
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 11 - தொடர்
இந்த நாளின் எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் புராடெக்ட்களால்... அதாவது தயாரிப்புகளால், பொருட்களால் நிறைந்திருக்கிறது. காலை முதல் மாலை வரை வாழ்வின் தேவைகள் அனைத்துக்கும் பொருட்கள் தேவை. மனித சமூகத்தின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சாமானியனின் வாழ்க்கையை எளிமையாக்கி, உலகின் தவிர்க்க முடியாத சில பொருட்கள் உள்ளன.

ஒரு வடிவமைப்பாளராக நான் பார்த்து வியக்கும் படைப்புரு (design) தீப்பெட்டிதான். சிறுவயது முதலே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் சாதனம் அது. படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு பற்றிய கற்றல், கற்பித்தல், சிந்தித்தல் (Design education, Design teaching and Design thinking) ஆகிய முக்கிய டிசைன் செயல்பாடுகளுக்கு, இந்தச் சிறிய தீப்பெட்டியை மையமாக நிறுத்தினால் மிகப் பொருத்தமாக இருக்கும். வடிவமைப்பின் நீள அகல மூலக் கூறுகளைப் புரிந்து கொள்ள இந்த ஒரு புராடெக்டை விவாதித்தால் போதும்.
அதனால்தான் இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே இதைத் தொட்டுக் காட்டியிருக்கிறேன். பல்வேறு அளவுகளில் நம் கைகளில் வந்து சேரும் நெருப்புப் பெட்டி, கைக்கு அடக்கமானது என்பதில் மாறுபாடு உண்டா? 18 செமீ நீளமும், 11 செமீ அகலமும் 7 செமீ உயரமும் உடைய தீப்பெட்டி, பார்க்கவும் பயன்படுத்தவும் வசதியானது. இந்த அளவுகள் ஒன்றோடு ஒன்று தங்க விகிதத்தில் இருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது?

பேக்கேஜ் டிசைனுக்குச் (Package design) சிறந்த எடுத்துக்காட்டு தீப்பெட்டி. விரலால் ஒருபக்கம் அழுத்தினால், மறுபுறம் மேஜை டிராயரைப் போல் வெளிவரும் உள்பெட்டியிலிருந்து எட்டிப் பார்க்கும் வரிசையான தீக்குச்சிகள். சிவந்த தலையும் வெளிர் மஞ்சள் உடலும் கொண்ட குச்சிகள். இதன் கலர் ஹார்மோனியஸ் கவர்ச்சியால், குழந்தைகள் இவற்றைக் கொண்டு விளையாடவும் தயங்குவதில்லை. மேல் பெட்டியின் ஓரங்களில் 40 சதவீதம் பொட்டாஷியம் குளோரைடால் ஆன தலை. வெளிப்பெட்டியின் ஓரங்களில் பூசப்பட்டிருக்கும் சிவப்பு பாஸ்பரசில் உரசினால்தான் தீப்பிடிக்கும். பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வகையில் சில மில்லி கிராம் வேதிப்பொருட்களே கொண்ட தலை. ஆங்கிலத்தில் இதை safety matches என்றே குறிப்பிடுகின்றனர். சில விநாடிகளே எரியும் குச்சிகள்தான் என்றாலும் விரல்களைச் சுடாத நீளம். மிக மிக எளிதான வடிவம். அதனினும் எளிதான உற்பத்தி முறை. மிகச்சிறிய யூனிட்டில் தயாரிக்கலாம் என்ற வசதி. சிறுநிறுவனம் என்றாலும் காலப்போக்கில் பெருநிறுவனமாக வளரும் வாய்ப்பு என்று இதன் பெருமைகளை அடுக்கிக் கொண்டேப் போகலாம். சில சமயம் ஒரே புராடெக்ட்டை பல வேறு பெயர்களில் விற்க வேண்டிய சூழல் நிலை வரலாம். அப்படிப்பட்ட சூழலில் பிராண்டிங்குக்கு நிறைய செலவு செய்ய நேரிடும். ஆனால், தீப்பெட்டியைப் பொறுத்தவரை லேபிளை மாற்றினாலே போதும்.
மிகக் குறைந்த விலை. ஊர் வித்தியாசம் இல்லாமல் எல்லா ஊர்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்; பெட்டி தீர்ந்ததும் மறுபடியும் மறுபடியும் வரும் வாடிக்கையாளர்; பெட்டி பெட்டியாக அடுக்கித் தூக்கிச் செல்லலாம்; எடை குறைவான மூலப்பொருட்கள்; டிரான்ஸ்போர்ட் செய்யப் பொருத்தமான வடிவம், அளவு மற்றும் எடை; மெல்லக் குலுக்கினால் வரும் சத்தம், உள்ளிருக்கும் குச்சிகளின் எண்ணிக்கையை உணர்த்தும். இந்தச் சத்தம் உணர்த்தும் ஒலியை Audible display என்பார்கள்.

