டும் மிஸ் ஆனது.

* பாதுகாப்புக்காகத் தடுப்பு அரண் போட்டிருந்தார்கள். வாண்டுகளின் அட்டகாசம் லக்கத்திலும் தொடர்ந்தது. காரில் இருந்து கால் வலிக்க பல கி.மீ-க்கு நடந்தால்தான் சில அருவிகளின் தரிசனம் கிடைக்கும். மறையூரில் லக்கம் முதல் எல்லா அருவிகளுமே பக்கத்தில் இருந்து படுத்துவதுதான் ஸ்பெஷல். மூணார் போகும் ஐடியா இருந்தால், லக்கம் பக்கம் ஒரு ட்ரிப் அடிச்சுடுங்க மக்கா!

தமிழ் - படங்கள்: க.தனசேகரன்

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

மூணாருக்குச் செல்லும் வழியில் இருக்கும் மறையூரில் அடிக்கு ஓர் அருவி என்பதால், குளியல் பார்ட்டிகளுக்கு செம தீனிதான். ஆனால், உணவுப் பார்ட்டிகள் இரவு 8.30 மணிக்கு மேல் தீனிக்குத் திண்டாட வேண்டியிருக்கும். இங்கே தங்கும் ஸ்பாட்கள் எக்கச்சக்கம் என்பதால், கவலையே இல்லை.

மறையூரைச் சுற்றிலும் ஜீப் பார்ட்டிகள் நம்மைச் சுற்றி வளைப்பார்கள். ‘80 கி.மீ ட்ரெக்கிங், இரவு காட்டுக்குள் பயணம், எப்படியாவது சிறுத்தையைக் காண்பிச்சுடுவேன்’ என்று உறுதிமொழி கொடுக்கிறார்கள். இரவுப் பயணத்தில் மட்டும் கவனம் தேவை. சிலர் விதிமுறைகளை மீறிச் சென்று மாட்டிக்கொண்ட சம்பவங்கள் உண்டாம்.

எண்டேவர் எப்படி?

ரண்டு வேரியன்ட்களில் (2.8 லி, 3.2 லி) இருக்கிறது எண்டேவர். நாம் போனது 3.2 லி, 4 வீல் டிரைவ். ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 38 லட்சம் ரூபாய் வந்ததாகச் சொன்னார் சரவணச்செல்வன். 7 சீட், சன் ரூஃப், ஜிபிஎஸ், டச் ஸ்க்ரீன், எமர்ஜென்சி என எல்லா வசதிகளும் உண்டு.

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

``ஆனால், குட்டிக்குட்டி கார்களிலேயே பட்டன் ஸ்டார்ட் இருக்க, இத்தனை பெரிய எண்டேவரில் சாவியைத் திருகித்தான் ஸ்டார்ட் பண்ணவேண்டியிருக்கு’’ என்று குறைப்பட்டார் சத்தியமூர்த்தி. பெரிய கார் என்பதால், கேமரா இருந்தாலும் ரிவர்ஸ் எடுக்க அனுபவம் வேண்டும். ஹைவேஸ்களில் எண்டேவரின் பர்ஃபாமென்ஸ் பவர்ஃபுல் செடான்களுக்குப் போட்டிபோடுகிறது. ஹில் டெரெய்ன், ஸ்நோ என்று சில ஆஃப்ரோடு மோடுகள் அற்புதம். ``மைலேஜ் சிங்கிள் டிஜிட்தான்’’ என்றார் சரவணன். எனினும், தடதட காட்டுப்பகுதியோ... பறபற நெடுஞ்சாலையோ... எண்டேவர் இருந்தால் எந்தப் பயமும் இல்லை.

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

தூவானம் அருவி (5 கி.மீ)

தூரத்திலேயே தெரியும் தூவானம் அருவிக்குப் பக்கத்தில் போக, கைடுகள் உதவியுடன் ட்ரெக்கிங் வசதி உண்டு. செல்லும் வழியில் விலங்குகள் பார்க்கலாம்.

மூணார் (39 கி.மீ)

அருமையான மலைப் பிரதேசம். போட்டிங், ட்ரெக்கிங், ஜில் க்ளைமேட் என எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.

சின்னார் வனச்சரகம் (9 கி.மீ)

கேரள அரசாங்கமே சின்னார் வனச்சரகத்தில் ட்ரெக்கிங் வசதி செய்து தருகிறது. காட்டுக்குள் ஜீப் ட்ரெக்கிங் மூலம் எல்லா விலங்குகளையும் பார்க்கலாம்.

சந்தனக்காடு (2 கி.மீ)

கிட்டத்தட்ட 65,000 சந்தனமரங்கள் இருக்கும் ஏரியா. சந்தன வாசத்தோடு திரும்பி வரலாம்.

டால்மென் முனியரா (5 கி.மீ)

ராமர், சீதா வாழ்ந்த இடம் என்கிறார்கள். கற்கால கல்வீடுகள், கற்குகைகள் பார்க்கலாம்.

காந்தலூர் (14 கி.மீ)

இங்கேதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்த் தோட்டம் உண்டு. காந்தலூரில் ஜீப் ட்ரெக்கிங் வசதியும் உண்டு. ஏகப்பட்ட வியூ பாயின்ட்கள் மூலம் கேரளாவின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.

ராஜமலை (22 கி.மீ)


வரையாடுகள் வதவதவெனத் திரியும் இந்த இடம், ட்ரெக்கிங் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏகப்பட்ட டீ எஸ்டேட்களும், வியூ பாயின்ட்களும் உண்டு.

எரவிக்குளம் நேஷனல் பார்க் (36 கி.மீ)

காட்டுக்குள் சஃபாரி போகலாம். இங்கு வரையாடுகளோடு ஏகப்பட்ட விலங்குகளையும் பார்க்கலாம்.

கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!