சில வடிவமைப்பு உத்திகளில் இது மிக அவசியமானது. கார்களின் கதவுகளைச் சார்த்தும்போது அதன் சத்தத்தைக் கொண்டே சரியாக மூடினோமா என்று உணர்கிறோம். அதைப் போலவே பல கார் நிறுவனங்கள் தங்கள் கார் கதவு மூடும் ஓசையைப் பிரத்யேகமாக டிசைன் செய்கின்றன. ஆக, இந்தச் சிறிய பெட்டிக்குள் இன்னும் நிறைய இருக்கிறது. சிந்திக்க மட்டுமல்ல; சமைக்க, விளக்கேற்ற, புகைக்க என தீப்பெட்டிக்கு நிறைய பயன்பாடுகள் உண்டு. தேச எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த மனிதச் சமூகத்திற்கும் மாபெரும் பங்களிப்பை இச்சிறு பெட்டி தந்திருக்கிறது. ஆனால், எப்பொழுது எங்கிருந்து நமக்கு வந்தது?
தற்போது நாம் பயன்படுத்தும் Safety matches-ன் வரலாற்றில் தெளிவில்லை. தோராயமாக 1840- 1850களில் இப்போதுள்ள கான்செப்ட் ஸ்வீடனில் தலைகாட்டியது. அதற்குச் சற்று முன்பாக பிரான்ஸில் வெள்ளை பாஸ்பரஸ் பயன்பாட்டில் இருந்தது. உரசாமலேயே பற்றிக் கொண்டதால் அதற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பில்லை. இந்தியாவுக்கு மரத்தினாலான தீப்பெட்டிகள் 1910-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலில் கல்கத்தாவில் புழக்கத்துக்கு வந்தன. அந்நாட்களில் பிழைப்புக்காக ஜப்பானிலிருந்து கல்கத்தா வந்த சிலர், குடும்பத் தொழிலாக தீப்பெட்டிகளை வீடுகளில் வைத்துத் தயாரித்தனர்.
இது அந்நாளில் ஹிட் புராஜக்ட் ஆனது. வெள்ளைக்காரர்களும், மேல்தட்டு வர்த்தகர்களும் ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தீப்பெட்டிகள் இறக்குமதி செய்தனர். முதல் உலகப்போருக்குப் பின் இறக்குமதி நிறுத்தப்பட்டு, நம்நாட்டிலேயே தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. Wimco என்னும் ஸ்விஸ் கம்பெனி பெரிய அளவில் சென்னையில் தீப்பெட்டிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. 1923-ல் திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து புறப்பட்டு கல்கத்தா சென்ற இருவர், அங்கிருந்த பூரண சந்திர ராயிடம் தீப்பெட்டி தயாரிக்கும் ஜெர்மன் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு வந்து, வறண்ட பகுதிகளான சிவகாசி போன்ற இடங்களில் சிறு சிறு யூனிட்டுகளாகத் தீப்பெட்டி உற்பத்தியைத் தொடங்கினர்.
1932-ல் இயந்திரமயமானது இந்தத் தொழில். இன்று நாட்டின் 67 சதவிகிதம் தீப்பெட்டி உற்பத்தி தமிழகத்திலிருந்துதான். இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். தவிர்க்க முடியாத ஒரு வணிக வரலாறாக இருந்து வரும் தீப்பெட்டியை, புராடெக்ட் டிசைன் என்று பார்க்கும்போது இந்தத் தீப்பெட்டி எத்தனை பெரிய தேவையை எளிதாக்கியிருக்கிறது என்பது புரியும்.

நெருப்பை மூட்டுவது என்பதை ‘தீப்பெட்டி வருவதற்கு முன்’ , ‘தீப்பெட்டி வந்ததற்குப் பின்’ என்று இரண்டாகப் பிரித்து விடலாம். 5-ம் நூற்றாண்டில் சீனாவில் நெருப்பு ஏற்படுத்தும் அடிமைகள் இருந்தனர்.
கைப்பிடியோடு கூடிய இரும்புப் பட்டைகளைக் கற்களில் பலமாக உரசி, தீப்பொறிகளைக் கிளப்பினர் ஐரோப்பியர் கள். சுழலும் வில் மற்றும் அம்பு கொண்டு வேகமான சுழற்சியில் உருவாகும் வெப்பத்தால் தீ உருவாக்கப்பட்டது. கண்ணாடிக் கற்களை ஒருவிதமாய்ப் பட்டை தீட்டி லென்ஸ்களைப் போல் சூரிய ஒளியில் காட்டி, குவியத்தில் ஏற்படும் வெப்பத்தால் இலைச் சருகுகளைப் புகைக்க வைத்து ஊதி ஊதி நெருப்பாக்கினர். இப்படியெல்லாம் நெருப்பை உண்டு செய்து, வீட்டில் பெண்களால் சமைக்கவோ, விளக்கேற்றவோ முடியுமா?
கோயில்களில் நந்தா விளக்குகள் இரவு பகலாகத் தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தன. தீப்பந்தங்கள் தெருக்களில் எரிந்தன. ஆனால், தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மக்களுக்கு நெருப்பு கிடைக்கவில்லை. பகல் முழுதும் உழைத்துச் சேர்த்த தானியத்தைச் சமைக்க, அடுப்புக்கு நெருப்பு இரவல் கேட்டு மக்கள் வீட்டுக்கு வீடு செல்லும் வழக்கமிருந்தது. விளக்கு வைத்த பின் எதையுமே இரவல் தரக் கூடாதென்ற நம்பிக்கைகள் வேறு. நான்கூட என் சிறுவயதில் நெருப்பை இரவல் வாங்கிச் செல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறிதளவு வரகு வைக்கோலை கூரையிலிருந்து பிடுங்கி, வளைத்து கிண்ணம் போல் செய்து எடுத்துக் கொண்டு வருவர். எரியும் அடுப்பிலிருக்கும் ஒரு சிறிய துண்டுக் கரியை ‘கங்கு’ எனக் குறிப்பிடுவர். கங்குவை வைக்கோலாலான கரண்டி போன்ற குழிவில் எடுத்துப் போட்டுக்கொண்டு நெருப்பு அணைந்து விடுவதற்குள் ஓடி அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். அதேநேரம் வைக்கோலும் எரிந்து, கையும் சுட்டு, கீழேயும் விழுந்து விடக்கூடாது. இப்படி மிக மிக கடினமான, ஆபத்தான முறைகளில் நெருப்பைக் கையாளும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது.
User research என்பது ஒரு வடிவமைப்பாளனுக்கு ஆரம்ப அடிப்படை ஆதாரம். பயனாளரைப் பற்றிய ஆராய்ச்சியும் சம்பந்தப்பட்ட பொருளின் வரலாறும் Problem statementக்கு மிக அவசியம். Senario building என்பது design process-ல் ஒரு முக்கிய அங்கம். மேற்கண்ட User research, Problem statement மற்றும் Senario ஆகியவற்றைத்தான் தீப்பெட்டி வாயிலாக நாம் புரிந்து கொண்டோம். தீப்பெட்டி என்னும் இந்த எளிய படைப்புரு, தீப்பற்ற வைக்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை வெகு சுலபமான, பாதுகாப்பான, விரைவான, சிக்கனமான, ரசிக்கும்படி கவர்ச்சியான செயலாக மாற்றிவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் திரைப்படங்களில் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைப்பதைப் பார்த்துப் பரவசமானோம். வடிவமைப்பின் நோக்கம் இதுதான். சிக்கல்களான கடின வேலையை ஒரு ரசிக்கத்தக்க அனுபவமாக மாற்றிவிடும் ஆற்றலே வடிவமைப்பு. அந்த அனுபவம் நிரம்ப புரிதலையும் (understanding the context), எளிதான பகிர்தலையும் (communication friendly) உடையதாயின் ஒப்பற்ற வடிவமைப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வர். அத்தோடு, குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிந்தால் அது மிகப் பெரிய வர்த்தகமாகவும் மாறிவிடும்.
‘இன்று புதிதாக இருப்பது நாளை பழையதாகும்’ - இப்படி யோசித்ததால்தான் கறுப்பு வெள்ளை டிவி, கலரானது. அதுவே பிறகு Flat TV ஆனது. அதுவும் பழதாகி LCD TV வந்தது. அதுவும் மறைந்து LED, 3D, OLED என்று டிவி மாறிக்கொண்டே இருக்கிறது.
இப்படி சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எளிய படைப்புருக்கள் ஏராளம். அவற்றில் தீப்பெட்டியை இன்றும் நான் வியந்து கொண்டிருக்கிறேன்.
- வடிவமைப்போம்
க.சத்தியசீலன்